அக். 15 முதல் 21 வரை தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 02- சென்னை வானிலை ஆய்வு மய்யம் சார்பில், “வடகிழக்கு பருவமழைக்கான பருவகால கண்ணோட்ட மன்றம் – 2026” தொடக்க விழா சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று (1.10.2026) நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்தரமோகன் பங்கேற்றுப் பேசியதாவது: மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தற்போது 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை மய்யங்களைக் கொண்டுள்ளது. மேலும், 1,000 தானியங்கி மழைமானிகளைச் இந்த ஆண்டு நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் போது 2 அடி முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 1,030 அதிக மற்றும் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களையும், மேலும் 1,003 நடுத்தர பாதிப்புக்குள்ளாகும் இடங்களையும் தமிழ்நாடு பேரிடர் மற்றும் பாதிப்பு குறைப்பு முகமை அடையாளம் கண்டுள்ளது.

ஒவ்வொரு இடத்துக்கும் வெள்ளத் தணிப்பு மற்றும் மீட்புத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகருக்கு ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை மய்யம் மூலம் 3 நாட்களுக்கு முன்பே தெரு அளவிலான வெள்ள முன்னறிவிப்பும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மய்ய தலைவர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா பேசும்போது, ” தென்மேற்கு பருவமழை விலகிய பின்னர், வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 3-ஆவது வாரத்தில் 15 முதல் 21-ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளில் இயல்பான மழை முதல் இயல்பை விட அதிகமான மழையும், மீதமுள்ள மாவட்டங்களின் இயல்பை விடக் குறைவான மழை பெய்யலாம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் வானிலை ஆய்வு மய் தென் மண்டலத் தலைவர் டி.சிவானந்த பை, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், புனே வானிலை ஆய்வு மய்யத்தின் காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்புத் துறை தலைவர் ஓ.பி.சிறீஜித், சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் ஆர்.வி.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், “அக்.12-ஆம் தேதி வாக்கில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அதன் தாக்கத்தால் அந்தமான் கடல் பகுதியில் 13-ஆம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். இது 15-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற குறைவான வாய்ப்புகளே உள்ளன” என்று இந்திய வானிலை ஆய்வு மய்ய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *