ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கேள்வி 1: தாங்கள் மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகளை ‘விடுதலை’யில் படித்து அதிர்ந்து போனோம். இத்தனைக் கொடுமைகளையும் எப்படி எதிர்கொண்டீர்கள்…?

பதில் 1: தந்தை பெரியார் என்ற அறிவுத் தந்தை தந்த நெஞ்சுரத்தால் எதிர்கொண்டோம் –  ஆனாலும் அது எமது வாழ்வின் “சிறப்புமிகு” காலம்;  எப்படியெனில், எந்தத் துன்பம் வந்தாலும் அதை ஏற்று, சந்தித்துக் காட்டிட அருமையான வாய்ப்பு அல்லவா அது!

இனி எதிர்காலத்தில் அடக்குமுறைக் கொடுமைகள் எவை வந்தாலும் ‘மிசா’வை விட மோசமாக அமையாது என்பதால் வாழ்வில் கற்றுக்கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், நல்ல நெஞ்சுரம் பெற்றிடவும், உள்ள உறுதியை வலுப்படுத்திடவும் அந்தப் பாடம் “சிறப்பானது” தானே!

  • • •

கேள்வி 2: “ஆசிரியர் வீரமணி அவர்கள், தமிழ்நாட்டு மக்களால் மதிக்கப்படக்கூடிய மிகச் சிறந்த தலைவராக இருக்கின்றார்” என்று, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தஞ்சையில் நடந்த, பழ.நெடுமாறன் நூல் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே..?

– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 2: அவருக்கு மிக்க நன்றி. அதற்கு முழுமுதற்காரணம் நானல்ல. காரணமும் காரியமும் எமது அறிவு ஆசான் தந்தை பெரியார் – அந்தப் புத்தரின் வரலாற்றில் சாதாரண ஆனந்தனுக்கும் ஓர் இடம் உண்டு. இல்லையா?

  • • •

கேள்வி 3: கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 111 பேர் வேறு கட்சிக்குத் தாவியுள்ளனர். இந்த விஷம் தற்போது தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது. இதற்கு முடிவு கட்டி ஜனநாயகத்தைக் காத்திட தலைமைத் தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றால் ஏதும் செய்துவிட முடியாது, மக்கள் மன்றத்தினால்தான் முடியும் என்பதால் இவற்றிற்காக நடைபெறும் இடைத் தேர்தல்களில் கட்சித் தாவலை ஊக்குவித்தவர்களை தோல்வி அடையச் செய்வதுதான் கட்சித் தாவியவர்களுக்கும், தாவல் சிந்தனை உள்ளவர்களுக்கும் சரியான பாடமாக இருக்கும் என்பது அரசியல் பொதுப் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளதே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 3: அதைத்தான் நமது பிரச்சாரப் பரப்புரையில் தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தலில் வாக்காளர்களிடையே வற்புறுத்தி விட்டு வந்தோம்; சொல்லிக் கொடுப்பது ஆசிரியர் கடமை; வாக்காளர் ஏற்பதைப் பொறுத்தது!

  • • •

கேள்வி 4: ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு வெளியிட்டுள்ள 9ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடத்தில் “இஸ்லாமிய மன்னர்கள் கொடுமைக்காரர்கள்” என்று திணித்துக் கூறியுள்ளார்களே…?

– என்.உதயசந்திரன், செங்கம்

பதில் 4: இன்னும் மோசமான வரலாற்றுப் புரட்டுகள் உள்ளன. இதை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டும்; அநீதி அப்போதுதான் அம்பலமாகும். ஆர்.எஸ்.எஸ். மோடி ஆட்சியின் “சாதனைகள்” – இன்று கல்வித்துறை உள்பட எங்கும் காவி –  எதிலும் காவி!

  • • •

கேள்வி 5: வருகின்ற ஆண்டில் நூற்றாண்டு (1.10.2027) காணும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தங்களோடு கொண்டிருந்த நட்பு எத்தகையது?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 5: அவரைப் பலமுறை சந்தித்த போதெல்லாம், குறிப்பாக அவர் தமிழ்நாடு ஜனதாதள கட்சியில் (வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி)பொறுப்பேற்றிருந்தபோது அதிகமாகச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம். எல்லாவற்றையும் விட அவரது நடிப்பு மிகச் சிறந்தது என்பதைக் கண்டு, தந்தை பெரியார் அவர்கள் அவருக்கு “சிவாஜி” என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தது – தந்தை பெரியாரது முன்னோக்குக்கு, வேறு என்ன ஆதாரம் வேண்டும் நண்பரே.

  • • •

கேள்வி 6: த.வெ.க. ஆட்சியின் அமைச்சர் அருண்ராஜ், அ.இ.அ.தி.மு.க.விலிருந்து ஒ.பி.எஸ். வெளியேற்றப்பட்டது போன்று, பொதுக்குழு அங்கீகாரத்தோடு எடப்பாடி பழனிச்சாமியும் வெளியேற்றப்படுவார் என்று கூறியுள்ளது எந்த அடிப்படையில்…?

– மு.மோகன், திருத்தணி

பதில் 6: வைத்தியரே, முதலில் உங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது அமைச்சர் நாற்காலி உறுதியானதா? எப்படி என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.

  • • •

கேள்வி 7: ‘ஃபிளை துபாய்’ விமானத்தைக் கடத்த முயன்றபோது துணை விமானியால் கத்திக் குத்துக்கு உள்ளாக்கப்பட்டும் திறம்படச் செயல்பட்டு பயணியரைப் பாதுகாத்த இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாரியின் தீரம் பற்றிய தங்கள் கருத்து?

– செந்தில், மாங்காடு

பதில் 7: பாராட்டி வரவேற்கின்றோம். தன்னை வருத்திக்கொண்ட நிலையில் விமானத்தையும், 172 பயணிகள், பணியாளர்களையும் காப்பாற்றிய வீரம் – உச்சிமோந்து மெச்சிக்கொள்ள வேண்டிய ஒன்றல்லவா!

  • • •

கேள்வி 8: எஸ்அய்ஆர் முறைகேடு விவகாரத்தில் அக்.6இல் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடப் போவதாக ‘இந்தியா’ கூட்டணி அறிவித்துள்ளதே – இது எந்த அளவில் பயனளிக்கும்?

– சண்முகநாதன், சத்திரப்பட்டி

பதில் 8: ஒரே நாளில் முடிந்துவிடுவதல்ல என்றாலும், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஓடவில்லையா? நிச்சயம் காலக் கண்ணாடி அதனைக் காட்டும்.

  • • •

கேள்வி 9:  நீங்கள் 10 வயதில் பொதுக்கூட்ட மேடை ஏறினீர்கள் என்றும், ஒரு சிலர், நீங்கள் மேடை ஏறியது 11 வயதில் என்றும் சொல்லுகிறார்களே, நீங்கள் பொதுக்கூட்ட மேடை ஏறியது 10 வயதிலா? 11 வயதிலா?

– ஜான்சன், மயிலாப்பூர்

பதில் 9: 10 வயது என்பதே சரியானது. ‘10 வயது பகுத்தறிவுச் சிறுவன் வீரமணி’ என்று அச்சிட்டத் துண்டு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கூட்டம் கடலூர் O.T.யில் (முதுநகரில்) ‘திராவிட நாடு’ வார இதழுக்கு நிதி திரட்ட எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களின் முயற்சியால் செட்டிக்கோயில் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் என்னை மேஜை மீது நிற்க வைத்து நான் பேசியதே அது.

அறிஞர் அண்ணா கூட்டத்தில் எனது அரங்கேற்றம்.

1933 டிசம்பர் 2ஆம் தேதி எனது சரியான பிறந்த நாள்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

  • • •

கேள்வி 10: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கையால்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா?

– முகிலன், மும்பை

பதில் 10: கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *