பாணன்
கடந்த ஜூலை மாதம் நடந்த நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டத்தில் பெருமளவுப் பெண்கள் அதுவும் 10 வயது சிறுமிகள் முதல் 93 வயது ஓய்வு பெற்ற டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியை வரை கலந்துகொண்டார்கள்.
இது இதுவரை, குறிப்பாக வட இந்தியாவில் பார்த்திராத ஒன்றாகும். இதனால் பாஜக பிரதமர் மோடி முதல் உள்ளூர் பாஜக தலைவர்கள் வரை பெண்களை மோசமாக வசை பாடி வருகின்றனர்.
சிறுமியின் வீட்டிற்குச் சென்று மிரட்டும் காவல் துறையினர்
பிரதமர் மோடி “12 வயதுப் பெண் ஒருவர் போராட்டத்தில் பங்குகொண்டு பேசியதைக் கண்டு அந்த சிறுமியை நான் மன்னித்துவிட்டேன், ஏதோ சிறுமி உற்சாகத்தில் பேசுகிறார்” என்று கூறினார். ஆனால் பாஜக பிரமுகர்கள் அந்தச் சிறுமியை மிகவும் மோசமாக வசைபாடுகின்றனர். காவல்துறையோ அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்று மிரட்டுகிறது.
பீகார் மாநிலக் கல்வி அமைச்சர் நேரடியாகவே “பெண்கள் படிப்பது தேவையற்றது. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அளவிற்குக் கல்வி கற்றால் போதும்” என்று பொதுவெளியில் பேசினார்.
ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்த உடன் பெண்களுக்குத் தான் முதல் கடிவாளம் போடுவார்கள் என்பதற்குப் பண்டைய வரலாறு பல சான்றுகளைக் கொடுத்துள்ளது.
அதே போல் அந்தச் சங்கிலிகளை உடைத்து சம உரிமைக்கு கவுதம புத்தர், அண்ணல் அம்பேத்கர் முதல் தந்தை பெரியார் வரை பலர் எடுத்த புரட்சிகர நடவடிக்கைகளால் பெண்கள் இன்று பெரும் உயரத்தைத் தொட்டுள்ளனர்.
பண்டைய இந்தியச் சமூகம் பெண்களை விலங்கினும் கீழாய் மதித்தது.

சம உரிமை கிடைத்தது
வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தால் தாயை இருபது நாள்களுக்குத் தீட்டுள்ளவளாக ஒதுக்கி வைத்தார்கள்.
ஒரு பெண் குழந்தை பிறந்தால், அந்தத் தீட்டு 40 நாள் வரைக்கும் நீடித்தது.
இப்படி இருந்த சமூகச்சூழலில் புத்தரின் புரட்சி பெண்களுக்குக் கல்வியையும், சம உரிமைகளையும் பெற்றுத்தந்தது.
பெண்களின் சமூக, திருமணச் சுதந்திரத்தை முழுமையாகப் பெற்றுத்தந்த ஒரு கருத்தியல் புரட்சிக்குப் பவுத்தம் அடித்தளம் இட்டது.
பெண்களை ஆண்களுக்குச் சமமானவர்களாக அங்கீகரித்துச் சமூகத்தில் பொருளாதாரத்தையும், பெண்களின் பொதுவாழ்க்கை முறையையும் மாற்றியமைத்தது.
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும் பெண் ஒருவரை அங்கீகரிக்கும்போது, அவரை இனி சமூக ரீதியாக அடிமைப்படுத்த முடியாது. அது எளியதல்ல, சாத்தியமுமல்ல. ஆனாலும், இன்றும் சமூகம் பல வகைகளில் ஆழமான ஆணாதிக்க மனப்பான்மை கொண்டதாக உள்ளது.
மகாபாரதம், ஸநாதனம் பெண்களைப் பழித்தன
மகாபாரதத்தின் ஆதிபர்வம், உத்யோக பர்வங்கள், இதர ஸநாதனப் புராண நூல்களை ஆராய்ந்தால் பெண்கள் குறித்து எழுதப்பட்டவை மிகவும் மோசமானதாகவே உள்ளன.
மகாபாரத ஆதி பர்வம் “ஆண்களுக்கு அடங்காத பெண்கள் வழிப்போக்கர்கள் நிறைந்த பகுதியில் உள்ள கிணறு போன்றவர்கள்” என்று மறைமுகமாகப் பெண்களை இழிவுபடுத்துகிறது.
பெண்கள் நற்செயல் அல்லாதவற்றுக்கு மூலக் காரணமாகக் கருதப்பட்டனர். அவளுக்கு எதிரானப் பாகுபாடு அவளது பிறப்பிலிருந்தே தொடங்கியது.
பெண்கள் ஆண்களைவிட அடிப்படையிலே தாழ்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்காக மட்டுமே ஸநாதனப் புரட்டு நூல்கள் உருவாக்கப் பட்டன.
கவுதம புத்தரின் காலத்தில் சமூகத்தின் வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்ட ஸநாதனிகள் மோசமான ஒழுக்கச் சிதைவுக் கேடுகளைக் கொண்டிருந்தனர்.
இதில் மிகப்பெரிய முரண் என்னவென்றால், பார்ப்பனர் நெறி தவறிய செயலொன்றைச் செய்தாலும் கூட, குறிப்பிட்டச் சில சடங்குகளைச் செய்வதன் மூலம் அவர் அதிலிருந்து பிராயச்சித்தம் தேடிக்கொள்ள முடியும். எல்லாமே மன்னிக்கப்பட்டன.
இந்த ஒட்டுமொத்த அமைப்பில் பெண்களுக்குத் தனித்துவமான இருப்பு என்பதே கிடையாது. அவர்கள் ஒரு கருவியாகவோ அல்லது வெறும் உடைமையாகவோ மட்டுமே கருதப்பட்டனர்.
புத்தரின் அத்தையின் போர்க்குரல்!
இந்த நிலையில் பெண்கள் வீட்டிலேயே இருந்தால் சமூகத்தில் எந்த மாற்றமும் வராது என்று முதன்முதலில் குரலெழுப்பியவர் புத்தரின் அத்தையான கவுதமி ஆவார்.
‘பெண்கள் உயர்ந்த ஞானத்திற்குத் தகுதியற்றவர்கள்’ என்று நம்பிய ஒட்டுமொத்தச் சமூக அமைப்பையும் எதிர்த்துச் சவால் விட்டார்.
கவுதமியும், அவருடன் இருந்த பெண்களும், பொதுவெளியில் எளிமையான வாழ்க்கையைத் தொடங்கினர். பவுத்த சங்கத்தில் முதல் துறவிகளானார்கள்.
ஆம். கையில் பிச்சைப் பாத்திரத்துடன், கடினமான பாதைகளில் புறப்பட்டனர் அந்தக் காட்சி வெறும் மதச் சடங்கு மட்டுமல்ல; அது ஆணாதிக்கத்திற்கு எதிரான நேரடிப் புரட்சி.
அவர்கள் தங்களது உரிமைகளைப் பெற வீட்டை விட்டு வெளியேறி பொதுவெளியில் வந்து சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டனர்.
“அறிவின் மீது யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை. முற்றிலும் இல்லை. சமூகத்தில் அனைத்து உரிமைகளும் பெற ஆண்களுக்கு மட்டும் எந்தச் சிறப்புரிமையும் கொடுக்கப்படவில்லை” என்று கூறிய புத்தர் ஓர் அடிப்படையான கருத்தையும் முன்வைத்தார். “ஒருவரின் அடையாளம் அவர்களின் பாலினத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக அவர்களின் குணங்கள், நடத்தை மற்றும் பயிற்சிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. விழிப்புணர்வுக்குப் பாலினம் கிடையாது. பெண்களாலும் ஆண்களைப் போன்றே முழு உரிமையும் பெற்று வாழமுடியும்” என்ற புத்தரின் புரட்சிகரக் கருத்து 2400 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் அடிமைச்சங்கிலியை உடைத்தது.
கொடை வள்ளல் விசாகா
அதன் பிறகு விசாகா போன்ற பெண்கள் சமூகத்தின் மாற்றத்திற்கு ஆற்றிய பங்கை பவுத்த நூல்களில் காணலாம்.
விசாகா இன்றைய அயோத்தியில் பிறந்தவர். இவரின் குடும்பம் கோசல மற்றும் மகத நாடுகளின் பெருமதிப்புக்குரிய செல்வக் குடும்பமாக விளங்கியது.
இவர் சாளுவ நாட்டைச் சேர்ந்த பூரணவர்த்தனன் என்பவரை மணந்து சிராவஸ்தி நகரில் வசித்து வந்தார்.
தனது ஏழாவது வயதிலேயே கவுதம புத்தரைச் சந்தித்து புத்த நெறிகளில் ஈர்க்கப்பட்டார்
புத்தர் இவரைப் பெண் சீடர்களில் கொடை வள்ளலாகவும், முதன்மையானவராகவும் சிறப்பித்தார்.
விசாகா சிராவஸ்தி நகரின் கிழக்குப் பகுதியில் பிரமாண்டமான ‘பூர்வாராம மடத்தை’ பெரும் செலவில் கட்டி பவுத்த சங்கத்திற்கு கொடையாக அளித்தார். இது பெண்களின் முதல் கல்விச்சாலை என்றும் வரலாற்று நிபுனர்கள் கூறுகின்றனர்.
அன்று சமூகத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிணக்குகள் ஏற்படும்போது, அவற்றைத் தீர்த்து வைக்கும் நடுவராக விசாகாவின் நிர்வாகத் திறனும், நுண்ணறிவும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.
பெண்களின் மேம்பட்ட பொருளாதாரம்
கவுதமப் புத்தரின் புரட்சியால் பெண்கள் ஆழ்ந்த ஞானம் பெற்று ஆண்களுக்கே ஆசிரியர்களானார்கள்.
கவுதமப் புத்தரின் போதனைகளைச் சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு மிகவும் எளிமையாக விளக்கும் பணியில் பெண்கள் களமிறங்கினர்.
பெண்களுக்கு அறிவுசார் வாய்ப்பு வழங்கப்பட்ட போது, அதை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தினர்.
பவுத்தம் பரவிய நாடுகளின் சமூகங்களின் வரலாற்றில் இதன் தாக்கத்தை நம்மால் தெளிவாகக் காண முடியும்; அங்கு பெண்கள் பொதுவாழ்வில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். இந்த ஈடுபாடு விழாக்களுடன் நின்றுவிடவில்லை, மாறாக இது பொருளாதாரத்தின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
திபெத்தியப் பெண்கள்
இந்தியா எங்கும் புத்த மார்க்கம் தழுவிய திபெத்தியப் பெண்கள் இன்றும் வணிகத்தைத் தாங்களே நிர்வகித்து வருகின்றனர்.
அவர்கள் சாதாரண சிறிய வணிகர்கள் மட்டுமல்ல, முழுப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்வதுடன், பெரு வணிகப் பயணங்களையும் தாங்களே மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரம் பரவலாக்கப்பட்டபோது, சமூக அதிகாரமும் பெண்களின் கைகளுக்கு வந்தது.
பெண் தலைமைப் பெறுப்பேற்றபோது சமூகம் முழுமையும் கல்வி பெறுகிறது.
பெண்கள் சொந்தமாகத் தொழில் நடத்தி, உழைக்கும்போது, திருமணம் போன்ற முடிவுகளை அவர்கள் தாங்களே எடுக்கும் புரட்சிகரச் சூழல் உருவானது.
பர்மா, திபெத் மற்றும் தாய்லாந்தில் உருவான திருமண மரபுகள் மிகவும் சுதந்திரமானதாக இருந்தன.
தங்களுக்குத் தகுதியான எதிர்கால இணையரைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை பெண்களுக்குத் தரப்பட்டது.
கட்டாயத் திருமணங்களுக்கு முற்றிலும் முரணான ஓர் ஆரோக்கியமான முறை இது. பெண்கள் சுயாதீனமான, சிந்திக்கும் நபர்களாகச் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாகவே இந்தச் சுதந்திரம் சாத்தியமானது.
முடிவெடுக்கும் திறன் பாலினத்தைச் சார்ந்தது அல்ல என்பதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளும்போது, வாழ்விற்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இயல்பாகவே தனிநபருக்கு வந்து சேர்கிறது.
புரட்சித் திருமணமும், தந்தை பெரியாரும்!
திருமணத்தைச் சார்ந்துள்ள விதிகளைப் பொறுத்தவரை, உலகின் பல பகுதிகளில், பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலும் தங்கள் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டனர். அவர்களின் பெயர் மாற்றப்பட்டது; அல்லது அவர்கள் வாழ்நாள் முழுவதும் யாரையாவது சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.
ஆனால் புத்தர் கொண்டுவந்த புரட்சி முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இரண்டு முதிர்ந்த நபர்களுக்கு இடையே ஒரு தெளிவான சமூக ஒப்பந்தமாகக் கருதப்பட்டது. அதன் மறுவடிவமாக தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் திகழ்ந்து வருகின்றது. இன்று உலகத்தின் பெரும் பகுதி மேம்பட்ட சமூகம் ஏற்றுக்கொண்ட திருமண முறையை 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் செயலில் கொண்டு வந்தார்.
மிக முக்கியமாக, ஒரு பெண் தனது பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. திருமணத்தைக் குறிக்கும் சிறப்பு மோதிரம் அணிவது அல்லது குறிப்பிட்ட ஆடைகளை உடுத்துவது போன்ற வெளி அடையாளங்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை.
சொத்துரிமை என்று வரும்போது, விதிகள் இன்னும் தெளிவாக இருந்தன. இதனை எப்படிக் கூறலாம்?
திருமணத்திற்குப் பிறகு மனைவி கொண்டுவந்த அல்லது தனது கடின உழைப்பால் ஈட்டிய சொத்துக்கள் அவளுடைய சொந்தச் சொத்துக்களே. அவளுக்கு மட்டுமே அதன் மீது உரிமைகள் இருந்தன. கணவன் அதன் மீது உரிமை கோர முடியாது.
அவள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தனக்குத் தானே எஜமானனாக இருந்தாள். இது இன்றைய காலகட்டத்திலும் கூட மிகவும் நவீனமான ஒரு கருத்தாகும்.
வேத மரபுச் சமத்துவத்தை அழித்தது
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி.4ஆம் நூற்றாண்டு வரை பெண்கள் முழுமையான சமூக விடுதலை பெற்று வாழ்ந்தனர். அதன் பிறகு அடங்கி இருந்த வேதமரபு சமத்துவத்தை அழித்து முன்பை விட வேகமாகப் பெண்களை அடக்கி வைக்கும் பல வழிகளைத் தேடியது. அதற்கு துணையாகப் புராண இதிகாச நூல்களை வெளியிடத் தொடங்கியது.
ஆணாதிக்க மனோபாவத்தை எங்கும் திணிக்கும் வகையில் வாழ்நாளின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு என்று ஓர் அடிமைச் சாசனத்தை உருவாக்கியது. அந்த அடிமைச்சானத்தைத்தான் தென்னகத்தில் தந்தைப் பெரியார் உடைத்தெறிந்தார்.
இதன் விளைவுதான் உலகம் முழுவதிலும் பல பெரிய பதவிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் கோலோச்சும் நிலை உருவானது.
பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களின் உரிமைகளை மீட்கக் கிளந்தெழுவார்கள். தங்களின் சமூகநீதிக் கோரும் பங்களிப்பில் பங்களிப்பையும் தருவார்கள்.
