மாரடைப்பு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்!

6 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மருத்துவம்

மருத்துவர் சு.நரேந்திரன்
இரைப்பை, குடல் அறுவைச்
சிகிச்சை நிபுணர், தஞ்சாவூர்.

தசைகள் வேலை செய்ய, இரத்தமும் பிராண வாயுவும் முக்கியமாக வேண்டும். பிராணவாயு இரத்தத்திலிருந்து கிடைக்கிறது.

இதயமும் ஒரு தசை. ஆதலால் அது சரியாக வேலை செய்வதற்கு பிராணவாயு வேண்டும். இதயத் தசைக்கு தனியே இரத்தக் குழாய்கள் இருக்கின்றன. அவற்றின் பெயர் கரோனரி தமனிகள்.

இதயத்தில் இருந்து ஒரு பெரிய இரத்தக் குழாய் (மகாதமனி) வெளியே வந்த உடனேயே அதிலிருந்து இரண்டு இரத்தக் குழாய்கள் பிரிந்து இதயத்திற்குத் தேவையான இரத்தத்தைக் கொடுக்கின்றன. அதாவது தேவையான பிராண வாயுவைக் கொடுக்கின்றன. இதுவே கரோனரி தமனி எனப்படுகிறது.

இதயநோய்

இதயநோய், பெரும்பாலும் மார்பின் முன் பக்கத்தில் இடப் பக்கத்தில் வலியால் உணரப்படும். அங்கிருந்து பல இடங்களுக்குப் பரவும். இடப்புறம் உள்ள சுண்டு விரல் வரையிலும் வலி போகலாம். சில பேருக்கு முதுகுப் பக்கமும் வலிக்கும். வலப்பக்க மார்பிலும் வலி வரலாம். சிலருக்கு கழுத்திலும், தொண்டையிலும் கூட வலிக்கலாம். மார்புப் பக்கத்தில் வலி இருந்தால், அது ‘இதய நோய்’ என்று சொல்லி விடலாம். ஆனால், வலி வயிற்றில்தான் வருகிறது என்று சொல்லும்பொழுது அது இதய நோய் என்று சொல்வது கடினம். எனினும், தொடர்ந்து வலியிருந்தால் இ.ஜி.ஜி. மூலம் கண்டறியலாம். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் இந்த நோய்தான் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். பெரும்பாலும் புகைப் பிடிப்பவர்களுக்கு இடது மார்பில் வலி என்றால் அது இதய நோய் என்றும் சொல்லிவிடலாம்.

கொழுப்புச் சத்து

நாகரிக பழக்க வழக்கத்தால் இரத்தக் குழாய் நோய்களும், இதயத் தாக்குதலும் அதிகரித்து வருகின்றன. கொலஸ்ட்ரால் கொழுப்புச் சத்து, டிரிகிளிசரிடைட்டஸ் ஆகிய இரண்டுமே இதய இரத்தக் குழாய்களில் நிறைந்து அவற்றைப் பாழாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இரத்த நாளத்தில் இரத்த ஓட்டம் நிற்கும்போது அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள இரத்த செல்கள் படிகின்றன. மூளையில் இவ்வாறு நேரும்போது பக்கவாதம் என்ற மூளை தாக்கு ஏற்படுகின்றது.

இதயத் தமனி நாளங்கள் அடைத்துக் கொண்டால் இதயத் தாக்குதல் நேருகின்றது.

உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல் ஆகிய மூன்றும் அல்லது மூன்றில் ஒன்று நம்மில் இருந்தாலும் இதய நோய் தாக்கு வர அதிகமான வாய்ப்பு உண்டு. உடற்பயிற்சி செய்யாமல் வாழுபவருக்கு உடற்பயிற்சி செய்பவரை விடவும் இதயத் தாக்குதல் வரும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். இதய நோய் பற்றி ஆராய்ந்து அறிந்த நிபுணர்கள் மாரடைப்பு தோன்ற ஒன்பது மிக முக்கிய காரணங்களை கூறுகின்றனர். அவை வருமாறு:-

நோய்க் காரணங்கள்

  1. கொலஸ்ட்ரால் இரத்தத்தில் மிக அதிகமான அளவில் இருப்பது, மிக இரத்த அழுத்த நோய் (இரத்தக் கொதிப்பு). 2. புகை பிடிப்பது. 3. உடல் எடை அதிகமாக இருத்தல். 4. சுத்திகரிக்கப்பட்ட (தீட்டிய) தானிய வகைகள், கொழுப்பு அல்லது உறையும் எண்ணை சேர்த்த உணவு வகைகள். 5. உடற்பயிற்சியின்மை.
    6. நீரழிவு நோய். 7. சீனியை அதிகமாகப் பயன்படுத்துதல். 8. விரைப்புணர்வு மிகுதியான உழைப்பினால் தோன்றும் களைப்பு. 9 பரம்பரை.

இந்த ஒன்பது காரணங்களில், அய்ந்து உணவுடன் தொடர்புடையவை – கொலஸ்ட்ரால் உங்கள் இரத்தத் தில் மிகுதல், உடல் எடை அதிகரிப்பது, எண்ணெய் அல்லது கொழுப்பு மிகுதியாக உள்ள உணவுப் பண்டங்கள் தீட்டிய தானிய வகைகள், நீரழிவு நோய்.

நம்முடைய உணவில் அய்ந்தில் ஒரு பகுதி கொழுப்புச் சத்துள்ளதாக உள்ளது. நமது உணவில் சேரும் கொழுப்பு வகைகளில் மிகுதியான கொலஸ்ட்ரால் உள்ளன. இது செரிமானம் ஆகாமல் இரத்தக் குழாய்களில் படிந்து நாளடைவில் உடலின் இரத்த ஓட்டம் ஏற்றவாறு நிகழாமல் தடை செய்கின்றது.

கொழுப்பு மிகுதியாவதற்கு காரணம்

உணவில் இறைச்சி, வெண்ணெய், பாலேடு, பாலாடைக்கட்டி, பாலை மிகுதியாக உட்கொள்ளுவதும் நம் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும்பொழுது அதிரோ கிளிரோசிஸ் நோய் (குழாய் தடித்து) தோன்றி இரத்த நாளங்கள் கடினமாகி முறுக்குகின்றன. மிகுதியான இதயத் தாக்குதல்களுக்கு ‘அதீரோகிளீரோசிஸ்’ காரணமாகிறது.

எனவே, நாம் நமது கொழுப்பு உணவு வகைகளை குறைத்துக் கொண்டு, உணவு வகைகளின் அளவைக் குறைத்து, சர்க்கரையின் உபயோகத்தை மிகவும் குறைத்து விட வேண்டும்.

மாரடைப்பு வராமல் தடுக்க
சில எளிய ஆலோசனைகள் :-

  1. உங்கள் உணவில் தாவரக் கொழுப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 2. கூடுமானவரை இறைச்சி மிகவும் குறைத்து உண்ண வேண்டும். 3. கொலஸ்ட்ரால் குறைவுபடும் எண்ணெய் வகைகளை கொழுப்பு உணவுக்காக பயன்படுத்த வேண்டும். 4. ஏடு நீங்கிய பால் பவுடரை பயன்படுத்துங்கள். பாலேடு வெண்ணெய், பாலாடைக் கட்டிகளை தள்ளி வையுங்கள். 5. தேங்காய் எண்ணெய், வனஸ்பதி நெய் வகைகள் ஆகாது. சர்க்கரை சேர்ந்த பணியாரம், பான வகைகள், அய்ஸ்கிரீம் மிட்டாய் சாக்லேட்டைத் தவிருங்கள்!

விறைப்புணர்வு நீங்கி நரம்புகள் அமைதியுற வழி செய்யுங்கள். விறைப்புணர்வு, கவலை, கோபம், ஏமாற்றம், குற்ற உணர்வு, பயம் இருந்தாலும் இதயத்தாக்கு தோன்றும்.

ஆறு வேளை உணவு

கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உறக்கம், ஓய்வு பல நோய்களை தீர்த்து வைக்கின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு, புகைப் பிடிக்காதவர்களைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கு 24 மடங்கு வாய்ப்பு அதிகம். இது பலரை பயப்பட வைத்தாலும் ஒரு நல்ல செய்தியும் உண்டு. புகைப் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டால் அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாகக் குறைந்து விடுகிறது.

வயிறு முட்ட 3 வேளைக்குச் சாப்பிடுவதைவிட அதே உணவை ஆறு வேலைக்கு பிரித்துச் சாப்பிட்டால் இதயத்துக்கு பழு ஏறாது. நெஞ்சுவலி வராது. இதே போல் சாப்பிட்டவுடன் நடப்பது, கையில் அதிக பழுவோடு நடப்பது, அதிக குளிரில் நடப்பது, மலை ஏறுவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

இப்படி சின்னச் சின்ன காரியங்களிலும் கருத்தாக இருந்தால் நெஞ்சுவலி வாராது காக்கலாம், கோபத்தை குறைப்பது, உணர்ச்சி வசப்படாமல் இருப்பது, உறக்கத்திற்கு வழி பார்ப்பது, நிம்மதியை நாடுவது போன்ற உளவியல் தீர்வுகளும் கைகூடினால் நலவாழ்வு நம் கையில்.

உணவு மோகம்

இது முக்கியம். உணவு என்பது பசிக்கானது. ருசிக்கானது இல்லை. அப்போதுதான் உணவு மோகம் குறையும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட கொழுப்பு மிகுந்த உணவுகளை குறைத்துக் கொள்வது, துரித உணவுகளை ஒதுக்கி விடுவது, செயற்கை உணவுகளை மறந்து இயற்கை உணவுகளுக்கு மாறுவது அசைவத்தில் மீனுக்கு முன்னுரிமை கொடுப்பது, காய்கறிகள், பழங்கள், நட்ஸ்களை விரும்பிச் சாப்பிடுவது இவற்றின் வழியாக தொப்பைக்கு இடம் தராமலும், இதயத்துக்கு பளு கூடாமலும் பார்த்துக் கொண்டால் இதய நலம் கூடும்.

செய்ய வேண்டியவை

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் வேண்டாம். சுத்திக்கரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ள ரசாயனங்கள் இரத்தக் குழாயில் பசை போல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஆபத்தை தடுக்க செக்கு எண்ணெய்க்கு மாறிக் கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு மூணு தேக்கரண்டி எண்ணெய் போதும். அரை மணி நேர யோகாவும், 5 நிமிட மன ஒருமைப்பாட்டுப் பயிற்சியும் கை கொடுக்கும். நடைப்பயிற்சி நாள்தோறும் 30 நிமிடம் நடந்தால் போதும். இதயத்துக்கு பலம் கூடிவிடும். ஆக்சிஜன் தேவை குறைந்து விடும்.

நெஞ்சில் ஏற்படும் இதய வலி இருக்கும் பட்சத்தில் நாக்குக்கு அடியில் நைட்ரேட் மாத்திரையை வைத்தால் வலி உடனே மறைந்து விடும். அடுத்து ஆஸ்பிரின் – இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

என்றாலும், வயிற்றில் புண் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால் அந்தப் புண் அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு. அதைத் தடுக்க அல்சர் மாத்திரை ஒன்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை இதய பரிசோதனை அவசியம் செய்து கொள்ளவேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *