| இ |
ன்று உலக பக்கவாத விழிபபுணர்வு நாளாகும் (அக்டோபர் 29, 2026)
கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் ‘பக்கவாதம்’ தாக்குகிறது என்றும் இந்தியர்கள் மரணிப்பதற்கான அய்ந்தாவது முக்கிய காரணமாக பக்கவாதம் மாறியுள்ளது என்று கூறுகிறார் தமிழ்நாடு அரசின் ஓமந்தூரார் அரசு பல்நோனோக்கு மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் ஆர்.எம்.பூபதி.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதி பக்கவாத விழிப்புணர்வு நாளாக உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாத பாதிப்புஏற்பட்ட மூன்று மணிநேரத்திற்குள் ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால், அவர் முழுமையாகவோ அல்லது 50 சதவீத குணமடைய வாய்ப்புகள் உள்ளதால், பக்கவாதம் மூலம் ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்தை தடுக்கமுடியும் என்கிறார் மருத்துவர். இந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நோயுடன் இருக்க வேண்டிய சூழல் இந்திய அளவில் இருப்பதாக கூறுகிறார்.
பக்கவாத பாதிப்பு என்றால் என்ன? அதனை குணப்படுத்த முடியுமா? உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சிறப்பு இருக்கும். மூளை என்ற உறுப்புக்கு தனிச்சிறப்பு என்னவென்றால், அதுதான் எல்லா உறுப்புகளும் வேலை செய்வதற்கான கட்டளையை உடலுக்கு உணர்த்துகிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவது தடைபட்டால், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். உடலின் ஒரு பக்கம்,கை,கால், முகத்தின் ஒரு பகுதி என பாதிப்பை பொறுத்து அந்த பகுதி செயல் இழக்கும்.
பக்கவாத அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே மருத்துவ உதவி கிடைத்தால், பக்கவாத்தின் பாதிப்புகளை 60 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும். ஒரு சில சமயம் பாதிக்கப்பட்ட நபரை முழுமையாக குணப்படுத்தவும் முடியும் என்பது மருத்துவர்களின் முக்கிய அறிவுரையாகும்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
