நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இந்தியாவில் களவுபோன ஜனநாயகத்தை மீட்பதற்காக நாடெங்கும் பல்வேறு கட்சியினரும்,  இளைஞர்களும், மாணவர்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் இந்த அவலநிலைக்குக் காரணமானவர்கள் யார் என்பதை இந்தியாவே அறியும்; உலகமும் அறியும்.

இந்தக் கொதிநிலையில் எந்தப் பதிலும் அளிக்காத, பதில் சொல்லாத ஒன்றிய அரசும், பிரதமரும் வேறொரு ‘முக்கியமான’ வேலையில் மூழ்கியுள்ளனர்.

அரசுத் தலைவராகத் திரு.நரேந்திர மோடி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். அதற்காகப் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க! இந்தியத் தலைவர்கள் பலரிடமிருந்தும், உலக நாட்டுத் தலைவர்களிடமிருந்தும் வாழ்த்துகளைக் கேட்டுப் பெற்று ஊடகங்களில் செய்தி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமராகி 12 ஆண்டுகள் தானே ஆகிறது என்று யோசிக்கக் கூடாது. அதற்கு முன்பு குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகள் இருந்ததையும் சேர்த்துத் தான் இந்தக் கொண்டாட்டமாம். நல்வாய்ப்பாக அதற்கு முன்பு அகமதாபாத் மேயராக இருந்திருக்கவில்லை – இருந்திருந்தால் அதையும் கணக்கில் சேர்த்திருப்பார்கள்.

எல்லோரும் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் சாதனையைப் பற்றிப் பேசும்போது நாமும் அதைத் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக, அத்வானியின் சீடராக அறியப்பட்டவர் நரேந்திர மோடி.

2001-இல் குஜராத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பா.ஜ.க.வின் கேசுபாய் பட்டேல் அரசாங்கம் பூஜ் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தை சரியாகக் கையாளவில்லை என்பதற்காகவும், ஊழல் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையும், அடுத்து நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு, அவரை பதவி விலகச் செய்து நரேந்திர மோடியை குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தது பாஜக.

அவர் பொறுபேற்றவுடன் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கூட்டத்தின் ஆட்டம் குஜராத்தில் வலுப்பட்டது. குஜராத் குறித்து அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கொடுத்த போலி விளம்பரங்களைத் தவிர, 2001 முதல் 2013 வரை குஜராத் குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டது எல்லாம் ‘கோத்ரா ரயில் தீ விபத்தைக்’ காரணம் காட்டி, அங்கு அரங்கேறிய மத வன்முறைகளும், இசுலாமியர்கள் மீதும், அவர்களின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களும் கொலைகளும்தான்.

அத்வானியை அடியொற்றி அரசியல் செய்து வந்த நரேந்திர மோடி அவரைப் பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட்டுகளின் நட்பைப் பெற்று, ஆர்.எஸ்.எஸின் பார்வையை தன் மீது திசை திருப்பி, குஜராத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்து, இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் சுவிஸ் வங்கியில் இருந்து அந்தப் பணத்தை மீட்டு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று ‘ஜூம்லா’ வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, ஆட்சியைப் பிடித்தார்.

அதற்குப் பின்பு முறையற்ற ஜிஎஸ்டி அமல், பண மதிப்பிழப்பு எனும் பெயரில் செயற்கையான பொருளாதார நெருக்கடி, நாடெங்கும் மதவெறி ஆட்டம், பாசிச நடவடிக்கைகள், கருத்துரிமைப் பறிப்பு, மாநில உரிமைப் பறிப்பு, ‘நீட்’ திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை என்னும் பெயரில் கல்வி உரிமை மறுப்பு, கார்ப்பரேட்டுகளின் கொள்ளை, கோடிக்கணக்கில் கடன் வாங்கிய கார்ப்பரேட் முதலைகளுக்குக் கனிவுடன் கடன் விலக்கு, எங்கெங்கும் தனியார் மயம் – ஏர் இந்தியா உட்பட அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை என்று கடந்த 12 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் சாதனைகளின் பட்டியல் நீளமோ நீளம்!

இந்த அளப்பரிய சாதனைகளுக்காகத் தான் ‘மோடி அரசு’ ‘தலைவராகி 25 ஆண்டுகள் ஆகின்றன’ என்று கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த 25 ஆண்டுகளில் அவர் ஆற்றியுள்ள மேற்சொன்ன சாதனைகளையும் இன்னும் விடுபட்டிருக்கும் நாட்டின் உயிர்ப் பிரச்சினைகளையும், நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவரின் வெள்ளிவிழா ஆண்டை நாமும் கொண்டாடுவோமாக!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *