கோடையில் மின்தேவை புதிய உச்சம் பெறுமென கணிப்பு முன்கூட்டியே மின்சாரம் வாங்க வாரியம் திட்டம்!

- Advertisement -

சென்னை, அக். 28- சூப்பர் எல் நினோ தாக்கத்தால் 2027 கோடைக்காலத்தில் தமிழ்நாட்டின் மின்தேவை அதிகரித்து, உச்ச நேரங்களில் 7,971 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, பற்றாக்குறையைச் சமாளிக்க முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்தேவை 23,672 மெகாவாட்டாக உயரக்கூடும் எனக் மின்வாரியத்தின் உள்மதிப்பீடு மற்றும் தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏப்ரல், மே மாதங்களில் 3,200 மெகாவாட் மின்சாரமும், ஜூன், ஜூலை மாதங்களில் 2,000 மெகாவாட் மின்சாரமும் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் 1,500 மெகாவாட்டும், நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் 1,500 மெகாவாட்டும் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கனவே உள்ள மின்கொள்முதல் ஒப்பந்தங்களை மின்வாரியம் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என ஓய்வுபெற்ற மின்வாரியப் பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டம்பர் மாதத்தில் நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதிக விலை கொண்ட குறுகிய கால மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களை முழுமையாகப் பயன்படுத்தி, சொந்த அனல்மின் நிலையங்களின் உற்பத்தியையும் சீராக பராமரிப்பதன் மூலம் அதிக விலை மின்சாரம் வாங்குவதை தவிர்க்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

வட சென்னைப் பகுதியில்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரம்பூர், அக். 28–- வட சென்னைப் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணக் கோரியும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரி எதிரே நேற்று (27.10.2026) மாபெரும் கண்டன முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் விஜயகுமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நெரிசல் மிகுந்த சாலைகளில் உடனடி நடவடிக்கை

கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இரட்டைமலை சீனிவாசன் சாலை, பாடி – திருநின்றவூர் MDH சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி எக்ஸ்பிரஸ் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மாதவரம் சந்திப்பு

மாதவரம் ரவுண்டானா சந்திப்பில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். மாதவரம் ரவுண்டானாவில் இருந்து வியாசர்பாடி மேம்பாலம் வரை புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

வியாசர்பாடி மேம்பாலத்திலிருந்து மூலக்கொத்தளம் வரை உள்ள பேசின் பிரிட்ஜ் பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தின் போது அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“பொதுப் போக்குவரத்து என்பது வெறும் வசதி அல்ல; அது மக்களின் உரிமை. வட சென்னை;g பகுதியில் நகர்ப்புற மேம்பாடு என்று வரும்போது போதுமான நியாயம் வழங்கப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை உயரமான கட்டடங்களோ, வணிக வளாகங்களோ (மால்கள்) வளர்ச்சி கிடையாது; உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்படுவதே உண்மையான வளர்ச்சி ஆகும்.”

மேலும் அவர் பேசுகையில்: பல்வேறு இடங்களில் தேவையான அளவு பேருந்து மற்றும் சிறிய வகைப் பேருந்து வசதிகளைச் செய்து தர வேண்டும்.  பாதியிலேயே நின்றுபோயுள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் பொதுப் போக்குவரத்தைத் தனியார்மயமாக்கக் கூடாது. ஆனால், தற்போதைய அரசு தனியார்மயமாக்கலை நோக்கித் தீவிரமாக நகர்வது கண்டிக்கத்தக்கது. எந்த எளிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தார்களோ, அந்த மக்களின் வளர்ச்சிக்காக அரசு முழுக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *