விருத்தாசலம், அக்டோபர், 16: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் விருத்தாசலம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சமூகநீதி மற்றும் பெரியார் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் “சமூகநீதிக்கான பெரியார் நடை” நடைபெற்றது.
விருத்தாசலம் சந்திப்பு சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூகநீதிக்கான பெரியார் நடை தொடங்கியது. சந்திப்பு சாலை, பேருந்து நிலையம், பங்களா வீதி, காட்டுக்கூடலூர் சாலை, கடலூர் சாலை, பாலக்கரை, தென் கோட்டை வீதி, மேற்கு கோட்டை வீதி வழியே 4.50 கிலோ மீட்டர் கடந்து சேலம் சாலையில் நீதிமன்றம் அருகில் உள்ள தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் நடை நிறைவுற்றது.
நடைப்பயணத்தின் தொடக்கத்தில் நகரத் தலைவர் ந.பசுபதி வரவேற்புரை யாற்றினார். கழகக் காப்பாளர் அ.இளங் கோவன் தலைமை வகித்தார். காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் பெரியார் நடையை தொடங்கிவைத்தார். மகளிரணி பொறுப்பாளர் குண. கோமதி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில், மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், மாவட்டச் செயலர் ப.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி, விருந்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், செயலாளர் கா.குமரேசன், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.கா.இராஜேந்திரன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் சி. தமிழ்ச்செல்வன், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் த. தமிழ்ச்செல்வன் உள்பட கழகத் தோழர்கள், கருஞ்சட்டை அணிந்த தொண்டர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட தோழர்கள் தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாள் சமூகநீதிக்கான பெரியார் நடை.யில் பங்கேற்றனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் பணி முடிப்போம் எனும் வாசகத்துடன் கூடிய 50 அடி நீளமுள்ள பதாகையை கையில் பிடித்துக் கொண்டு, கொள்கைகளை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பிச் சென்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்நடை, பெரியார் காட்டிய கொள்கைப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
பெரியார் நடையின் நிறைவாக நீதிமன்றம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதிதாக இயக்கத்தில் இணைந்த அசோக் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் நன்றி கூறினார்.
