மருத்துவர் இரா.கவுதமன் புத்தகங்கள் வெளியீட்டு விழா

7 Min Read
- Advertisement -

புத்தகங்களை வெளியிட்டு இரா.கவுதமனுக்கு பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டுரை!

சென்னை, அக். 14- பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா 8.10.2026 அன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இவ்விழாவில் பங்கேற்றுப் புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவுக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில திராவிட மகளிர்ப் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, கவிஞர் தென்மாறன், ஜெ.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி “இன்று பிறந்த நாள் காணக் கூடிய முக்கிய மனிதரான மருத்துவர் இரா.கவுதமன் அதனை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டுள்ள நிலையில் மூன்று புத்தகங்களையும் எழுதி வெளியீடு செய்வதென்பது பெருஞ் சிறப்புக்குரியது” என்று குறிப்பிட்டு  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய, கடந்தாண்டு அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட்ட ‘மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்’, ‘மரணம்’, ‘விதி நம்பிக்கையை வீழ்த்திய அதி நவீன மருத்துவங்கள்’, ‘புதிய பாடம் பழைய வரலாறு’ ஆகிய புத்தகங்களைப் பற்றியும், புதியதாகத் தற்போது வெளியிடப்படும் புத்தகங்களைப் பற்றியும் குறிப்பிட்டு கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார். விழாவின் இணைப்புரையும் வழங்கினார்.

தமிழர் தலைவர் வெளியிட்ட புத்தகங்கள்

‘உடன் கட்டை ஏ(ற்)றுதல்: ‘பார்ப்பனியத்தின் ‘சதி’ வரலாறு’, ‘திருவாங்கூர் சமஸ்தானம்: மனிதத் துயரங்களும் மாறாத வடுக்களும்’, ‘ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்’ ஆகிய முத்துக் குவியல் ஒத்த மூன்று புத்தகங்களையும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைவரின் பலத்த கர ஒலிக்கிடையே வெளியிட்டார். புலவர் பா.வீரமணி தமிழர் தலைவரிடமிருந்து அப்புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பிரமுகர்கள், மருத்துவர் இரா.கவுதமனின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் வரிசையில் வந்து தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். மருத்துவர் இரா.கவுதமனின் மகன் டாக்டர் க.இனியன், மருமகள் டாக்டர் இ.பாவனா, பெயரன் டாக்டர் இ.நித்திலன் ஆகியோரும் தமிழர் தலைவரிடமிருந்துப் புத்தகங்களைப் பெற்றனர். புத்தக வெளியீட்டு விழாவின் சிறப்பம்சமாக ரூ.280 நன்கொடைத் தொகைக்குரிய இம் மூன்று புத்தகங்களும் ரூ.250க்கு வழங்கப்பட்டன.

மருத்துவர் இரா.கவுதமனுக்குப் பொன்னாடை 

மருத்துவர் இரா.கவுதமனின் 76ஆம் ஆண்டு பிறந்த நாள் (8.10.2026) முன்னிட்டு, அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்தும், புத்தகம் பரிசளித்தும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரி வித்தார். “அனைவரது வாழ்த்துக்கும் உரித்தானவர் அவர்” எனத் தமிழர் தலைவர் அறிவித்தவுடன் அரங்கில் இருந்தோர் அனைவரும் எழுந்து நின்று, கையொலி எழுப்பி, ஆரவாரத்துடன் மருத்துவர் கவுதமனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். தொடர்ந்து தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் மாதந்தோறும் வழங்கி வருகின்ற நன்கொடைத் தொகை ரூ.3700அய் விழா மேடையில் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

கழகத் துணைத் தலைவர் உரையில்…

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையாற்றினார்.

“அன்புத் தம்பி மருத்துவர் இரா.கவுதமன் என்னைவிடப் பத்து வயது இளையவர். அவரின் 76ஆம் ஆண்டு பிறந்த நாளும் இந்நிகழ்ச்சியில் சேர்ந்துள்ளது நமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. எனது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கொள்கைப் புத்தகங்கள்

“கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போன்று மருத்துவர் கவுதமனின் குடும்பம் பல் துறையினர் கொண்ட குடும்பம் என்பது சிறப்புக்குரியது. பொதுவாக டாக்டர்கள் பிசியாக இருப்பார்கள். வருமானமும் கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு வேலைப் பளு அதிகம். அவர்கள் எழுத்தாளராகவும் இருப்பார்கள் என்பது ஆச்சரியமானதுதான். தஞ்சாவூரில் டாக்டர் நரேந்திரன் என்று ஒருவர் இருக்கின்றார். அவரும் ஓர் எழுத்தாளர். தமிழ்நாடு அரசின் பரிசுகளைப் பெற்றவரும் கூட. அவை ஒரு வகையானப் படைப்புகளாக இருக்கும்.

கவுதமன் அவர்களைப் பொறுத்த வரையிலே அவரது படைப்புகள் நம்முடைய இயக்கம் சார்ந்த – கொள்கை சார்ந்த – பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகளாகும்” என மருத்துவர் இரா.கவுதமனின் படைப்புகளின் மாண்பைப் பற்றிக் கூறினார்.

அவரது புத்தகத்தில் பெண்களை உடன்கட்டை ஏற்றுதல் பற்றி உள்ளது. இறந்துவிட்ட கணவனின் உடலோடு அவரது மனைவியையும் சேர்த்து எரித்துக் கொன்ற கொடுமை இந்த இந்து மதத்தில் தவிர வேறு எந்த மதத்திலும் இருக்க முடியாது. இது இந்து மதத்தினுடைய, பார்ப்பனர்களுடையச் சதி!

1987இல் கூட, இந்த உடன்கட்டை ஏற்றுதல் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப் கன்வர் என்னும் 18 வயதுடையப் பெண்ணைத் துன்புறுத்திக், கொடுமைப்படுத்திக் கொன்றார்கள். எரித்துக் கொன்றவர்களே, “சதி மாதா கோயில்” என்று கோயில் வைத்துக் கும்பிட்டார்கள். அர்த்தமுள்ள இந்து மதத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்!

அதேபோன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதித்தார்கள். மறைத்தும் கூட அவர்கள் அந்த மேலாடையை அணிந்து கொள்ள முடியாது. முலை வரி என்று வேறு விதித்திருந்தார்கள். சமஸ்கிருத மொழிக்குச் செல்வாக்குப் புகுத்தி, மதத்தின் பேரால் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் சொல்லி மாளாதவை!

இப்படியெல்லாம் நாளும் நடத்தப்பட்ட கொடுமைகளுககு எதிராக எப்படியெல்லாம் போராட்டங்கள் நடத்தப்பட்டன – இக்கொடுமைகள் மாய்க்கப்படுவதற்கு எப்படியெல்லாம் பெண்கள் தியாகம் செய்ய வேண்டியிருந்தது, உயிரைப் பறி கொடுக்க வேண்டியிருந்தது என்பனவற்றைப்பற்றி எல்லாம்  விரிவாக இப்புத்தகங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவருக்கு நமது பாராட்டுகள்! என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஏற்புரையில்…

மருத்துவர் கவுதமன் தமது ஏற்புரையில் கூறியதாவது: கடந்த ஆண்டில் எனது பிறந்த நாளின் போது நான் எழுதிய நான்கு புத்தகங்களை வெளியிட்டேன். அப்போது எனக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இன்றைக்கு எனது மூன்று புத்தகங்களை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்.

‘பெரியாரியல்’ வழி, வாழ்க்கை

மனித நேயத்தை முன்னிலைப்படுத்தி வாழ வேண்டுமென்று தந்தை பெரியார் அவர்கள் கற்றுக் கொடுத்த வழியிலே இன்றுவரை நான் வாழ்ந்து வருகின்றேன். என்னுடைய வாழ்விணையரை இழந்தது எனக்கு மிகவும் துன்பத்தைத் தந்தது. மிகவும் ஒடிந்து போனேன். அப்போது என்னுடைய மிகுதி வாழ்க்கையை நம்முடைய சமுதாயத்திற்கு முழு வகையில் பயன்படுத்திட வேண்டுமென்று விரும்பினேன்.

நான் பெரியாரியலை என்றும் பின்பற்றி வாழ்ந்து வருபவன். அந்த அடிப்படையில் எப்போதும் புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. “உங்களுக்குத் தெரியுமா?” என்று ஒரு பாரா அளவுக்கு எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் கூடத் தவறாது 1800 நாள்கள் கடந்து எழுதி வருகின்றேன். திராவிட இயக்க வரலாறு பற்றி –  “வரலாறு அறிவோம்” என்பதைக் கூட இன்று வரைக்கும் தொடர்ந்து எழுதி வருகிறேன் என்று எழுதுவதில் தான் முனைந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான கொடுமை

‘சதி’ எனப்படுகின்ற கொடுமையைப் பற்றி நினைக்கும் போது இராஜாராம் மோகன்ராய், வில்லியம் பெண்டிங் பிரபு ஆகிய இரண்டு பேரைத்தான் நமக்குத் தெரியும். இதற்குப் பின்னால் நின்று பார்ப்பனர்கள் செய்த சதிகள்தான் இந்தப் புத்தகங்கள் உருவானவைக்குக் காரணமாக அமைந்தன. இதற்கு உரிய ஆதாரங்களைத் திரட்டுவதற்கு நான் நிறைய படிக்க வேண்டியிருந்தது. சதியைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம் சிறிய ஒன்றுதான் என்றாலும் அதன்படிப் பெண்களை எந்த அளவிற்குக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடியும்.

ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

குன்னூரில் உள்ள எனது மருத்துவமனையை இரவு 8.30 மணிக்கெல்லாம் மூடி விடுவோம். வீட்டிற்குச் சென்று இரவு 1 மணி வரைக்கும் படிப்பேன், எழுதுவேன். அப்படி எழுதப்பட்ட புத்தகங்கள் தான் இவை. சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் எழுத வேண்டுமென்றால் நிறைய படிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், அடிப்படையாகவும் அமைந்து என்னை ஊக்கப்படுத்தி வழிநடத்தி வருபவர் ஆசிரியர் அவர்கள். என்னுடைய வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டியாக நான் ஏற்றுக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி என்று தமது ஏற்புரையில் மருத்துவர் இரா.கவுதமன் குறிப்பிட்டார்.

பங்கேற்றோர்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், மருத்துவர் ஜெயக்குமார், டாக்டர் மீனாம்பாள், வா.மு.சே. திருவள்ளுவன், கவிஞர் கண்மதியன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், சோ.சுரேஷ், தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராசு, செ.ர.பார்த்தசாரதி, கோவீ.ராகவன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வேலூர் பாண்டு, டி.ஆர்.சேதுராமன், கி.இராமலிங்கம், புரசை சு.அன்புச்செல்வன், பூவை தமிழ்ச்செல்வன், க.இறைவி, பசும்பொன், வீ.கே.ஆர்.பெரியார் செல்வி, சி.வெற்றிச்செல்வி, சுதா அன்புராஜ், தங்க.தனலட்சுமி, பூவை. தமிழ்ச்செல்வன், கோ.தங்கமணி, இளவழகன், சா.தாமோதரன், க.செல்லப்பன், மற்றும் ஏராளமானத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *