சென்னை, அக். 19- டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வுக்கான விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.சிறீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற குரூப்-2, 2ஏ மெயின் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழித் தாள் விடைத்தாள்கள், பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற பொது அறிவுத் தாள் விடைத்தாள்கள் ஆகியவை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விடைத்தாள் தேவைப்படும் தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவு வாயிலாக உரிய கட்டணத்தை செலுத்தி இணைய வழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பதிவிறக்கம் செய்யும் வசதி அடுத்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணிகள் திருப்திகரமாக இல்லை!
விரைவு ரயில்களைத் தீவிரமாகக் கண்காணிக்க ரயில்வே வாரியம் உத்தரவு!

சென்னை, அக். 19- நீண்ட தூரம் செல்லும் 11 விரைவு ரயில்களில் தூய்மைப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு (DRM) ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ரயில்களில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து பயணிகள் தொடர்ச்சியாக அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜாபர் அலி தெரிவிக்கையில்: “திப்ரூகர் – கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 11 முக்கிய நீண்ட தூர விரைவு ரயில்களில் தூய்மைப் பணிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.”
முக்கியக் கட்டுப்பாடுகள் & வழிகாட்டுதல்கள்:
சுத்தமான கழிப்பறைகள்: ரயில் பயணம் தொடக்கம் முதல் முடிவு வரை கழிப்பறைகள் எப்போதும் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும். உடனுக்குடன் குப்பை அகற்றம்: பெட்டிகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
பயண காலம் முழுவதும் ரயில்களில் போதிய தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயணிகளின் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில், இந்த கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு குறித்து
மாநில சதுப்பு நில ஆணையமும்
மாநில சதுப்பு நில ஆணையமும்
ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவை, அக். 19- கோவை மாநகரில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு, வணிக நடவடிக்கைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்காநல்லூர் குளத்தில் 700க்கும் மேற்பட்ட பறவைகள், பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் 2017ஆம் ஆண்டு நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.
சிங்காநல்லூர் குளக்கரை மற்றும் நீர் வெளியேறும் வாய்க்கால் பகுதியில் மாநகராட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் ரூ.84 லட்சத்துக்கு சாலை அமைத்ததாக புகார் எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ‘அட்வகேட் கமிஷனர்’ முகமது சாதிக் சிங்காநல்லூர் குளத்தில் ஆய்வு செய்தார்.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற பகுதி அமர்வு நீதிபதிகள் சதீஷ்குமார், லிங்கேஸ்வரன் அமர்வில் நேற்று (18.10.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிங்காநல்லூர் குளத்தில் 56 ஏக்கரில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் தேவை என அட்வகேட் கமிஷனர் கேட்டார். மாநகரில் உள்ள வாலாங்குளம், பெரியகுளம் குறித்து ‘அமிகஸ் கியூரி’ தாக்கல் செய்த அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சதுப்பு நில ஆணையத்தை மீறி, குளங்களில் வணிக நடவடிக்கை அதிகரிப்பதாக அறிக்கையில் சொல்லப்பட்டது.
சிங்காநல்லூர் குளத்தை போல, மற்ற குளங்களிலும் ஆக்கிரமிப்பு இருக்கலாம் என்று நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர். சிங்காநல்லூர் குளத்தில் ஆய்வு செய்ததை போல, நொய்யலை இணைக்கும் மாநகரின் 8 எட்டு குளங்களிலும் அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு, சுத்திகரிப்பு நிலை செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். குளங்களில் நிலைமை, ஆக்கிரமிப்பு குறித்து மாநில சதுப்பு நில ஆணையமும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாநகரின் சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நகர்வாக, இந்த உத்தரவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
