பந்தலூர், நவ.9- பந்தலூரைச் சேர்ந்த தோட்ட தொழிலாளியின் மகன், ஆராய்ச்சி துறையில், 4-ஆம் முறையாக உலக அளவில் சிறந்த அறிவியலாளர் (விஞ்ஞானி) பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
பந்தலூர் அருகே, அத்திக் குன்னா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து, இவரது மகன் அசோக்குமார் சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் இயற்கை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு உயிரி எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில், 70 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, 6 ஆயிரம் அறிவியல் மேற்கோள்களைப் பெற்றார். அதேபோல், 2024ஆம் ஆண்டு மாற்று ஆற்றல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து, 85 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, 7,600 மேற்கோள்களையும், 2025ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உயிரி சிதைவுறும் பிளாஸ்டிக் துறைகளில், 110 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து, 8,500 மேற்கோள்களை எட்டினார். நடப்பு ஆண்டு கழிவுகளை விற்பனைப் பொருட்களாக மாற்றுதல், பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல், கழிவு மேலாண்மை, உயிரி ஆற்றல் மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில், 120 கட்டுரைகளை சமர்ப்பித்து, 10,155 மேற்கோள்களை எட்டி சாதித்தார்.
இவரது ஆராய்ச்சித் திறனைப் பாராட்டி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், நெதர்லாந்தை சேர்ந்த எல்சேவியர் பதிப்பக நிறுவனம் இணைந்து, 4-ஆம் முறையாக, உலகின் சிறந்த அறிவியலாளர் என்ற விருதை வழங்கிப் பாராட்டியுள்ளன.
இவரது ஆய்வுத் தரவுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மேற்கோள் தரவுகளை வைத்தும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
எஸ்டேட் தொழிலாளியின் மகன், தொடர்ச்சியாக, நான்கு முறை உலகின் சிறந்த அறிவியலாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், அசோக்குமார் மற்றும் அவரின் பெற்றோருக்கு தோட்டத் தொழிலாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
