இரு மொழிக் கொள்கைக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தூத்துக்குடி, அக். 3- இருமொழிக் கொள்கைக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் (எஸ்எச்-93) இரு நாள்களுக்கு முன்பு புதிய வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டது.

இதில், திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு எத்தனை கிலோ மீட்டர், எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

முதலில் தமிழ் மொழியிலும், அடுத்ததாக ஹிந்தி மொழியிலும், மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் ஊர்களின் பெயர்கள் எழுதப் பட்டிருந்தன. வழிகாட்டு பலகையில் ஹிந்தி மொழி இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த வழிகாட்டி பலகை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர் களும் தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த வழிகாட்டு பலகையில் இருந்த ஹிந்திப் பெயர்கள் 1.10.2026 அன்று இரவில் அவசர, அவசரமாக ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன.

இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் பூமிநாதன், உதவிப் பொறியாளர் முத்துலட்சுமி ஆகியோர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (எஸ்எச்-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் ஹிந்தி எழுத்துகள் உடனடியாக நீக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி இடம் பெற காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *