மதுரை, செப்.27 மதுரையில் மின் சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் நீதிபதி பேசிக் கொண்டிருந்த பொழுது மின்தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மைக் காலமாகவே தமிழ்நாட் டில் மின்வெட்டு பிரச்சினை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் எதிர்க் கட்சிகள் இதுகுறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றன. அதே நேரம் அமைச்சர்களின் நிகழ்ச்சிகளிலேயே நடக்கும் மின்வெட்டு நிகழ்வுகள் தொடர்பாக காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று (26.9.2026) நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கலந்து கொண்டார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரும் கலந்து கொண்டார். அப்பொழுது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது திடீரென மின்தடை ஏற்பட்டது. தமுக்கம் பகுதி மின் நிலையத்தில் ஏற்பட்ட அதிக மின் அழுத்தம் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
