குன்றத்தூர், அக்.19- மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில், குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் `ஸ்டிக்கர்’ ஒட்டி மாங்காடு நகராட்சி ஆணையாளர், ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், மொத்தம் 19,840 வீடுகள் மற்றும் 1032 வணிக வளாகங்கள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
நாளொன்றுக்கு 17.4 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள், 12 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. இவற்றில், மக்கும் குப்பைகள் மூலம் இயற்கை நுண்ணுரங்கள் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மக்காத குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சிக்காக தனியார் தொழிற்சாலைகள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த 1ஆம் தேதி முதல் வீடுகளில் உள்ள குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் சிறப்பு கழிவுகள் என்று 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்று மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நகராட்சி ஆணையர் தலைமையில் சுகாதாரப் பிரிவு ஆய்வாளர்கள், ஊழியர்கள், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்து, ‘குப்பையை தரம் பிரித்து வழங்கும் வீடு’ என்ற, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
