பிற இதழிலிருந்து…

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கின்றனர்
ஜப்பானில் மய்யம் கொள்ளும் பெரியார்!
கடல் கடந்து பரவும் திராவிடம்!

 

“எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீஸாய்–ஏன் என்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்–இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய் எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்’’ – என்று தந்தைப் பெரியார் பற்றி கவிதைப் பாடியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். உலகச் சிந்தனையாளர்கள் வரிசையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பணி உயர்வானது.

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள சாக்ரடீஸ் சிலையைப் பெரியார் தன் அய்ரோப்பிய பயணத்தின் போது கண்டார். இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகளுக்கும் மிகப் பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியனுக்கும் பெரியார் மேற்கொண்ட பயணம் அவருடைய பொதுவாழ்வில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் சமுதாய மறுமலர்ச்சிக்கும் துணை நின்றது.

பெரியார் நடத்திய பெரும் புரட்சியையும் அதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும் எப்போதும் போற்றுகின்ற இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். பெரியார் மறைந்தபோது அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கி, இறுதி ஊர்வலம் நடைபெறச் செய்தவர் அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் கலைஞர். திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கும் பணியாணை வழங்கியவர் திராவிட நாயகர்– திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாளை சமூக நீதி நாளாக அரசாணை வெளி யிட்டவர் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர்.

2026 செப்டம்பர் 17ஆம் நாள் தி.மு.க.வின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சமூக நீதி நாள் உறுதிமொழியை தி.மு.க. தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றனர். காய்ச்சலால் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் பெரியார் பணி முடிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உறுதிமொழியேற்றார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள்.

பெரியாரின் 148ஆம் பிறந்த நாளையொட்டி, தாயக் கழகமான திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நடை எனும் பகுத்தறிவு விழிப்புணர்வுப் பேரணிகள் நடைபெற்றன. செப்டம்பர் 19ஆம் நாள் தஞ்சாவூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் நடையைத் தொடங்கி வைத்தபோது, தி.மு.க. நிர்வாகிகள் பலரும் அதில் பங்கேற்று,கொள்கை உறுதியினை வெளிப்படுத்தினர்.

திராவிட மாதமான செப்டம்பர் மாதம் முழுவதும் பல மாவட்டங்களில் நடந்த பெரியார் நடையிலும், அக்டோபர் 4 அன்று சென்னையில் நடந்த பெரியார் மாரத்தானிலும், தி.மு.கழக நிர்வாகிகளான இளந்தலைமுறை திராவிடச் சிந்தனையா ளர்களான ஜென்ஸீ தி.மு.க.வினர் அதிகளவில் பங்கேற்றனர். மாவட்டங்கள் தோறும் கொள்கைக் குடும்பங்கள் சந்திக்கும் விழாவும் பெரியாரின் 148ஆம் பிறந்த நாளையொட்டிச் சிறப்பாக நடைபெற்றன.

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமே பெரியார் இன்று சொந்தமாகி விட்டார். டில்லிப் பல்கலைக்கழக மாணவர்களும், கொல்கத்தா இளைஞர்களும், மும்பை இளந்தலை முறையும் பெரியாரின் படங்களுடன் ஊர்வலம் போவதைக் காண முடிகிறது. இதன் அடுத்த பாய்ச்சலாக, ‘பெரியாரை உலகமயமாக்குவோம். உலகைப் பெரியார் மயமாக்குவோம்’ என்ற இலட்சிய முழக்கத்துடன் ஆசிரியர் அய்யா அவர்கள் முன்னெடுத்து வரும் செயல்பாடுகள் பரவலானத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல பகுதி களிலும் பெரியார்க் கொள்கைகளையும் திராவிட இயக்கத் தின் பங்களிப்பையும் விளக்கும் கருத்தரங்குகள்–புத்தக வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள புகழ்மிக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் செயின்ட் ஆண்டனி கல்லூரியில் பெரியாரின் உருவப் படத்தைத் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சரான தி.மு.க. தலைவர் அவர்கள் திறந்து வைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடை பெற்றது.

உலகம் முழுவதும் பெரியாரும் திராவிடமும் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் பெருமைமிகு நிகழ்வு நடைபெறுகிறது. BRIDGE 2026 எனும் 5ஆம்– பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு அக்டோபர் 11, 12 ஆகிய நாட்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள்சங்கம் ஒருங்கிணைக்கும் இந்த விழாவில்,  தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு முன்னாள்துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தி.மு.க தகவல்தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பொருளாதார வல்லுநர் டாக்டர் விஜயபாஸ்கர், திராவிட இயக்க ஆய்வாளர் விக்னேஷ் ராஜாமணி, மனித உரிமை எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இந்த இருநாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

டோக்கியோ மனித உரிமைச் சங்கத்தின் தலைவரும் ஜப்பானில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காப்பவருமான கோரோ ஒஷிதா, டாக்டர் ஃபுகாஓ ஜூனிச்சி ஆகியோர் இதில் பங்கேற்பவர்களில் முக்கியமானவர்கள். மேலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, டான்சானியா நாடுகளிலிருந்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெரியார் பன்னாட்டு மனிதநேயர்களின் அய்ந்தாம் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

பெரியாரின் வாழ்க்கையையும் அவரது தொண்டினையும் ஜப்பான் மொழியில் வெளியிட்ட வர்களான திராவிட இயக்க உணர்வாளர்கள் டோக்கியோ செந்தில், கமலக்கண்ணன் ஆகி யோரும் ஜப்பான் வாழ் தமிழர்களான குன்றாளன், கணேஷ் ஏழுமலை உள்ளிட்ட பலரும் மாநாட்டுப் பணிகளைப் பல மாதங்களாகத் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பான் நாடு பழைமையானப் பண்பாட்டைக் கொண்டது. தாய்மொழிக்கு முன்னுரிமைத் தருவது. அறிவியல்–தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. திராவிடம் என்பது மொழி–இன உரிமைகளுடன் சமூகநீதிக் கொள்கைகளைப் பரப்பி, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் சிந்திக்கச் செய்கின்ற இயக்கம். ஜப்பான் மண்ணில் பெரியாரையும் திராவிடத்தையும் முன்னிறுத்தி நடைபெறும் மாநாடு இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

இந்த மாபெரும் திராவிட நிகழ்விற்கு – ஜப்பானின் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ரா.செந்தில்குமார், வி.குன்றாளன், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம் ஆகியோர் நாற்பதுக்கும் மேற்பட்ட ஜப்பான்வாழ் திராவிட உணர்வாளர்கள் உதவியுடன் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

நன்றி: ‘முரசொலி’ 10.10.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *