சென்னை, செப். 29–- சென்னை மாநகராட்சியில் மழை வெள்ளம், குப்பை அகற்றம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட நகர்ப்புறப் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் ‘ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மய்யத்தை’ ரூ.98.25 கோடி செலவில் முழுமையாக மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை ஒரே இடத்திலிருந்து நேரலையாகக் கண்காணிக்கும் வகையில் மய்யம் மறுசீரமைக்கப் படும்.
விரைவான பேரிடர் மேலாண்மை
மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் இடங்கள் மற்றும் வெள்ள அபாயப் பகுதிகளை உடனுக்குடன் கண்டறிந்து, துரித நடவடிக்கை எடுக்க புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும்.
துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு
அவசர காலங்களில் மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்பட இம்மய்யம் பாலமாக அமையும். நகரம் முழுவதிலிருந்தும் பெறப்படும் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் மூலம், நகர்ப்புறச் சிக்கல்களை முன்கூட்டியே கணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கோள்ள முடியும்.
விரிவடைந்து வரும் சென்னை மாநகரின் சேவைகளை மேம்படுத் தவும், பேரிடர் காலங் களில் உடனடி நிவாரண நடவடிக்கை களை ஒருங்கிணைக்கவும் இந்த மேம்படுத்தப்பட்ட கட்டளை மய்யம் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
