சென்னை, செப். 26- ‘அரசுப் பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். தவெக ஆட்சியில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு’ என சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனாக இருப்பேன், அரணாக இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சியில், அரசுப் பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்தச் நிகழ்வை காவல் துறையும், அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும், பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் கைப்பேசிகளை கைப்பற்றி இந்த நிகழ்வு குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று காவல் துறை தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ரீல்ஸ் ஆட்சியாளர் களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்ரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த நிகழ்வில் பாதிக்கப் பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி’ எனத் தெரிவித்துள்ளார்.
