புதுடில்லி, அக்.27- டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு தொடர்பான மாணவர் போராட்டங்களின் போது நடந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டில்லியில் நேரடி விசாரணை நடத்தவுள்ளது.
விசாரணை
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு, பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் செய்தியின்படி புதுடில்லியில் உள்ள ‘சிக்ஷா சதன்’ அலுவலகத்தில் இந்த இரண்டு நாள் விசாரணையை நடத்தவுள்ளது.
இந்த வன்முறைச் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் அல்லது சாட்சிகள் யாரேனும் இருந்தால், அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விசாரணை நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று தங்களது புகார்களையும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம். சாட்சியமளிக்க வருபவர்கள் தகுந்த அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.
அத்துமீறல்கள்
போராட்டத்தின் போது பெண் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் காவல்துறையினரின் தடியடி, பெல்லட் துப்பாக்கிச் சூடு (Pellet guns) போன்ற அதிகப்படியான விசைப் பயன்பாடு குறித்து இக்குழு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கும்.
மாணவர் தரப்பில் கூறப்படும் காவல்துறை அத்துமீறல்கள் மட்டுமின்றி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு விளைவிக்கப்பட்ட சேதங்கள் குறித்தும் இருதரப்பு ஆதாரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.
நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி தலைமையிலான இக்குழுவில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலிந்தர் கவுர், சிபிஅய் முன்னாள் இயக்குநர் ரிஷி குமார் சுக்லா மற்றும் மேகாலயா முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் எல்.ஆர். பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாதிக்கப்படும் சாட்சிகளின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் இக்குழு தெரிவித்துள்ளது
