‘‘பெரியாரை உலக மயமாக்குவதன் அவசியமும், அவசரமும்’’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கிறார்! புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நிறைவுரை

5 Min Read
- Advertisement -

* நாம், யார்மீதும் நம்முடைய கொள்கையைத் திணிப்பது கிடையாது!
* மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் பெரியாரின் கொள்கையை – திராவிடத்தின் தேவையை இன்றைக்கு உணர்ந்துதான்,
திராவிடம் என்பது உலகளாவிய தேவை! பெரியாரியம் என்பது மிக முக்கியமானது என்று

சென்னை, நவ.4 நாம், யார்மீதும் நம்முடைய கொள்கையைத் திணிப்பது கிடையாது. நம்முடைய மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் அவர்களே, இந்தக் கொள்கையைப் பற்றி உணர்ந்து, இன்றைக்குத் திராவிடத்தின் தேவையை அற்புதமாக திராவிடம் என்பது உலகளாவிய தேவை! பெரியாரியம் என்பது மிக முக்கியமானது என்பதற்காகத்தான் ‘‘பெரியாரை உலக மயமாக்குவதன் அவசியமும், அவசரமும்’’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

‘‘பெரியாரை உலகமயமாக்குவதன்
அவசியமும், அவசரமும்!’’

கடந்த 2.11.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் மன்றத்தில் புதுமை இலக்கியத் தென்றலின் 1,120 ஆம் நிகழ்வாக, ‘‘பெரியாரை உலகமயமாக்குவதன் அவசியமும்! அவசரமும்!’’ எனும் தலைப்பில், இங்கிலாந்து நாட்டில் யார்க்ஸ்சயர் மாகாணத்தில், ‘முதியோர் மனநல மருத்துவ ஆலோசகராக’ பணியாற்றி வரும் மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர், பாராட்டுதலுக்குரிய அருமை புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் அவர்களே, புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற நமது சிறப்புச் சொற்பொழிவாளர் டாக்டர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் அவர்களுடைய ஆய்வுரையை கேட்பதற்காக வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் அருமை தனராசு அவர்களே, நிகழ்ச்சியின் நிறைவில் நன்றி உரை கூற இருக்கக்கூடிய தோழர்  புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் பொருளாளர் மாணிக்கம் அவர்களே!

‘‘அடாது மழை பெய்தாலும்,
விடாது நாடகம் நடத்தப்படும்’’ என்று நோட்டீசில் போடுவார்கள்!

முதலாவதாக இங்கே வந்திருக்கின்ற தோழர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும், இந்த அமைப்பைச் சிறப்பாக  நடத்திக் கொண்டிருக்கின்றவர்களுக்கும் ஒரு சிறப்புப் பாராட்டு! என்ன அந்த சிறப்பு என்றால், வெளியில் புயல்; இங்கே புதுமை இலக்கியத் தென்றல், அதுதான் சிறப்பு. அந்தக் காலத்தில்,  நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, நாடகத்திற்காக, ஒரு சிறிய நோட்டீஸ் போடுவார்கள்; 1×32 என்று அளவு சொல்லுவார்கள். அந்த நோட்டீசின் கீழே  நாடகத்தின் தலைப்பைப் போட்டு, ‘‘கரண்ட் தவறினாலும், மழை பெய்தாலும்’’ என்று போடுவார்கள்.  அதே நேரத்தில், கீழே இன்னொரு வார்த்தையும் போடுவார்கள். ‘‘அடாது மழை பெய்தாலும், விடாது நாடகம் நடத்தப்படும்’’ என்று போட்டிருப்பார்கள். அதுபோன்று, பெரியார் திடலைப் பொறுத்தவரையில், ‘‘குடி செய்வார்க்கில்லை பருவம்’’ அதுதான் மிக முக்கியம். இங்கே கொட்டும் மழையா? கொளுத்தும் வெயிலா? அனலா? நெருப்பா? எதுவாக இருந்தாலும், கடமை ஆற்றுவோம் என்பதற்கு அடையாளமாகத்தான், இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நம்முடைய பொறுப்பாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்; இங்கே நான் ஆற்றும் உரை இங்கே இருக்கிறவர்களுக்காக மட்டுமல்ல; வெளி மாநிலம், வெளிநாடுகளிலும் இருப்பவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘வைடர் ஆடியன்ஸ்’ என்று சொல்வார்கள்; ‘யூ ஸ்பீக் ஃபார் வைடர் ஆடியன்ஸ்’ என்று.

நம்முடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வந்திருக்கின்றவர் நம்முடைய மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் அவர்கள். அவரைப் பற்றி மிகச் சிறப்பாக இங்கே அறிமுகப்படுத்தினார்கள்.  மருத்துவத் தொழில் செய்து,  நன்றாகச் சம்பாதித்துக் கொண்டு, அவர் நிம்மதியாக வீட்டில் இருக்கலாம் என்று பல பேர் நினைப்பார்கள். ‘‘இவருக்கு ஏனய்யா இந்த வேண்டாத வேலை’’ என்றெல்லாம் கூட நினைப்பார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லாம் ‘தன் பெண்டு, தன் பிள்ளை என்றதோர் கடுகு உள்ளம் படைத்தவர்கள்.’ ஆனால், மருத்துவர் வெங்கடேஷ் முத்துகிருஷ்ணன் அவர்களுக்குத் தன்னுடைய சம்பாத்தியம் இரண்டாவது. முதலிலே பொதுத்தொண்டு செய்ய வேண்டும், அதுவும் அதற்குச் சரியான கொள்கை எது என்றால், தந்தை பெரியாருடைய கொள்கைதான் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார் பாருங்கள்; அதற்காக அவருக்கு நம்முடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிடம் என்பது உலகளாவிய தேவை! பெரியாரியம் என்பது மிக முக்கியமானது!

இன்றைக்கு இந்த நிகழ்விற்குச் செல்லவேண்டாம் என்று மருத்துவர் சொன்னார். அவர் சொன்னதை,  மறுத்துவிட்டுத்தான், இங்கே நான் வந்திருக்கிறேன். ஏனென்றால், இன்னொரு மருத்துவரைத்தானே பாராட்டுகிறோம், பரவாயில்லை  என்று சொல்லிவிட்டு, நான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், என்னுடைய தலைமையில்தான் அவருக்குத் திருமணம் நடந்தது. திருமணம் நடக்கும்போது, நம்முடைய இயக்கக் கொள்கையைப் பொறுத்தவரையில், அவர் ஒரு ‘ரா மெட்டீரியல்.’ அதாவது அவர்கள் குடும்பம் எல்லாமே நல்ல குடும்பம். நம்முடைய மீனாம்பாள் அவருடைய மகள் அவர்கள்,  என்னுடைய தலைமை என்றெல்லாம் சொன்னவுடனே, கொஞ்சம் ஒரு மாதிரியாக வந்தார். அப்போதுதான், அவர்கள் கேட்ட பிற்பாடுதான், பயம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பித்தது. நம்மைப்பற்றி, எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், பூச்சாண்டி, பூதம், அசுரன், அரக்கன் என்று இப்படி நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு, ஓர் உருவத்தை முன்பே வரைந்து விடுகிறார்கள். பிறகுதான், உண்மை நிலவரம் அவர்களுக்குத் தெரிய வருகிறது. அவர்களிடம் நாம் யாரும் கொள்கையைத் திணிப்பது கிடையாது. நம்முடைய மருத்துவர் அவர்களே, இந்தக் கொள்கையைப் பற்றி உணர்ந்து, திராவிடத்தின் தேவையை அற்புதமாக உணர்ந்து, இன்றைக்குத் திராவிடம் என்பது உலகளாவிய தேவை! பெரியாரியம் என்பது மிக முக்கியமானது என்ப தற்காகத்தான் ‘‘பெரியாரை உலக மயமாகக்குவதன் அவசியமும், அவசரமும்’’ என்ற தலைப்பில் அவர் பேச வந்திருக்கிறார்.

சென்ற முறை வந்தபோது, ‘‘ஆர்டிபிசியல் இன்டெலி ஜன்ஸ்’’ அதாவது ‘‘செயற்கை நுண்ணறிவு’’ பற்றி அருமையாகப் பேசினார், இந்த இடத்தில். எந்தத் தலைப்பில் பேசினாலும், அதுகுறித்த தகவல்களை எல்லாம் தயார் செய்துகொண்டு வருவார். அவரே ஒரு மனோத்தத்துவ நிபுணர். ஆகவே, அப்பேர்ப்பட்ட ஒருவர்  இங்கே உரையாற்றுவது சிறப்பானது, வரவேற்கத் தகுந்ததாகும்.

அவருடைய உரையைக் கேட்க, கடும் மழையையும், புயலையும் பொருட்படுத்தாமல் இங்கே வந்திருக்கிற உங்கள் எல்லோருக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கருத்து மழை பொழியட்டும்!

அவருடைய ஆற்றல் பெருகட்டும்;
அவருடைய செயல் விரியட்டும்!

பெரியாரை நல்ல அளவிற்குக் கொண்டு செல்வதற்கு முதல்படியாக திராவிடத்தினுடைய இளைஞர்களோடு சேர்ந்து என்ன செய்தார் என்றால், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக வளாகத்தில், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சராக இருந்து, ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி, சாதனை நிகழ்த்திய மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் படத்தை அங்கு திறந்த காலத்தில், அவர்க ளுக்கு வரவேற்பளித்தவர்களிலே மிக முக்கியமானவர் நம்முடைய பெருமதிப்பிற்குரிய டாக்டர் வெங்கடேஷ் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் ஆவார்கள். ஆகவே, அவரை பாராட்டுகிறோம். அவரைப் பாராட்டுவது  என்பது நம்மை நாமே பாராட்டுவதாகும். ஏனென்றால், இவர் நமது கொள்கைக் குடும்பத்து உறவு – நிரந்தரமானது. அவருடைய ஆற்றல் பெருகட்டும்; அவருடைய செயல் விரியட்டும்! அதனால் நாம் பயன்பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *