காக்ரோச் ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸின் குடியுரிமை, பின்னணி குறித்த வழக்கு! ஒன்றிய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

- Advertisement -

சென்னை, அக். 31- கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸின் குடியுரிமை மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கணேஷ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல மனுவில், சவுரவ் தாஸ் நேபாள நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டால் அவரது கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, சவுரவ் தாஸின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பப் பின்னணி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து 6 வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலர், ஆதார் ஆணையம், வெளியுறவுத்துறை செயலாளர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் அய்ஏஎஸ் அதிகாரி  நியமனம்!

சென்னை, அக். 31- மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷகீல் அக்தர் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

அதேபோல் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக் காலமும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 புதிய தகவல் ஆணையர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து மனிதவளத் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அறிவிக்கை வருமாறு:

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர மாநில தகவல் ஆணையர்களாக எஸ்.மகாலட்சுமி, டி.கே.ஷபீர், சி.பி.மீனா, பத்திரிகையாளர் பி.மகாலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று இந்த நியமனங்களை ஆளுநர் ஆர்வி.அர்லேகர் மேற்கொண்டுள்ளார்.

இவர்கள் இந்த பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவடையும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இருப்பார்கள். இவர்களுக்கான ஊதியம், படிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விரைவில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். தகவல் ஆணையராக முதன்முதலாக பத்திரிகையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சுற்றுச்சூழல் விதிமீறல்

467 ஆலைகளுக்கு ‘சீல்’

சென்னை, அக். 31- சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் மேற்கொண்ட ஆய்வு மற்றும் அறிவுறுத்தலின்படி, விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 5 மாதங்களில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக, நீர் (மாசு தடுப்பு, கட்டுப்பாடு) சட்டம்-1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு, கட்டுப்பாடு) சட்டம்-1981 ஆகியவற்றின்கீழ் 467 தொழிற்சாலைகள் மீது மூடுதல் மற்றும் மின் இணைப்பை துண்டித்தல் ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றுதல், அனுமதி பெறாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், நிர்ணயிக்கப்பட்ட புகை வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் வெளியேற்ற தரநிலைகளை மீறுதல் ஆகியவை இத்தகைய விதிமீறல்களில் அடங்கும். சுற்றுச்சூழல் சட்டங்களின்படி விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைகளில் பாதுகாப்புக் குளறுபடி!

ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் நிர்மல் குமார்

மதுரை, அக்.31- தேனி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்திற்கு பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்புக் குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் 17 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் அங்கு நடைமுறையில் இருந்த சில பாதுகாப்பு குளறுபடிகளே முக்கிய காரணம். அது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பணியில் இருந்த சிறை கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, காவலர் பற்றாக்குறை, சிசிடிவிகள், ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கடந்த பட்ஜெட்டின் போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இவை அனைத்திற்கும் முறையான ஒப்பந்தம் விடப்பட்டு, அனைத்தும் வாங்கப்படும். இந்த நிகழ்வு குறித்து புதிதாக ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்” என்றுத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *