புதுடில்லி, அக். 09- தலைநகர் டில்லியில் தொடர் போராட் டங்களால் எழுந்த அசாதாரண சூழல் காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் இசட் பிளஸ் பாதுகாப்பில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
நாடு முழுவதும் 20 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) நிறைவு பெற்றுள்ளது. இதில் 13 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எஸ்ஐஆர் திருத்தப் பணியின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டார். வாக்குத் திருட்டில் ஈடுபட்ட அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி டில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த 6-ஆம் தேதி டில்லி அசோகா சாலையில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தை ‘இண்டியா’ கூட்டணி தலை வர்கள், தொண்டர்கள் முற்றுகை யிட முயன்றனர். அன்றைய நாள் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டது.
டில்லி நியூ மோதி பாக் கால னியில் ஞானேஷ் குமாரின் வீடு உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த வீட்டின் முன்பு இண்டியா கூட்டணி தொண்டர்கள் குவிந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேசம் ஆக்ராவின் விஜய் நகரில் ஞானேஷ் குமாரின் பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டை காங்கிரஸ், சமாஜ்வாதி தொண்டர்கள் அண்மையில் முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து ஆக்ரா வீட்டில் மாநில காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதனிடையே, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் தொடங்கப்பட்டது. இண்டியா கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டங்களால் டில்லியில் அசாதாரண சூழல் எழுந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் தீவிரவாதத் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மத்திய ஆயுத போலீஸ் படையைச் சேர்ந்த (சிஏபிஎப்) 7,000 வீரர்களை டில்லிக்கு வரவழைக்க ஒன்றிய உள்துறை உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் நேற்று முதல் விமானங்களில் டில்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
டில்லி காவல் துறை பாதுகாப் புக்கு 15,000 காவல்துறையினர் நியமித்துள்ளது. அவர்களோடு இணைந்து சத்தீஸ்கரின் சிஏபிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் காஷ்மீர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் டில்லிக்கு வரவுள்ளனர்.
தற்போதைய நிலையில் டில்லி காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 20,000 வீரர்கள் டெல்லியின் முக்கிய பகுதிகளில் இரவு, பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த சில நாட்களில் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 23,000 வீரர்கள் டில்லியில் குவிக்கப்பட உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இதற்கு அடுத்தபடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. அவருக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள் ளது. அதன்படி இசட் பிளஸ் பாதுகாப்பில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
3-ஆம் நாளாக போராட்டம்
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் டில்லியில் நேற்று 3-ஆவது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. டில்லி கன்னாட்பிளேஸில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேருந்துகளில் காந்தி நினைவிடத்துக்குச் சென்றனர். அங்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், போராட்டம் இன்று தொடரும் என்பதால், போக்குவரத்து மாற்றம், குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
