சென்னை, அக். 16- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்.15-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை மய்யம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று (15.10.2026) வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழை கொட்டியது.
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் வி.ஆர். துரை நேற்று கூறியதாவது: நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்குப் பருவமழை 15-ஆம் தேதி (நேற்று) விலகியுள்ளது. கடந்த செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த தென்மேற்குப் பருவமழை காலத்தில் 21 சதவீதம் மழை குறைவாகக் கிடைத்துள்ளது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கடந்த 2012-இல் 23 சதவீதம், 2016-இல் 20 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழை விலகியதைத் தொடர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கருநாடகா, கேரளம், மாஹே ஆகிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
தெற்கு கடலோர தமிழ்நாட்டுப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதில் தொடங்கி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அக்.16-ஆம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடும்.
