திருப்பத்தூர் மாவட்டக் கழகம் நடத்திய தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி – ஓவியப் போட்டி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம்

திருப்பத்தூர், அக். 2- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் நகர மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டபேதார் முத்துசாமி தெருவில் தந்தைபெரியார் பேச்சுப்போட்டி – ஓவியப் போட்டி 26.9.2026 அன்று நடைபெற்றது.

இப்பேச்சுப் போட்டியில் 35 மணவர்களும், ஓவியப் போட்டியில் 40 மாணவர்களும் பங்கேற்றனர். பேச்சுப் போட்டி தந்தை பெரியாரின் பெண் விடுதலை, பெரியார் பிறவாமல் இருந்தால், வைக்கம் வீரர் பெரியார்,பெரியாரால் வாழ்கிறோம், பெரியார் காண விரும்பும் சமுதாயம், என்றும் தேவை பெரியார், நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது.

ஓவியப் போட்டியில் தந்தை பெரியா ரின் நிழற்ப்படங்கள் வரையப்பட்டன.

இப்போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக 6- 9 ஆம் வகுப்பு, 10-12 ஆம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் தலா முதல்பரிசு ரூ.2000, இரண்டாம் பரிசு 1500, மூன்றாம் பரிசு ரூ. 1000, இதே போன்று ஓவியப் போட்டிக்கு பரிசுகள், இதைத்தவிர ஆறுதல் பரிசாக தலா ரூ.500 பத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மேலே குறிப்பிட்ட தலைப்புகளில் தந்தைபெரியாரின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கி, குறிப்பாக சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை, சமூகநீதி, சமத்துவம் கொள்கைகள் குறித்தும், அதற்காக அவர் ஆற்றிய பணிகள், போராட்டங்கள், சிறை வாழ்க்கைப் பற்றியும் அதனால் அவர் பெற்றுத் தந்த உரிமைகள் எவை எவை என்பதைக் குறித்தும் விரிவாக பேசினார்கள்.

நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

போட்டிக்கு விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோ.திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.இராஜேந்திரன் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

ஓவியப் போட்டியை மாவட்ட மகளிரணித் தலைவர் இரா. கற்பகவள்ளி, மாவட்ட துணைத் தலைவர்  சி.தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைத்தனர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ ‘இளைஞர்களுக்கு பெரியார் அறிவுரை’ ஆகிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இப்போட்டிகள் காலை 9 மணிக்குத் துவங்கி மாலைவரை நடைபெற்றன.

இப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு 27.09.26 அன்று மாலை 5.30 மணியளவில் இவ்விடத்திலேயே நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மாவட்டக் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  பெ.கலைவாணன் வரவேற்புரை யாற்றினார். சிறப்பு அழைப்பாளராக காமராஜர் அறக்கட்டளை தலைவர் பி.கணேஷ்மல் வருகைபுரிந்து மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், நோட்டுப் புத்தகம், பேனா வழங்கப்பட்டது. இதில் எ.அகிலா (மாநில மகளிரணிப் பொருளாளர்), எம்.ஞானம் (மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர்), வ.புரட்சி (விடுதலை வாசகர் வட்ட செயலாளர்), மா.சி.பாலன் (மாவட்ட காப்பாளர்), கவிஞர் நா.சுப்புலட்சுமி, காளிதாஸ் (நகர தலைவர்), பெரியார் பெருந்தொண்டர் பொன்னம்பலம், சி.ஏ.சிற்றரசன் ( மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்), பிரபாகரன் (கற்பி பயிலகம்) பங்கேற்று சிறப்பித்தனர்.

கோ.திருப்பதி (மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளர்), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) மாணவர் கழகத் தோழர்கள் அன்பு, லாவண்யா, கோமகேஷ்வரி, தர்சினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

முன்னதாக மாஸ்டர் இராவணன் தந்தைபெரியார் பாடலைப் பாடினார்.

மேலும்,தந்தைபெரியாரின் பிறந்தநாள் விழா மகிழ்வாக பரிசளிப்பு நாள் அன்று சுமார் 100 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா பரிசாக வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகள் நகர வீதியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன என்பது – ஆண்டுதோறும வீதிகளில் மாரியம்மன் திருவிழா, விநாயக சதுர்த்தி பார்த்துப் பழக்கப்பட்ட மக்களிடத்திலும் மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் மிகப் பெரிய விழிப்புணர்வை உருவாக்கியது எனலாம்.

மூட நம்பிக்கையை வளர்க்கும் மத விழாக்களைத் தொடர்ந்து மக்களிடையே வசூலித்துக் கொண்டாடும் நிலையில், அதே மக்களிடம் நாமும் நிதி திரட்டி காலமெல்லாம் பகுத்தறிவைப் பரப்பிய தந்தை பெரியாரின் சிந்தனைகளை விதைத்தது மூடநம்பிக்கையைப் போக்க ஒரு வழியாக அமைந்தது என்பது மிகுந்த மன நிறைவைத் தந்தது.

இது போன்ற நிகழ்ச்சிகளை அரங்கு களில் நடத்தாமல் பொது வெளியில் நடத்துவது மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் என்பதை உணர்த்தியது.

இதில் பொதுமக்கள், கழகத் தோழர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என்று பெருந்திரளாகத் பங் கேற்றனர். அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *