சென்னை, அக்.10- தகுதியானவர்களுக்கு கூட பயனளிக்காத நிலை உள்ளதால், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் தடையின்றி கிடைப்பதற்காக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை-எளிய மக்கள், அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக பெற்று வருகின்றனர். தற்போது இத்திட்டத்தின் மூலம் பயன்பெற பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் ஊதிய மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும்போது இந்த வரம்பு மிக மிக குறைவானது.
இதனால், குறைந்த ஊதியம் பெறும் தகுதியானவர்களுக்கு கூட இந்தத் திட்டம் முழுமையாக பயனளிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காப்பீட்டு அட்டை இல்லை என்றால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் கூட எம்.ஆர்.அய். ஸ்கேன், சி.டி. ஸ்கேன் போன்ற அதிநவீன பரிசோதனைகளுக்கு ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். வருமான உச்சவரம்பு காரணமாக காப்பீட்டு அட்டை கிடைக்காத சில ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாறிவரும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உடனடியாக உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் உட்பட அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!
சென்னை, அக். 10- தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலராக ஏ.கார்த்திக்கும், மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானியும் நியமிக்கப்பட் டுள்ளனர். வேளாண் துறை செயலராக என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
உள்துறை செயலராக இருந்த கே.மணிவாசன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் செயல்படுவார்.
மேலும் மின்வாரியத் தலைவராக இருந்த அருண்ராய், நிதித்துறை (செலவினப் பிரிவு) செயலராகவும், அப்பதவியில் இருந்த என்.வெங்கடேஷ், வேளாண் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் (சிட்கோ) தலைவர் ஏ.கார்த்திக், உள்துறை செயலராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சிவ கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராகவும், அப்பதவியில் இருந்த ஆர்.வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா, ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது மின் வாரிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ராஜேஷ் லக்கானி, அண்மையில் ஒன்றிய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நிலையில், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த திமுக ஆட்சியின் தொடக்கத்தில், மின்வாரிய தலைவராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில்
வடகிழக்குப் பருவமழை
அக்.17ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!
அக்.17ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!
சென்னை, அக். 10- தமிழ்நாட்டில் அக்.17ஆம் தேதி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை 20 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கடந்த ஏப்ரல் முதலே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல்வேறு நீர்த்தேக்கங்கள், ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, வீராணம் உள்ளிட்ட ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கனஅடி ஆகும்.
ஆனால் தற்போது 4,730 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 35.77 சதவீதம் ஆகும். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் நீர் தேவையை பூர்த்தி செய்ய வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
நாட்டில் தென்மேற்குப் பருவமழை விலகி வருகிறது. ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் விலகிவிட்டது. தற்போது மகாராட்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கருநாடகா, தெலங்கானா, ஒடிசாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விலகி வருகிறது. அதைத் தொடர்ந்து, அக்.17ஆம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மய்ய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அந்தமான் கடல் பகுதியில் அக்.11ஆம் தேதி (நாளை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதற்கடுத்து வரும் 4 நாட்களில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்கும். இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டு, பின்னர் 17ஆம் தேதி வடகிழக்கில் இருந்து தமிழகம் நோக்கி காற்று வீசும். அதுமுதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
