திருவனந்தபுரம், அக்.28 கேரள மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்குச் சிறந்த சுகாதாரத்தையும் மற்றும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் புதிய மசோதா சட்டப்பேரவையில் 26.10.2026 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தகைய விரிவான சட்டத்தை இயற்றும் முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.
கேரளாவில் முதலமைச்சர் சதீசன் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ‘கேரள மூத்த குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, 2026’ என்ற புதிய மசோதா தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்தனர். இதையேற்று இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை சட்டபேரவையில் முதலமைச்சர் சதீசன் நேற்றுமுன்தினம் (26.10.2026) அறிமுகம் செய்து பேசினார்.
இதையடுத்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு இந்த மசோதா சட்டமாகும். இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது.
இந்த மசோதாவின்படி முதியோர்களை துன்புறுத்துவது, அவர்களது சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரிப்பது, பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களை நடத்துவது போன்ற குற்றங்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. முதியோர்களின் உடல்நலம், சமூகப் பாதுகாப்பு, கண்ணியமான வாழ்க்கை போன்றவை இந்தச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.
