ஆறு மாதத்தில் 2,993 ஒப்பந்தங்கள் ரத்து! நிலைகுலைந்துபோன வளர்ச்சித் திட்டங்கள்!! த.வெ.க. அரசு தந்த மாற்றமோ மாற்றம்…

- Advertisement -

சென்னை, நவ.9- ஆறு மாதத்தில் 2,993 ஒப்பந்தங்கள் ரத்து!  நிலை குலைந்துபோன வளர்ச்சி திட்டங்கள்!! தவெக அரசு தந்த மாற்றமோ மாற்றம் இதுதானோ!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு அரசு நிர்வாக மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், முந்தைய ஆட்சிக்காலத்தில் இறுதி செய்யப்பட்ட மற்றும் பரிசீலனையில் இருந்த திட்டங்களில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 2,993 அரசு ஒப்பந்தங்களை தவெக அரசு ரத்து செய்திருப்பது மாநில அரசியலிலும், மக்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

டெண்டர் என்றால் என்ன?
அது ஏன் ரத்து செய்யப்பட்டது?

அரசு ஒரு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றாலோ, குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் என்றாலோ அல்லது மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என்றாலோ, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி கோரும் நடைமுறைக்குத்தான் ஒப்பந்தங்கள் என்று பெயர்.

புதிய ஆட்சி அமைந்ததும், முந்தைய அரசு இறுதி செய்த ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய தவெக அரசு முடிவெடுத்தது. பல திட்டங்களின் மதிப்பீடு தேவையின்றி மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அரசு கஜானாவிற்கு ஏற்படும் வீண் விரயத்தைத் தடுக்கவே மறுஆய்வு நடத்தப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சி மாற்றத்திற்கு சற்று முன்பு மிகக் குறுகிய கால அவகாசத்தில் விடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அவசர ஒப்பந்தங்கள், வெளிப்படைத்தன்மை விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளன.

எந்தெந்த துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன?

சுமார் 2,993 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் பல முக்கிய துறைகளின் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன:

சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான மின்வாரிய கொள்முதல், புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.284 கோடி மதிப்பிலான நவீன நடைபாதை திட்டங்கள் முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் சுமார் 21 முக்கிய சாலை ஒப்பந்தங்கள் உள்பட, பல்வேறு மாவட்டங்களில் வாகன ஓட்டிகளுக்கான சாலையோர ஓய்வு மய்யங்கள் அமைக்கும் திட்டங்கள் மற்றும் வெளிவட்டச் சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம், அரசுப் பள்ளிகள் மற்றும் புதிய கட்டிடங்களுக்கான ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டுள்ளன.

மக்களுக்கும் – திட்டங்களுக்கும் என்ன பாதிப்பு?

இவ்வளவு பெரிய எண்ணிக்கை யிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதால் களத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மழைக்காலத்திற்கு முன் முடிய வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் மற்றும் புதிய குடிநீர் திட்டங்கள் தாமதமாகின்றன. பல இடங்களில் பணிகள் பாதியிலேயே நின்றுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அன்றாடம் சிரமங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டும் – அரசின் விளக்கமும்!

இது முழுக்க முழுக்க முந்தைய திமுக அரசைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக முடக்குவது மாநிலத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

இதற்குப் பதிலளித்துள்ள அரசுத் தரப்பு, ‘‘எந்தவொரு மக்கள் நலத் திட்டமும் நிரந்தரமாகக் கைவிடப் படவில்லை. முந்தைய மதிப்பீடுகளில் இருந்த முறைகேடுகளைக் களைந்து, புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் மறுமதிப்பீட்டுடன் வெளிப்படையான முறையில் புதிய ஒப்பந்தங்கள் விரைவில் கோரப்படும்’’ என்று கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *