புதுடில்லி,பிப்.25- மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் விடுமுறை அளிக்க ஒன்றிய – மாநில அரசுகளுக்கு உத்தர விட வலியுறுத்தி ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நேற்று (பிப். 24) விசாரணைக்கு வந்தது.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டால், பெண்களை வேலைக்கு எடுப் பதில் அது தயக்கத்தை ஏற்படுத்தலாம் என சட்ட மாணவர் ஒருவர் மனு தாக்கல் செய்திருப்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த விவகாரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த ஷைலேந்திர மணி திரிபாதி தரப்பு வழக்குரைஞர் விஷால் திவாரி, மாதவிடாய் என்பது உயிரியல் செயல்முறை என்றும், இதை காரணம் காட்டி பெண்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சந்திர சூட், ”நீங்கள் கூறுவதை மறுக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது என்பதையே மாணவர் குறிப்பிடுகிறார். எனவே, இந்த விவகாரத்தை கொள்கை வகுப்பாளர்களிடம் விட்டுவிடுவோம். முதலில் அவர்கள் இதற்கான கொள் கையை வகுக்கட்டும். அதன் பிறகு நாம் அதனை பரிசீலிப்போம்” என தெரிவித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ”இந்த விவகாரம் பல்வேறு கொள்கை பரிணாமங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச் சித்துறை இந்த மனு குறித்து பரிசீலித்து, மனுதாரரின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.
ஷைலேந்திர மணி திரிபாதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஷால் திவாரி, பீகார் மற்றும் கேரளாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதாகக் கூறினார். மேலும், இங்கிலாந்து, சீனா, வேல்ஸ், ஜப்பான், தைவான், இந்தோனேஷியா, தென் கொரியா, ஸ்பெயின், ஜாம்பியா ஆகிய நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் நடைமுறை அமலில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ இந்தியச் சமூகம் இந்த விவகாரத்தை இதுவரை புறக்கணித்தே வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.