பெரியார் உலகத்தைப் பார்க்காமல் சாகமாட்டேன்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வி.சி.வில்வம்

பெருமாளைக் கும்பிடும் ஊரில் பெரியாரைக் கொண்டாடும் ஒருவர். ஆம்! வைதீக வாழ்க்கை முறையை தீவிரமாகப் பின்பற்றிய அன்றைய திருச்சி மாவட்டம். இன்றைய அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த பெரியார் பெருந்தொண்டர் 91 வயதை கடந்த இளைஞர் இராமகிருட்டிணன் தான் அவர்.

இனிக்கும் இருபதுகளில் தந்தை பெரியாரை திருச்சியிலே சந்தித்தாராம். வாழ்வாதாரத்திற்காக வளையல் வியாபாரம் செய்து வந்த இராமகிருட்டிணன் தலையில் வளையல் பெட்டியைச் சுமந்து கொண்டே பெரியார் குடியிருந்த திருச்சி பெரியார் மாளிகை வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாராம். என்ன என்று கேட்ட பெரியாரை அப்போது அருகில் சென்று சந்தித்தாராம்! “என்ன தொழில் செய்கிறாய்?” என்று கேட்டுவிட்டு, “இந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு வேறு தொழில் செய்” என்று பெரியார் சொன்னாராம். அதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் பெரியார் பெருந்தொண்டர் இராமகிருஷ்ணன். “திருச்சியில் நடைபெறும் தி.க., தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்குச் செல்வேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் போன்றோர் பேசுவார்கள். பள்ளியில் அதிகம் படிக்காத என் அறிவுக்கண்களை அந்தக் கூட்டங்கள்தான் திறந்தன” என்றார்.

“சரி, எப்படி கடவுள் மறுப்பாளராக மாறினீர்கள்?” என்று கேட்டால், “முதலில் அது பெரிய தத்துவம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சிறு வயதில் எனது உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கடவுளை தீவிரமாக வேண்டினேன். அவர் உயிர் பிழைக்கவில்லை. அதனால் கடவுள் இல்லை என்று முதலில் முடிவு செய்தேன்” என்கிறார் நகைச்சுவையாக.

“1963இல் திருமணத்திற்குப் பிறகு மிதிவண்டி ஒன்றை வாங்கி திருச்சியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருந்த ஊருக்கு அதை ஓட்டிக்கொண்டு வந்துசேர்ந்தேன். கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று வளையல் வியாபாரம் செய்தேன். சிக்கனம், சேமிப்பு மூலமாக நிதி சேர்ந்தது. நிலம் வாங்கி விவசாயமும் செய்தேன். செல்லுமிடமெல்லாம் கிராமப்புற மக்களிடம் நான் கற்றுக்கொண்ட பெரியார், அண்ணா கருத்துகளைப் பேசுவேன். இரண்டு பிள்ளைகளையும் கொள்கையைச் சொல்லி வளர்த்தேன். அதில் ஒருவர் மாநில மாணவர் கழக அமைப்பாளராக சிறிது காலம் பணியாற்றிய இராவண கோபால் ஆவார். ஆண்டிமடம் ஒன்றியத்தில் கருப்புத்துண்டு பூவராகசாமி – ஆசிரியர், கவரப்பாளையம் மு.சா.ரங்கநாதன் ஆகியோர் பெரியார் பற்றிப் பேசுவதற்கு எனக்குக் கிடைத்த அன்றைய நண்பர்கள்.எங்கள் ஊரில் எனது தந்தையின் படத்திறப்பை வழக்குரைஞர் சிவசுப்ரமணியத்தை (மேனாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் தந்தை) அழைத்து நடத்தினேன். ஊருக்குள் அது சலசலப்பை ஏற்படுத்தியது. ஊர் திருவிழாவுக்கு வரி கொடுக்க மாட்டேன். “சாமி” ஊர்வலம் வந்தால் என் வீட்டு முன்னால் நிற்காது!” என்கிறார் அய்யா இராமகிருட்டிணன்.

“குற்றாலம், பயிற்சி முகாம், தஞ்சை குடும்ப விழா, ஆர்ப்பாட்டம், போராட்டம் மாநாடு என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கழக நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பேன்.

எனது வாழ்வில் சகலமுமாக இருந்த வாழ்விணையர் சரோஜா மறைவுற்றபோது அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடையாக வழங்கினோம். அப்போதும் உறவினர் கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கழகத் தோழர்கள் ஒத்துழைப்போடு அதை நிறைவேற்றினோம்.

அவரது நினைவு நாளில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்கள் – எழுது பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பொதுநலத் தொண்டுகள் செய்வோம். கொள்கை வழிப்படி வளர்ந்ததால் பிள்ளைகள் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். எனது மறைவிற்குப் பின் எனது உடலும் கொடையாக அளிக்கப்பட வேண்டும் என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டேன்” என்கிறார் இந்தப் பெரியாரின் தொண்டர். தமிழ்நாடு உடற்கொடைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்வதன் காரணம் புரிகிறதா?

“ஆசிரியரின் தலைமையில் இயக்கம் நன்றாக வளர்ச்சி பெற்று உள்ளது. 10 ஆண்டுகளாக கைத்தொலைபேசி வந்த பிறகு கிராமப்புற பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் கூடுவது குறைந்துவிட்டது. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் மக்களிடம் நேராகச் சென்று கருத்துகளைச் சொல்வதை நாம் நிறுத்தக்கூடாது. பரப்புரை அதிகம் நடக்க வேண்டும்” என்று சொல்லும் இராமகிருட்டிணன் “ஆசிரியர் வீரமணியின் அறிவாற்றல்” சாதாரணமானதல்ல. “பெரியார் உலகம்” அமைக்கும் அவரின் திட்டம் ஒருபெரிய ஒரு திட்டமாகும். காலா காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியது. அதனால் எனது குடும்பத்தின் சார்பாக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்து மகிழ்ந்தேன்” என்கிறார்.

“உங்கள் வயது என்ன?” என்று கேட்டபோது, புன்சிரிப்போடு எனக்கு வயது 91அய்க் கடந்து விட்டது. ஆனாலும், ”பெரியார் உலகைப் பார்க்காமல் சாக மாட்டேன்” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் இராம கிருட்டிணன்.

பெரியாரியல் வெல்லும்! பெரியார் உலகம் அதைச் சொல்லும்! வாழ்க பெரியார்!

– நேர்காணல் : க.சிந்தனைச்செல்வன்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *