போரூர், செப். 26- நாடு முழுவதும் காலாண்டுத் தேர்வு, காந்தியார் பிறந்த நாள், மத நிகழ்வுகள் எனத் தொடர் விடுமுறைகள் வரவுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகப் புதிய விடுமுறைக் காலச் சிறப்புச் சலுகையை ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இச்சலுகையின் முக்கிய அம்சங்கள்:
12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் போது, பயணக் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். (இச்சலுகை ‘ஏர் இந்தியா’ விமானங்களுக்குப் பொருந்தாது). வழக்கமாக அனுமதிக்கப்படும் 15 கிலோ எடையுடைய உடமைகளுக்குக் கூடுதலாக 10 கிலோ சேர்த்து மொத்தம் 25 கிலோ எடையுள்ள உடமைகளை, மாணவர்கள் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.
இச்சலுகை பயணச் சீட்டுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம், மொபைல் ஆப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட புக்கிங் ஏஜென்சிகள் வழியாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
பயணத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் வழங்கிய ஒளிப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை (ID Card) மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டையில் மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதி தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். விமான நிலைய ‘செக்-இன்’கவுன்டரில் இது சரிபார்க்கப்படும். மாணவர்களுக்கான இந்த சிறப்புத் தள்ளுபடி மற்றும் கூடுதல் லக்கேஜ் சலுகை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் ‘வெடி வழிபாடு’ ரத்து!
வனத்துறை கோரிக்கையை ஏற்று
திருவிதாங்கூர் தேவசம் வாரியம் நடவடிக்கை!
திருவிதாங்கூர் தேவசம் வாரியம் நடவடிக்கை!
திருவனந்தபுரம், செப். 26- சபரிமலை அய்யப்பன் கோயிலில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், காலம் காலமாக நடத்தப்பட்டு வந்த ‘வெடி வழிபாடு’ இந்த ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்படுவதாகத் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அறிவித்துள்ளது.
பெரியார் வனவிலங்கு சரணாலயத்தின் வனப்பகுதியில் அமைந்திருக்கும் சபரிமலை அய்யப்பன் கோயிலில், பக்தர்கள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்திற்குப் பலன் வேண்டி நாள்தோறும் கட்டணம் செலுத்தி வெடி வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்தது. இதற்காகக் கோயில் வளாகத்திற்கு அருகில் உள்ள கிட்டங்கியில் சுமார் 500 கிலோ அளவிலான வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
வெடி வழிபாட்டின் போது எழும் கடுமையான சத்தம், அச்சுறுத்தல் மற்றும் வெடிபொருட்களின் இருப்பு ஆகியவை அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்குப் பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் இருப்பதாக வனத்துறை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது.
வனத்துறையின் இந்தக் கோரிக்கையை தீவிரமாகப் பரிசீலித்த திருவிதாங்கூர் தேவசம் வாரியம், வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வனச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளது.
