சென்னையில் கொட்டித்தீர்த்த அதி கனமழை வீடு, சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 19- மாநகரில் கொட்டித்தீர்த்த அதிகனமழை காரணமாக திருவொற்றியூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் வீடு களுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். பாரிமுனையில் அதிகபட்சமாக 36 செமீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று  (18.10.2026) அதிகாலை வரை அதிகனமழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

என்.எஸ்.சி போஸ் சாலை, வட சென்னையில் பட்டாளம், தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர், திருவொற்றியூரின் சில பகுதிகள், வேளச்சேரியில் ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 36 செமீ, எண்ணூர் கத்திவாக்கத்தில் 34 செமீ மழை பதிவானது. பெரம்பூர், வியாசர்பாடி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.

கணேசபுரம் சுரங்கப்பாலம், வியாசர்பாடி சுரங்கப் பாலப் பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியது. வேளச்சேரி பகுதியில் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட் டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் 215 நிவாரண மய்யங்கள், 111 பொதுச் சமையலறைகள் தயார் நிலையில் உள்ளன. பால், மாவு, அரிசி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சுகாதாரத் துடைப்பாடைகள் அடங்கிய அவசரகாலக் கருவிப் பெட்டகங்கள் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.

1000-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார் பம்புகள், டிராக்டரில் பொருத்தப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ள நிலையில், தேவையான இடங்களில் மோட்டார்களை பயன்படுத்தி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது.

நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்னையில் 36 செமீ மழை பெய்தும்கூட எங்கும் மழைநீர் தேங்காத அளவுக்கு தமிழ்நாடு அரசு பணியாற்றியுள்ளது. இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

சென்னையில் தேவையான அளவு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மழை பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 40 அழைப்புகள் மீதும் தீர்வு காணப்பட்டன. மாநகராட்சி சமூக வலைத்தளம், 1,913 புகார் எண் மூலமாக 583 புகார்கள் வந்தன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று (18.10.2026) இரவு வரை 13,500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. விழுந்த 50 மரங்கள் உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டன. அனைத்து சுரங்கப் பாதைகளிலும் நீர் அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

133 படகுகள் தயார் நிலையல் உள்ளன. 217 நிவாரண மய்யங்கள், 102 சமையல் கூடங்கள் தயார் நிலையில உள்ள நிலையில், 9 மய்யங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது மழை நிவாரணப் பணியில் 22 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *