நோயற்ற வாழ்வுக்கு உடல் உறுதியே வழி!

5 Min Read
- Advertisement -

மருத்துவம்

மருத்துவர்
க.பிரசன்ன வெங்கடேஷ்
துணை அறுவை சிகிச்சை மருத்துவர்
திருமயம் அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம்.

மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு உறுதியான வேலை, குடும்பம், நண்பர்களை விட மிக முக்கியமான ஒன்று உறுதியான உடல். உடல் உறுதியாக இருந்தால் மனமும் அதன்பால் உறுதியாக இருக்கும். இது எவ்வாறென்று ஒரு சாமானியனாகவும் மருத்துவராகவும் நான் உங்களுடன் என் கட்டுரையில் பயணிக்கப் போகிறேன்.

இக்கால கட்டத்தில் நாம் அனைவரும் நம்மை அறியாமல் நம் உடலை வருத்தாமல் சொகுசான வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எளிதாகக் கூற வேண்டுமென்றால், முன்பெல்லாம் கடைக்குப் பொருள் வாங்க செல்வோம் என்றால் நம் குடும்பத்தோடோ இல்லை நண்பர்களோடோ பேசிக்கொண்டு ஒரு சிறு பயணமாக நடந்து செல்வோம். ஆனால் இப்பொழுதோ வீட்டிலிருந்து எத்தனை அடிகளில் கடை உள்ளது என்பதை விட எத்தனை நொடிகளில் பொருட்கள் நம் வீட்டை தேடி வரும் என்பதை கணக்கில் கொண்டு நடப்பதை நாம் மறந்துவிட்டோம்.

ஒரு வேலையை செய்ய கைகளையும், கால்களையும் அசைக்க மறந்த மக்கள், காண்பதையெல்லாம் அசைப்போட வாயை அசைக்க மறக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ‘யம்மி, யம்மி’  (yummy yummy) என்று கூறி நம் ஆயுளை ‘கம்மி, கம்மி’ ஆக்குகிறார்கள்.

நம் முன்னோர்கள் உடல் உறுதியுடன் இருந்ததற்கு சீரான மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து கொண்டிருந்த உணவு முறையே காரணமாகும். தீபாவளி, பொங்கலுக்கு இருந்த இட்லி, தோசை அன்றாட உணவாக உட்கொள்கிறோம். இன்று அதிக அளவில் உண்ணப்படும் பதப்படுத்த உணவுகளில் மாவுச்சத்து மிகுதியாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் (Fibre rich foods) உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்கும். இந்த உணவு முறையின் மாற்றத்தால் உடல் உறுதி முக்கியமாக பேசப்பட வேண்டியுள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் தசை இழப்பு, எலும்பு அடர்த்தி குறைவும், எலும்புத் தேய்மானமும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இதனைத் தவிர்க்க அவர்கள் சிறுவயதில் உடற்பயிற்சியும் சரியான உணவு முறையும் பின்பற்ற வேண்டும். மக்களிடையே உடல் உறுதியை பின்பற்றத் தடையாய்  உள்ள சில தவறான கருத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

உடற்பயிற்சியினால் மாரடைப்பு
(Heart attack) வருமா?

முறையான பயிற்சி பெற்ற ஒருவரின் கண்காணிப்பில் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வராது. ஆரம்பக் கட்டத்திலேயே தீவிரமாக உடற்பயிற்சி செய்யாமல் படிப்படியாக செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்தால் உயரம் குறையுமா?

இல்லை, இது தவறான கருத்து. உடற்பயிற்சி தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்தி  குரோத் ஹார்மோன்கள் (Growth Hormones) நன்றாகச் சுரக்க வைக்கும். உயரத்தை தீர்மானிப்பது மரபியலே (Genetics).

புரதம் சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு வருமா?

இயற்கையான புரதச்சத்து உள்ள உணவுகளான முட்டை, கோழி இறைச்சி, மீன், சோயா உருண்டை (Meal maker) அங்கீகரிக்கப்பட்ட புரதச்சத்து மாவு (Whey protein) சாப்பிட்டால் பாதிப்பு வராது. சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு புரதம் உண்ண வேண்டும்.

முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடுமா?

இல்லை, கூடாது. மாறாக முட்டையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளது. மீண்டும் மீண்டும் சமைத்த எண்ணெயை அதிகம் பயன்படுத்தினால் கெட்ட கொலஸ்ட்ரால் கூடும்.

உடற்பயிற்சிக் கூடங்களில்
பளு தூக்குதல் நல்லதா?

மிகவும் நல்லது. சரியான முறையில் மற்றும் பயிற்றுநரின் கண்காணிப்பில் பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டால் தசைகளும் எலும்புகளும் வலுவாகும்.

உடற்பயிற்சி முறைகள்:

பயிற்சிக் கூடங்களில் சேர்ந்து படிப்படியாக பளு தூக்குதலில் எடையை கூட்டினால் சீராக தசை வலுவடையும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் அக்காலத்தில் பெண்கள், முதல் சில நாட்களில் ஒரு தண்ணீர் குடத்தை தூக்க சிரமப்பட்டவர்கள் நாளடைவில் இரண்டு தண்ணீர் குடங்களை எளிதாக தூக்கினார்கள். நடப்பதே ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இதற்கெல்லாம் ஓர் அறிவியல் உண்மை உள்ளது. நடப்பதினால் கெண்டைக்காலில் உள்ள சோலியஸ் (Soleus) என்ற தசை அதிகமாக இயங்கும். இதனால் உடல் சர்க்கரை அளவு சீராகும். இன்சுலின் (Insulin) உணர்திறன் கூடும்.

உடல் கொழுப்பு அளவு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். சோலியஸ் புஷ்அப்ஸ் நாற்காலியில் கால்களை கீழே வைத்தவாறு குதிகாலை தூக்கி இறக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் சோலியஸ் அதிகமாக செயல்படுவதால், ரத்த ஓட்டம் சீராவதால் சோலியஸ் தசையை இரண்டாம் இதயம் என்று கூறுவார்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதினால் உடலில் டோபமைன் (Dopamine) மற்றும் எண்டார்ஃபின் (Endorphin) ஹார்மோன்கள் (Hormones) நன்றாக சுரந்து உடலில் வீக்கத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பை கூட்டும்.

உடல் உறுதியை உறுதிப்படுத்துவது
நல்ல உணவே

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.”

– குறள் 945

என்று அன்றே கூறினார் வள்ளுவர். உணவே மருந்து என்பதை மறந்து உணவுக்குப் பின் மருந்தா இல்லை உணவுக்கு முன் மருந்தா என்றே வாழ்கிறோம்.

மாத்திரைகளை மருத்துவப் பயனாளிகளுக்குத் தரும் ஓர் அலோபதி மருத்துவரான நானே சொல்கிறேன். உணவு சரியாக இருந்தால் மாத்திரை மருந்தே தேவையில்லை. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதைப் போல கண்களைக் கவரும் இன்றைய உணவுகள் நல்லவை அல்ல. அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நூடுல்ஸ், பீட்சா, பிஸ்கட்ஸ், பர்கர், கூல்டிரிங்ஸ் போன்றவற்றால் சர்க்கரை நோய், PCOD, ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் வர நேரிடும். அதற்கு பதிலாக சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், இளநீர், தயிர், கொட்டைகள், விதைகள் போன்றவற்றை உண்பதே நல்லது.

சமூக வலைதளங்களில் கூறுவது போல கண்டிப்பாக விலை அதிகமாக உள்ள ப்ளூபெர்ரிகள், அவகேடோ, ப்ராக்கோலி, கிரீக் யோகர்ட் போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றில்லை.

நமது ஊரில் அந்தந்த காலங்களில் விளையும் காய்கறி பழங்களை (Seasonal vegetables & fruits) சாப்பிட்டாலே போதும். உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால் புரதச் சத்து மிகுதியாக உள்ள பழம் நாம் கோடை காலங்களில் எங்கு பார்த்தாலும் கிடைக்கும் கொய்யாப்பழமே. உடலில் தேவையற்ற நீரை அகற்றும் சக்தி தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று கூறி உணவில் உப்பை அள்ளிக் கொட்டி உடலை குப்பைக் கூடையாக மாற்றியுள்ளோம் நாம். ஒரு நாளில் நாம்  2,300 மில்லி கிராமுக்கு மேல் சோடியம் சாப்பிட்டால் ரத்த கொதிப்பு சீக்கிரம் வரும். எனவே உணவில் அளவறிந்து உப்பை சேர்க்கவும்.

கரோனா (Corona) காலத்தில் பயிற்சி மருத்துவராக நான் பணியாற்றிக் கொண்டே ஓர் ஆண்டில்
85 Kg-லிருந்து 59 Kg-க்கு உடல் எடையைக் குறைத்து பளுத் தூக்குதல் ஆணழகன் போட்டிகளில் எவ்வித ஊக்க மருந்தும் பயன்படுத்தாமல் பங்கேற்று பல கோப்பைகளை வென்று உடல் உறுதியாக வைத்து ஒரு வாழும் எடுத்துக் காட்டாக உள்ளேன். உடல் உறுதி என்பது ஒரு முதலீடாகும்.

அது நம்மைச் சீராகவும் செம்மையாகவும் நீண்ட நாட்கள் வாழ உதவும். எனவே என்போன்று அனைவரும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று விழைகிறேன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *