நம்புங்கள், இதுதான் கடவுள் சக்தி! யானை மிரண்டதால், கடவுள் சிலையின் கைகள் உடைந்தன? மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!

2 Min Read
- Advertisement -

சிவமோகா, அக். 24- தசரா விழாவில் யானை மிரண்டு ஓடியதால் வெள்ளி அம்பாரி கீழே விழுந்ததில் அம்மன் சிலை சேதம் அடைந்தது. கடைசி நேரத்தில் அம்பாரியை சுமக்கும் யானை மாற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

மைசூரு தசரா விழாவில் 22.10.2026 அன்று உச்ச நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி தசரா விழா நடந்து முடிந்தது. மைசூருவை போல சிவமோகாவிலும் தசரா விழா தொடங்கி நடந்து வந்தது. அதேபோல், சிவமோகாவில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதற்காக சக்ரேபைலு யானைகள் முகாமில் இருந்து சாகர், சோமண்ணா, பகதூர் ஆகிய 3 யானைகள் அழைத்து வரப்பட்டன.

இந்த தசரா விழாவில் சாகர் யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 650 கிலோ வெள்ளி அம்பாரியை சுமக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக அந்த யானைக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜம்பு சவாரிக்கு முந்தைய நாளில் திடீரென வெள்ளி அம்பாரியைச் சுமக்கும் யானை மாற்றப்பட்டது. அதாவது சாகருக்குப் பதிலாக சோமண்ணா யானை அம்பாரியைச் சுமக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 22.10.2026 அன்று மாலை சிவப்ப நாயக்கா அரண்மனையில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 650 கிலோ வெள்ளி அம்பாரியை சுமந்து கொண்டு சோமண்ணா யானை புறப்பட்டது. தொடக்கத்தில் சோமண்ணா யானை சாந்தமாக சுமந்துக் கொண்டு சென்றது. இந்த ஊர்வலம் எஸ்.பி.எம். சாலையின் அருகே வந்தபோது. அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் மிரண்டு போன சோமண்ணா யானை மதம் பிடித்தது போல அங்கும், இங்குமங்குமாக ஓடியது. இதில் 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்தது.

மேலும் வெள்ளி அம்பாரியும் கீழே விழுந்து சேதம் அடைந்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சோமண்ணா யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, டிராக்டரில் அம்மன் சிலை சுதந்திர பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்வு சிவமோகா மட்டுமின்றி கருநாடகா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் யானை மிரண்டு ஓடியதால் கீழே விழுந்த வெள்ளி அம்பாரியில் இருந்த சாமுண்டீஸ்வரி அம்மனின் சிலையும் சேதம் அடைந்துள்ளது. அதாவது, அம்மனின் 2 கைகளும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அம்மன் அணிந்திருந்த ஆபரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தசரா ஊர்வலத்தில் கடைசி நேரத்தில் யானை மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவமோகாவில் கடந்த தசரா விழாக்களில் சாகர் யானைதான் அம்பாரியை சுமந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடைசி நேரத்தில் சாகர் யானை மாற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 யானைகளும் நேற்று (23.10.2026) லாரிகள் மூலம் சக்ரேபைலு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தசரா ஊர்வலத்தில் யானை மிரண்டு ஓடிய சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபலிங்க கவலிகட்டி தலைமையில், சிவமோகா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை சேதம். அம்பாரி சேதம் அடைந்தது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *