தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. உட்பட 9 கட்சிகள் வெளிநடப்பு!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 24- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் (எஸ்எஸ்ஆர்) தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்அய்ஆர்) கடந்தாண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் (எஸ்எஸ்ஆர்) தொடங்கப்பட உள்ளன. 2027 ஜனவரி 1ஆம் தேதியை வாக்காளர் தகுதியேற்பு நாளாகக் கொண்டு 17 மாநிலங்களில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, வாக்குச் சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12இல் வெளியிடப்படும். பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்காக டிசம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் நேற்று (23.10.2026) ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர், பாஜக, தேமுதிக, சிபிஅய், சிபிஅய் (எம்) உட்பட 12 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை.

கூட்டம் தொடங்கியதும் எஸ்அய்ஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளிநடப்பு செய்தார்.

இதையடுத்து, எஸ்அய்ஆர்-அய் திரும்பப் பெற வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்துவிட்டு திமுக சார்பில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ், விசிக, தேமுதிக, நாம் தமிழர், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. கூட்டத்தில் அதிமுக, பாஜக, தேசிய மக்கள் கட்சி மட்டுமே பங்கேற்றன.

அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “எஸ்அய்ஆர் பணியில் மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. இந்தக் குளறுபடிகளைச் சரி செய்யாமல் மீண்டும் ஒரு வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவையற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *