கோவையில் ஜாதிப் பெயரை சொல்லித் திட்டிய ஆசிரியர் மாணவர் தற்கொலை – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

2 Min Read
- Advertisement -

கோவை, அக். 23- கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் ப்ளஸ் 1 மாணவர் தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இப்பள்ளியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இப்பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கோவை பீளமேடு துரைசாமி லேஅவுட் 5ஆம் வீதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு கவுசல்யா தேவி என்ற மனைவியும், நேத்ரா (16) என்ற மகளும், அகிலன்(16) என்ற மகனும் உள்ளனர். அசோக்குமார் மூணாறில் உள்ள ஒரு உல்லாச விடுதி (Resort) சலவையக மேலாளராக பணிபுரிகிறார். கவுசல்யாதேவி வீட்டு வேலை செய்து வருகிறார். நேத்ரா காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்.

அகிலன் அவிநாசி சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். 21.10.2026 அன்று காலை அகிலன் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பின்னர், நேத்ராவும் கல்லூரிக்குப் புறப்பட, கவுசல்யா தேவி வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டார். பின்னர், நண்பகல் கவுசல்யா தேவி வீட்டுக்கு வந்து பார்த்த போது, கதவு பூட்டப்படாமல் இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது, மாணவர் அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு விசாரித்தனர். தொடர்ந்து அகிலனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பீளமேடு காவல் நிலையம் முன்பு 21.10.2026 அன்று இரவு திரண்டனர். அவர்கள், ‘‘அகிலன் படித்து வரும் பள்ளியில் அவரை ஜாதிய கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளனர். சக மாணவர்கள் ஜாதிப் பெயரை கூறி அடித்தும், கிண்டல் செய்தும் வந்துள்ளனர்.

ஆசிரியர் விஜயகுமார் மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா என அகிலனிடம் கேட்டுள்ளார். சக மாணவர்களின் ஜாதிய கண்ணோட்ட அணுகுமுறை குறித்து அகிலன், ஆசிரியர் விஜயகுமாரிடம் கூற, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஜாதிய உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளார். பள்ளித் தலைமை ஆசிரியர் அருண்குமாரும் இவ்விவகாரம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கவுசல்யா தேவி அளித்த புகாரின் பேரில், பீளமேடு காவல்துறையினர் தற்கொலைக்குத் தூண்டுதல், காயப்படுத்துதல், தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார், பெயர் தெரியாத 2 சக மாணவர்கள் என 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து ஆசிரியர் விஜயகுமாரை நேற்று (அக்.22) மதியம் கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த வன்கொடுமை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல், சக மாணவனை ஜாதிய ரீதியாக அவமானப்படுத்துகிறது, இழிவுபடுத்து கிறது என்றால் அந்தப் பள்ளியை இனிமேலும் தொடர்வதற்கு அரசு அனுமதிக்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறோம். பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இப்பள்ளியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இப்பள்ளியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்,” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *