ஒரு நூற்றாண்டு கழித்து பெரியாரின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ்!
இரண்டு நாள்கள் முன்பு சத்தீஸ்கரிலுள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 85ஆவது காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர், பெண்கள், இளைஞர் மற்றும் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் செயற்குழுவில் 50 சதவீத இடங்கள் வழங்கப்பட வழி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டதிட்டங்களில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டு களுக்கு முன்பே, அப்போது காங்கிரஸ் தலைவராக பெரும்பணியாற்றிய பெரியார் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றதும், அவருடைய முயற்சி ஒவ்வொரு முறையும் அக்கட்சியிலிருந்த பார்ப்பன ஆதிக்கத்தால் தடுக்கப்பட்டதும் வரலாறு ஆகும். ஆக, பெரியாரின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை ஒரு நூற்றாண்டு கழித்து ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) வேண்டு கோளை ஏற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெரியார், சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1922-2023, 1924 மற்றும் செயலாளராக 1925 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பு வகித்தார். 1920இல், கட்சிப் பொறுப் புகள் அனைத்து வகுப்பினருக்கும் விகிதாச்சார முறைப்படி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மாநாட்டில் பெரியார் தீர்மானமாகக் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் தஞ்சாவூர், திருப்பூர், சேலம் மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் இந்த விகிதாச்சார ஒதுக்கீடு கோரிக்கையை அவர் முன் வைத்தபோது அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.
1925இல் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில் ’பொது நலன் கருதி’ அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறி இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை அடங்கிய பெரியாரின் தீர்மானத்திற்கு அப் போதைய கட்சித் தலைவரான திரு.வி.கலியாண சுந்தரம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். தீர்மானத்தை அனுமதிக்கும் நிபந்தனையின்படி பெரியார் ஆதரவாளர்களால் 50 உறுப்பினர் களின் ஆதரவுக் கையெழுத்து பெறப்பட்டிருந் தும், அம்மாநாட்டில் தீர்மானத்தைப் படிக்கக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து பெரியார் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறி, அதே காஞ்சிபுரத்தில் மாற்றுக் கூட்டத்தை நடத்தினார். சுய-மரியாதை இயக்கத்திற்கு இந்த கூட்டமே வித்தாக மாறியதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரசில் இணைய பெரியாரை சிலர் ஒப்புக்கொள்ள வைத்தபோது, அவர் உறுதி யுடன் இருந்த சமூக நீதிக் கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க காங்கிரஸ் தகுந்த தளமாக அமையும் என்று அவரிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் அதிகார மய்யங்களில் பொறுப்பேற்று செயல் படும் நிலையில் கூட, தன்னுடைய சமூக நீதிக் கொள்கையை சிறிதும் முன்னெடுக்க இயலாத படி அவர் முடக்கப்பட்ட அனுபவமே அவருக்கு ஏற்பட்டது. கட்சிப் பொறுப்புகளை இட ஒதுக் கீட்டு அடிப்படையில் அனைத்து வகுப்பின ருக்கும் விகிதாச்சார முறையில் வழங்க வழி செய்ய முனைந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சிக் குள் போதிய ஆதரவைத் திரட்ட இயலவில்லை.
ஆகவே, பெரியார் 1925இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுய-மரியாதை இயக் கத்தைத் துவங்கினார். அதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் அழைக்கப்பட்டு, தமது சுய-மரியாதை இயக் கத்தை நீதிக் கட்சியுடன் இணைத்து, 1944இல் அதன் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று மாற் றினார். திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் கிளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், அதிலிருந்து 1972இல் துவங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரு கட்சிகளும், 1967இல் இருந்து தமிழ் நாட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சி செய்து வருகின்றன. பின்னர் தோன்றிய பல சிறிய திராவிட கட்சிகளும் உ:ள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியின் விளைவாக, மக்கள் நல ஆட்சி முறையைக் குறிக்கும் ‘திராவிட மாடல்’ என்ற சொற்றொடர் புதிதாக பயன் பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
98 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் முன் வைத்த கோரிக்கையை இன்று காங்கிரஸ் கட்சி ஏற்றுள்ளதை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ”இது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வகுப்புவாதக் கோரிக்கை என்று கூறி புறந்தள்ளப்பட்ட அதே கோரிக்கையை, ஏற்கப்பட வேண்டிய கோரிக்கையாக இப்போது காங்கிரஸ் பார்க்கிறது. இது வரவேற்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(நன்றி: டெக்கான் கிரானிக்கில் – 27.2.2023)