மதுரை, அக். 10- கைபேசி செயலி மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
மதுரை மேலூரைச்சேர்ந்த சாந்தகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எப்.கியூ.எல். என்ற கைபேசி செயலி மூலமாக முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல மாவட்டங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்து உள்ளனர்.
இதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள், ஏழை, நடுத்தர வகுப்பினர் மற்றும் கூலி தொழிலாளர்கள் தான். இந்த செயலி கிரிப்டோகரன்சி, அமெரிக்க டாலர் போன்ற பன்னாட்டு நிதி சார்ந்தவற்றுடன் தொடர்பு இருப்பதாலும், இணையத்தளத்தை பயன்படுத்தி மோசடி நடந்து இருப்பதாலும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.அய்.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் (8.10.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரரும் பாதிக்கப் பட்டவர் என்பதால் அவர் தனது கோரிக்கை தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய இயலாது. அதுமட்டுமல்லாமல், இந்த கைபேசி செயலி மூலம் நிதி மோசடி வழக்கினை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் முறையாக விசாரித்து வருகின்றனர். இதனால் இந்த நிதி மோசடி வழக்கை சி.பி.அய்.க்கு மாற்ற தேவையில்லை. மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆசை வார்த்தை கூறி ஒரு கும்பல் மனுதாரர் உள்ளிட்ட ஏராளமானவர்களை ஏமாற்றி உள்ளனர். மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாகதொடர்ந்தஇந்தவழக்கை தள்ளுபடி செய்ய நேர்ந்தால், இந்தவிவகாரத்தை நாங்கள் தாமாக முன்வந்து விசாரிக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்தனர். விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் தற்போதைய விசாரணை தொடர்பான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்
