சென்னை, நவ.4- தமிழ்நாடு சட்டப் பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் முடித்துவைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி லோக் சத்தா கட்சி நிர்வாகி ஜெகதீஸ்வரன் (2012), மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் (2015) மற்றும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி (2023) ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களில், “மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும். தற்போது பேரவை நிகழ்வுகள் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கேள்விகளைக் கேட்கிறார்கள், பேரவைக்குள் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில், “தமிழ்நாட்டில் தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பேரவை நிகழ்வுகள் ஏற்கெனவே நேரலை செய்யப்பட்டு வருவதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
