கி.வீரமணி

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய கவிதைகளில் நான் மிகப்பெரிய அளவுக்கு சுவைத்துச் சுவைத்து, அதை எவ்வளவு வேண்டுமானாலும் விரித்து விரித்துக் கூறலாம் என்ற பெருமைப்பட்ட வரிகள் பல உண்டு. அதில் என்னை மிகவும் ஈர்த்த கவிதைகளுள், ‘குடிஅரசு’ ஏட்டுக்காக அவர் அனுப்பிய வாழ்த்துக் கவிதையில் வரிகள் ‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி’’ – மிலேனியம் ஆயிரம் ஆண்டு என்று நாம் கொண்டாடுகிறோமே! அதை மூதாட்டியாக உருவகப்படுத்துகிறார். மூதாட்டி ஆனாலும் கூட, நகைகள் அணிவதில் நம்முடைய பெண்கள் சலிப்படைவது இல்லையே! வயது ஏறினாலும் இந்த ஆசைக்கு ஓர் எல்லை இல்லை. என்பதைப் புரட்சிக்கவிஞர் அவர்கள் எவ்வளவு அழகாக அந்த ஒரு வரியில் வைத்திருக்கிறார் பாருங்கள்! ஒரு பெண் என்று சொல்லவில்லை; ‘மூதாட்டி’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவார்!’’
இதுவரையில் கண்டுபிடித்ததே இல்லை. அதை ஜாய் ஆலுக்காசில் போய்க் கண்டுபிடிக்க முடியாது; உம்முடிபங்காருவில் அல்லது எந்த நகைக் கடையிலும் போய்க்கண்டுபிடிக்க முடியாது. யாரும் கண்டுபிடிக்க முடியாது.
புரட்சிக்கவிஞர் சொல்லுகிறார், ‘‘அவள் அணிந்திராத அணியாவார்’’
அடுத்த வரி வெறும் அணி இருந்தால் போதுமா? அது அழகு. அடுத்து அறிவை எடுத்துக் கொள்கிறார்.
அடுத்த வரி, ‘‘அவள் அறிந்திராத அறிவாவார், அவர்தான் பெரியார்’’ இந்தச் சொல்லிலே இருக்கிற ஆழம் மிகப்பெரியது!
‘அறிந்திராத அறிவாவார் என்பதை அகிலம் ஒப்புக்கொண்டிருக்கிறது. சில பதர்கள், புரியாதவர்கள், விழியிழந்த மனிதர்கள் சிலர், எப்படி யானையைத் தடவிப் பார்த்து ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள் என்பது பழைய கதையோ, அதுபோல இன்னமும் தடவிப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும், தடவிக் கொடுப்பவர்களுக்குத் தாசனாக ஆகிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் வழமையாக இருக்கிறது. அந்த வகையிலும் அவர்களுக்குப் பெரியார் பயன்படுகிறார். ஏனென்றால் பெரியார் எதிர்ப்பு என்பது அவர்களுக்குக் கூலியைப் பெறுவதற்குரிய மிக முக்கியமான ஒரு கரணையாக அமைந்து கொண்டிருக்கிறது. அதிலும் அவர்கள் பிழை செய்கிறார்கள் என்பதை விட, அதன் மூலம் பிழைக்கவும் செய்கிறார்கள். “பெரியார் என்பவர் யார்?“, “ஏன் ‘பெரியார்’ என்ற பட்டத்தை 1938 இல், மகளிர் தந்தார்கள்?“ என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டத்தை வழங்குவதற்கான காரணத்தைச் சொல்லும் போது அதில், ஒரு வரி இருக்கிறது; அவரைப் பாராட்டும் போது, ‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவர்’ என்ற வார்த்தையைச் சொல்லுகிறார்கள்.
“‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத’ அளவுக்கு அவர்கள் பணியாற்றுகிறார்கள்“ என்று முழுக்க முழுக்க அவருடைய கொள்கையை ஏற்று கொண்டவர்களும், ஏற்றுக் கொள்ளாதவர்களும் சேர்த்து, ‘பெரியார்’ என்று சொல்கிறார்கள்.
பெரியார் என்றால் யார்? என்று வள்ளுவருடைய குறளைப் பார்க்கும்போது, ‘பெரியார்’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தும் மூன்று குறள்கள் மிக முக்கியமானவை.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (குறள் 26)
இந்தக் குறளை முதலில் எடுத்துக் கொள்வோம். அதில், ‘செயற்கரியே செய்வர் பெரியர்‘
சில குறளைப் படிக்கும் போது, கடைசி வரியை முன்னால் போட்டு படித்தால், இன்னும் எளிமையாக இருக்கும்.
பெரியர் செயற்கரிய செய்வார்;
செயற்கரிய செய்கலாதார் சிறியர்
என்று வரவேண்டும்.
எல்லோரும் இந்தக் குறளைக் கையாளுகிறார்கள். இதில், மிக முக்கியமாக பார்க்க வேண்டிய கருத்து என்ன என்று சொன்னால், பெரியார் (பெரியர், பெரியோர், பெரியவர் எல்லாம் ஒரு பொருளுடையவையே! இலக்கண விதிகளுக்கு ஏற்ப பெரியார் என்றும், பெரியர் என்றும், பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர்) என்று சொல்லும்போது, அதிலே செய்தல் என்பது மிக முக்கியம். சொல்லுதல் அல்ல.
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” (குறள் 664)
என்பது மிக முக்கியம். அந்த அடிப்படையில்தான், ‘செயற்கரிய செய்தார் பெரியார்’; அவர் பேசவில்லை; செய்துகாட்டினார். அவர்தான் உண்மையான பெரியார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளுவர் சொன்னதைப் போல, சொல்லுதல் எளிது; அரியவாம் சொல்லிய வண்ணம் செய்தல்; இதையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.
செயற்கரிய செய்வார் பெரியார். பெரியார் என்பது வெறும் அலங்காரம் அல்ல; யாரை வேண்டுமானாலும் பெரியார் என்று சொல்ல முடியாது. அது வயதைக் குறிப்பதுஅல்ல; அறிவையும், அனுபவத்தையும் குறிப்பது. அப்படிப்பட்டவரை, செயற்கரிய செய்வார்; செய்வார் பெரியார் என்பதைவிட; செய்தார் பெரியார் – அதனால்தான் அவர் பெரியார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய அறிவு என்பதே அவருக்காக அல்ல; மக்களுக்காக, மக்களின் எழுச்சிக்காக! யாரும் சொல்லாத உணர்வை, ஒரே வரியிலே சொன்னவர் தந்தை பெரியார். உலகத்தில் தேடிப் பார்க்கலாம். ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’’ என்றார் பெரியார். அழகு என்பது இருக்கிறதே பல பேருக்குப் பல்வேறு சிந்தனைகள். இப்போது நீங்கள், புரட்சிக் கவிஞருடைய அந்த வரிக்குச் செல்லுங்கள்.
‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவார்!’’
அழகுக்கு அணி தேவை என்று நினைத்தார். அதைப் பெரியார் சொல்லுகிறார், ‘‘நகையை நீங்கள் அணிவது உங்களுக்கு அழகாக இருக்குமா? உங்கள் பாதுகாப்புக்குப் போதுமானதாக இருக்குமா? என்பதை மட்டும் சொல்லாமல், நாசூக்காகச் சொல்லுகிறார், மனிதனுக்கு இந்த அழகு என்பது இருக்கிறதே, அது என்ன? இதுவரையில் அழகு சாதனைங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் பெரியார் போல விளக்கம், இலக்கணம் சொன்னவர்கள் யார்? பெரியாருடைய கருத்துகளை நுண்ணிய முறையில் ஆய்ந்தால், அதை மேலும் மேலும் மேலும் ‘‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ என்று சொல்வதை போல பெரியார், ‘‘கற்றனைத் தூறும் அறிவு’’ பெரியாருடையது. என்னவென்று சொன்னால், அழகு என்பது இருக்கிறதே, அது நிரந்தரம் அல்ல; அது வளரக்கூடியது அல்ல; அது தேயக்கூடியது.
நான், திருநெல்வேலியில் ஒரு நண்பர் இல்லத்து திருமணத்தில் பேசி கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து ஒருவர் கேட்டார், ‘‘அய்யா நான் உங்களை 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். குரல் எல்லாம் அதே மாதிரிதான் இருக்கிறது. தலைமுடி சுருள் சுருளாக இருக்கும். அந்த அழகு கொஞ்சம் குறைந்து போய்விட்டதே!’’ என்று. அழகு என்பது முக்கியம் அல்ல. நடிகர், நடிகைகளாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அழகை நம்பியவர்களுக்கு, அது நிரந்தரம் அல்ல; வேண்டுமானால் ஒப்பனைகள் ஓரளவுக்குத் துணை செய்யலாம். ஆனால், ஒப்பனை ஒப்பனையாகத்தான் கருதப்படுமே தவிர, உண்மையின் இடத்தை ஒப்பனைகளால் ஒருபோதும் நிரப்ப முடியாது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தனித்துவத்துடன் “மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு“ என்றார் தந்தை பெரியார். மானம், அறிவு – இரண்டுமே தேவை மனிதர்களுக்கு! எனவே, உண்மையான அழகு, நிரந்தரமான அழகு உங்களுக்கு வேண்டுமானால், ‘மானத்தையும், அறிவையும் இழக்காதே!’ என்று ஒரு வரியிலே அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ‘‘அறிந்திராத அறிவாவார்’’
சரி ‘பெரியாருக்கு’, வள்ளுவர் விளக்கம் சொல்லிவிட்டார். அடுத்தது, பெரியாரைப் பற்றிய பிற குறள்களை எடுத்துப் பார்ப்போம்.
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்” (குறள் 443).
‘அரிய பொருள் எது?’ என்றால், விலை உயர்ந்த பொருள் அல்ல; கோகினூர் வைரமும் அல்ல. அரிய பொருள் என்றால் என்ன? வள்ளுவருடைய பார்வையில், தலைசிறந்த ‘அரியவற்றள் எல்லாம் அரிதே இப்படிப்பட்ட பெரியாரைப் பேணி’, அந்த வார்த்தை, ‘பெரியாரைக் கொள்ளுதல்’ என்பதல்ல; ‘பெரியாரைப் பேணி’ – இந்தப் ‘பேணி’ என்று சொல்வது இருக்கிறதே, அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றால், ‘பேணுதல்’ என்று சொன்னால் என்ன?, விரிவாக எண்ணிப் பார்க்கலாம். எப்படி அவரைத் தன்வயப்படுத்திக் கொள்வது? எப்படி அவரை நம்முடைய வாழ்விலே, ஒளியூட்டுவதற்கு ஒரு கலங்கரை விளக்கமாகப் பார்த்து நாம் அதை பயன்படுத்திக் கொள்வது? அந்த ஒளியை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது? நாம் எப்படி அதிலிருந்து ஒரு சிறு அளவுக்காவது பெற்று பயன்பெறுவது என்று சிந்திப்பது! பேணுதல் என்பது அவருக்காக அல்ல. மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும்; அதை ஏற்றுக்கொள்ளல் நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான். பேணுதல் மட்டும் போதாது; அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, ‘பேணி தமராக் கொள்ளல்’ – தமராக் கொள்ளல் என்றால், அவரையே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏன் பெரியாரை, ‘தந்தை பெரியார்’ என்று சொல்லுகிறோம்? ‘தமராக் கொளல்.’ உடனே கிறுக்குத்தனமாக சில பேர் கேட்கிறார்கள். அவர், என்ன தந்தையா? என்று முட்டாள்தனமாக கேட்பது, அவர்களுடைய அறிவுக் குறைபாடே தவிர, வேறில்லை! அதற்காக அவர்களை நாம் கண்டிப்பதை விட, அவர்களை நினைத்தப் பரிதாபப்படுகிறோம். ஏனென்றல், இவ்வளவு தட்டையான அறிவுள்ளவர்கள் எல்லாம் மனித சமுதாயத்திலே உலவி கொண்டிருக்கிறார்களே என்பதற்காக! போகட்டும்.
ஆகவே, அறிவாற்றல் மிக்க பெரியோர்களை வென்று, அவர்களைத் தனக்கு உற்றாராகக் கொள்ளுதல். ஒருவன் பெற வேண்டிய பேறு எல்லாவற்றிலும் தலைசிறந்த அறிவுப் பேறு என்று சொன்னார்.
அதோடு அவர்கள் நிறுத்தவில்லை. அவர்களுக்கு மாற்று என்ன? என்று சொல்லும்போது, அப்புறம், தமராக் கொண்டு விட்டால் மட்டும் போதுமா? அடுத்த கட்டத்திற்கு நம்மை அழைத்துக் கொண்டு போகிறார். அதுதான் வளர்ச்சி. லட்சியப் பயணம் என்பதை மைல் கணக்கைத் தாண்டியவுடன் நிறுத்தவில்லை. மாரத்தான் மாதிரி ஓடிக்கொண்டே இருங்கள் என்று சொல்வது போன்று, அழைத்துக் கொண்டு போகிறார்.
“தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை” (குறள் 443)
அடுத்த கட்டம். இதை வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும்.
அரியவற்றினால், தம்மை காட்டிலும் பெரியாராய் இருப்பவர்களை, உற்றார்களைப் பெற்று அவர்கள் வழி நடத்தலில், ஒருவருக்கொருவர் முக்கியம் என்பது மட்டுமல்ல, அவர்களது வலிமைகள் எல்லாவற்றையும் விட, தலைசிறந்த வலிமை எது? என்று சொன்னால், அந்தத் தமராக் கொளல் மட்டும் இல்லை; ஒழுகுதல் வேண்டும். அதன் வழியைப்பற்ற வேண்டும். பெரியார் வழியை நாம் பின்பற்றினோம் என்பதுதான், பெரியார் தொண்டர்களுக்குப் பெருமை.
‘‘சொன்னதைச் செய்வார்கள்; செய்வதையே சொல்வார்கள்.’’ பெரியார் தொண்டர்களுடைய தனித்தன்மை அதுதான்! நினைப்பதும், சொல்வதும், செய்வதும் ஒன்றுதான் அதில் மாறாதவர்கள். ஆகவே, தமரா ஒழுகுதல் என்பதுதான் மிக முக்கியம்.
‘‘வன்மையு ளெல்லாந் தலை’’ – அப்படி வருகின்றவர்களை யாரும் தடுத்துவிட முடியாது. ஒரு சுயமரியாதைக்காரருடைய வலிமை ஒரு முழு சமுதாயத்தை எதிர்த்து நிற்கிறது. எப்படி ஒரு ராணுவ வீரன், ஒரு பெரிய படையே எதிர்த்து நின்றாலும்கூட, அவர்கள் அத்தனை பேரையும் சமாளித்து, கடைசி ஒரே ஒருவனாகத் தான் இருந்தாலும், “நான் பின்வாங்க மாட்டேன்; நான் என்னை அதற்காக அழித்துக் கொள்வேன்“ என்று சொல்லக்கூடிய வலிமை என்பது அதுதான். அவனுக்கு ஆயிரம் வலிகள் ஏற்பட்டிருக்கலாம்; வலி இருந்தாலும், வலிமை குன்றாது.
அதை அழகாகச் சொல்கிறார்; பெரியாருக்கு எத்தனையோ இடைஞ்சல்கள், எதிர்நீச்சல்கள்! ஆனால், பெரியார் தொண்டர்களும் அதற்குத் தயாராகி விட்டார்கள், அதுதான் அவருக்குப் பெருமை. எனவே, பெரியார் தொண்டர்களாகிய நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய செய்தி என்னவென்றால்,
“தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை” (குறள் 443)
என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒன்று, ‘தமரா ஒழுகுதல்’; முன் குறளில் ‘தமராக் கொளல்’; முதலில், சேர்ந்துவிட்டோம்; அதற்கடுத்தது ஒழுகுதல், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்கிறது. மிக ஆழமான நுண்ணறிவோடு அதைப் பார்க்கும் பார்வைதான், மிக முக்கியமானதாகும். தமராக் கொளல்; கொள்வது முதல்படி; ஒழுகுதல் அடுத்த கட்டம்.
‘பெரியார் தந்த புத்தி’ என்று நாம் சொல்வது அதைத்தான். கொள்வது என்பது இருக்கிறதே, பெரியாரை நாம் புரிந்து கொள்வது; பெரியாரிடத்தில் நம்மை ஒப்படைத்துக் கொள்வது. பெரியார் தந்த புத்தி என்பது ஒழுகுதல். அதுதான் மிக முக்கியமானதாகும்.
அடுத்த கட்டம் ‘பெரியாரைத் துணைகோடல்’. பெரியார் யார்? வரையறைப்படுத்தி – விளக்கம் சொல்லிவிட்டார். பெரியாரால், என்ன லாபம்? என்ன பயன்? என்று சொல்லிவிட்டார்.
அடுத்தது, மனிதன் பல நேரங்களில். சொந்த ஆசாபாசங்களுக்காகப் பெரியாரைப் பிழைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்குச் சிலர் செல்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள்; அதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பல ஆசைகள், ஆசாபாசங்கள், பதவி, பணம், பல்வேறு நிகழ்ச்சிகள். இதை விளக்க வேண்டிய அவசியமில்லை; விளக்கினால் அது ஒருதனிக் கட்டுரையாக ஆகிவிடும். அந்த ஆசாபாசங்களை எல்லாம் தாண்டி, ‘பெரியாரைப் பிழையாமை’. இந்தப் ‘பெரியாரைப் பிழையாமை’ என்கிற குறளை ஆழமாக எண்ணிப் பார்க்க வேண்டும்.
“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்” (குறள் 895)
எரியும் நெருப்பில் சுட்ட பின்னும் வாழ்ந்து விடலாம். வாழவே முடியாது – பெரியார்ப் பிழைக் காணும்படி நடப்பவர்.
‘நீங்கள் வாழவே முடியாது’ என்ற சொல் மிக ஆழமானதாகும். ஒவ்வொரு சொல்லையும் இணைத்துப் பாருங்கள். ஆகவேதான், பெரியார் பிழைத்தொழுகிய பலர் வெற்றி பெற்றதில்லை. பெரியாரை மறந்தவர்களுக்கு உய்வில்லை. பெரியாரைத் தவறாகப் பேசியவர்களுக்கு உய்வில்லை. ‘உய்வில்லை’ என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு ஆழமாக எண்ணிப் பார்த்தால், அதற்கு ஒரு தனி கட்டுரையே எழுதலாம்.
ஆகவேதான், பெரியார் யார்? பெரியாருடைய பிறந்த நாளினால் என்ன பலன்? பெரியாருடைய சிந்தனைகளால் என்ன பலன்? நாம் முதலில் பெரியாரைத் தமரா கொளல். அடுத்த கட்டம் தமரா ஒழுகுதல். அடுத்த கட்டம், பெரியாரினால் ஏற்படக்கூடிய பலன். பெரியாரை மீறி, ஒரு கட்டத்தில், பெரியாரை விட நாம் ரொம்பத் தலை சிறந்தவர்கள், ‘பெரியாருக்கு என்ன தெரியும்? நாம் அதைவிட கொஞ்சம் வளர்ந்துவிட்டோம்’ என்று நினைத்துக் கொண்டு, பெரியாரைக் கேலி செய்வது, பெரியாரைப் பேசுவது என்பது இருக்கிறதே, அதனால் என்ன ஆகும் என்றால்,
“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்” (குறள் 895)
இப்பொழுது பெரியாரைப் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டால் அது பெரியாருக்காக அல்ல; நாம் மனிதர்கள் ஆவதற்காக; நம்முடைய அடிமைத்தனம் நீங்குவதற்காக; நம்முடைய அறியாமை இருட்டை நீக்கி, பகுத்தறிவு வெளிச்சத்தைப் பெறுவதற்காக! நாம், நமக்காக அல்ல; நாம் வாழக்கூடிய சமுதாயத்துக்காக என்று நினைக்கும் போது, ஒரு புதியதோர் சமூகம் காண்போம்; புதியதோர் உலகம் காண்போம்!
அந்தப் பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் பகுத்தறிவு – சுயமரியாதை உலகு!
‘‘பேசு சுயமரியாதை உலகம் காண்போம்’’ என்று சொன்னோம். அதைக் காண வேண்டும். அந்த உலகத்தில், ஜாதி இல்லை, மதம் இல்லை, பெண்ணடிமை இல்லை, மூடநம்பிக்கை இல்லை, பேதம் இல்லை, ஏற்றத் தாழ்வுகள் இல்லை, ‘அனைவருக்கும் அனைத்தும்’, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இருப்பது இருக்கிறதே,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” (குறள் 322)
என்ற ஒரு புதிய சமுதாயத்தை, அறிவினால் அமைக்க முடியும். அந்த அறிவு, துணிவினால் செயலில் இறங்க முடியும்.
அறிவும், துணிவும், எதிர்நீச்சலும், ஏகடியத்தைப் பற்றி அலட்சியப்படுத்துதலும், எந்த விலையையும் என்னுடைய லட்சியத்திற்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்ற மன உறுதியும், வலிமை பெற்றதும் பெரியாரைப் பெற்ற காரணத்தினால்தான்.
எனவே, பெரியாரை நாம் தமராக் கொள்ளுதல், பிறகு பெரியாரைத் தமரா ஒழுகுதலும், பிறகு பெரியார் அவர்களாலே, நாம் மிகப்பெரிய அளவுக்குப் பலன் பெறுவதும், கடைசியாக, பெரியாரைப் பிழைத்தால், நாம் பிழைக்க முடியாத அளவுக்கு, நம்முடைய வாழ்க்கை இருக்கும் என்று சொல்வதும், வாழ்க்கையின் பல பரிமாணத்துக்கும், பலருக்கும் வழிகாட்டுவதாகும்.
ஒவ்வொரு நாட்டிலும், இது ஒவ்வொரு வகையில் பரிமளிக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையில் அதற்குப் பொருள் விரிவாகும். அனுபவங்கள் ஆசிரியர்களாக இருந்து நமக்கு வழிகாட்டும்!
