‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (7)

4 Min Read

தந்தை பெரியார் சொன்னது போல் “ஸநாதனப் பார்ப்பானைக் கூட நம்பலாம், லவ்கீகப் பார்ப்பானை நம்பக் கூடாது” என்பது எவ்வளவு உண்மை என்பதை மோதிலால் நேரு நிரூபித்துக் காட்டினார். பெரும் முற்போக்கு எண்ணங்களை முன்னிலைப்படுத்தி இந்த நாட்டை முற்போக்குக்குக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்து சாதித்துக் காட்டியவர் ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பின் வந்த இந்திரா காந்தி “ஒவ்வொரு இந்தியனும், அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், கேள்வி கேட்கும் உரிமையையும், சீர்திருத்தத்தையும் தன் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும். இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடு, சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு” என்று அரசியல் சட்டம் மூலம் பிரகடனப்படுத்தியவர்.

அரசியலமைப்புச் சட்ட “முகப்புரையில்” (Preamble) அதை இணைத்து அதை எந்தக் காலக்கட்டத்திலும் மாற்ற முடியாத நிலையை உருவாக்கியவர். (“We, the people of India, & states core values “SOVERERIGN, SOCIALISTIC, SECULAR, DEMOCRATIC REPUBLIC” – Preamble of our constitution). அவர் தாத்தா மோதிலால் “சதி”யைப் பற்றிய தன் தலைமையில் அமைந்த அடிப்படை உரிமைகளைப் பற்றிய ஆவணத்தை ஆங்கிலேய அரசிடம் 1928இல் வெளியிட்டார்.

“சதி”யை ஒழிக்க வேண்டும் என்ற நிலையில் சீர்திருத்தம் பேசிய குடும்பத்திலிருந்து வந்தவரும், பகுத்தறிவாதி, நாத்திகருமான ஜவஹர்லால் நேருவின் தந்தையுமான “லவ்கீக” காஷ்மீரத்துப் பார்ப்பனர் மோதிலால் நேரு ஆங்கிலேய அரசாங்கத் திடம் 1828இல் அடிப்படை உரிமைகள் வரைவு அறிக்கையில் கொடுத்த செய்தி என்ன தெரியுமா? “சதி” விசயத்தில் மோதிலால் நேரு அறிவியல் உணர்வு, மனித நேயம், கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம் ஆகிய அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு தன் பார்ப்பன புத்தியை வெளிப்படையாகக் காட்டினார். அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் “சதி” பற்றிய வழக்கில் பார்ப்பனர்கள் சார்பில் ஆஜரான அவர் பெரும் பதவிகளே வகித்திருந்தாலும் “சதி”யை ஆதரித்து குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பனர்களுக்கு ஆதரவாக வாதாடினார். வில்லியம் பென்டிங் பிரபு கொண்டுவந்த “சதி” தடைச் சட்டத்தை 80 ஆண்டுகள் கழித்து எதிர்த்து வாதாடினார்.

அய்க்கிய மாகாணத்தின் (இன்றைய உத்தரப்பிரதேசம்) சட்டமன்ற உறுப்பின ராகவும், அலகாபாத்தில் நடந்த காங்கிரசின் மாநாட்டின் தலைவராகவும், புகழ்பெற்ற வழக்குரைஞராகவும், காந்தியாருக்கு நெருக்கமானவருமான லவ்கீகப் பார்ப்பனரான மோதிலால் நேரு “சதி”யை ஆதரித்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக வாதாடியது அந்தக் காலக்கட்டத்தில் பெரும் பேசும் பொருளானது.

பென்டிங் பிரபுவின் சட்டம் நீர்த்துப் போனதால் தன் கட்சிக்காரர்கள் “தற்கொலைக்குத் தூண்டினார்கள்” என்பதைக் கூட ஏற்கக் கூடாது என்று எதிர் வாதம் செய்தார். சிதைக்கு யாருமே தீ மூட்டவில்லையென்றும், சிதை தானாகவே பற்றியெரிந்ததென்றும், பெண் அந்த நெருப்பில் எரிந்து விட்டார். அதனால் அது “தற்கொலை” என்று கூற முடியாது” என்றும், அறிவியலுக்குப் புறம்பாக அவர் வாதமிட்டார். (அவர் பேத்தி இந்திராகாந்தி எதிர்காலத்தில் கணவனை இழந்தாலும் “சதி” என்ற பழக்கத்திற்கு ஆளாகாமல் இந்த நாட்டையே ஆள்வார் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். (சான்று: “ஜாதிப் பெருமை” – மனோஜ் மிட்டா.)

தண்டனைக்கு ஆளான பார்ப்பனர்கள் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு மோதிலால் வழக்காடிய விவரம் பற்றி அலகாபாத் உயர்நீதிமன்றம் எழுதிய குறிப்பில் உள்ளதாவது:

மற்றவை

“பிறகு ஜெயதேபி சிதையைச் சுற்றி ஏழுமுறை நடந்தபின் அதன் மீது ஏறி அமர்ந்து, இறந்த கணவனின் தலையைத் தன் மடியில் வைத்தார். தான் அணிந்திருந்த ஆபரணங் களைக் கழற்றி சோட்டும், டோட்ராஜும் பிடித்திருந்த ஒரு துணிக்குள் எறிந்தார். பிறகு நெய் வேண்டும் என்று கேட்டார். டோட்ராஜ் ஒரு குவளை நிறைய நெய்யைக் கொடுத்தார். அதை சிதையின் மீதும், தன் மீதும் ஜெயதேபி ஊற்றினார். மேலும் அதிகம் நெய் வேண்டுமென்று ஜெயதேபி கேட்டார்.

ராம் தயாள் அவரிடம் நெய் கொடுத்தார். அந்த நெய்யையும் தன் மீதும், சிதையின் மீதும் மீண்டும் ஊற்றினார். சிதை மூட்டப்பட்டது. ஆனால் யார் கை சிதை மூட்டியது என்று சாட்சிகள் சொல்ல மறுத்து விட்டனர். சிறிது நேரத்தில் இறந்த உடலையும், ஜெயதேபியையும் கொழுந்து விட்ட தீ எரித்துக் கொன்று தின்றது. காவலர்களோ அங்கு பிற்பகல் மூன்று மணிக்குத்தான் வந்தனர். அப்பொழுது அவர்களுக்குக் கிடைத்தது எரிந்த பிணங்களில் இருந்து எழுந்த புகையும், சாம்பல்களும், எலும்புகளும்தான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டங்களும், அரசாங்கத்தின் கடுமைகளும் அதிகரித்த வண்ணமே இருந்ததால் சதிப் பழக்கம் குறையவே செய்தது.வில்லியம் பென்டிங் பிரபு அவர்களை “மகளிர் உயிர்களைக் காத்த மாண்பாளர்” என்று சொன்னாலும், அது தகுமானாலும், பார்ப்பனர் களால் அந்தக் கொடுமை ஒரு வீரச்செயலாகவும், வழிபாட்டிற்குரியதாகவும் மனதளவில் நிலை நிறுத்தப் பட்டிருந்ததை அவ்வளவு எளிதாக மாற்ற முடியவில்லை.

மற்றவை

மோதிலால் நேரு தன் கட்சிக்காரப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக அப்படியே அந்தப் பார்ப்பனர்கள் “சதி”க்குக் காரணமாக இருந்ததாக நீதிமன்றம் கருதுமானால் அவர்களுக்குக் குறைந்த அளவு தண்டனை கொடுக்க வேண்டுமென்று நீதிபதியை வேண்டினார். ஜெயதேபியின் மரணம் நிகழ்ந்த 20 நாட்களுக்குள் ளாகவே அவருடைய சாம்பலையும், எலும்புகளையும் கண்ட காவல்துறையின் உடனடி நடவடிக்கையினால் மயின்புரி அமர்வு நீதிமன்றத்தின் முன் வழக்கு நடைமுறைக்கு வந்தது.

நீதிபதி ஈ.ஓ.ஆலன் என்பவர் வழக்கை விசாரித்தார். ஜெயதேபியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அய்ந்து பார்ப்பனர்களைத் தண்டித்தார் நீதிபதி.இந்த தண்டனைக்குப் பத்தாண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்று இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் கூறினாலும் இரண்டு பார்ப்பனர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், மீதி மூன்று பார்ப்பனர்களுக்கு அதைவிட குறைந்த தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி ஆலன்.பார்ப்பனர்கள் விடுவார்களா? மேல்முறையீடு செய்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *