படிக்கக் கூடாது – தெருக்களில் நடக்கக் கூடாது – கோயிலுக்குள் நுழையக்கூடாது – பெண்களுக்கு உரிமை கிடையாது என்றிருந்த நிலையை மாற்றி அமைத்தவர் யார்?
தந்தை பெரியார்தானே! அதனால்தான் அவருக்குப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்!
பெரியார் கருத்துக்கு உடன்படாதவர்கள் இருக்கலாம்;
ஆனால், பெரியாருக்கு நன்றிக் கடன் படாதவர் யாருமில்லை!
தந்தை பெரியார்தானே! அதனால்தான் அவருக்குப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்!
பெரியார் கருத்துக்கு உடன்படாதவர்கள் இருக்கலாம்;
ஆனால், பெரியாருக்கு நன்றிக் கடன் படாதவர் யாருமில்லை!

- படிக்கக் கூடாது – தெருக்களில் நடக்கக் கூடாது – கோயிலுக்குள் நுழையக்கூடாது – பெண்களுக்கு உரிமை கிடையாது என்றிருந்த நிலையை மாற்றி அமைத்தவர் யார்? தந்தை பெரியார்தானே! அதனால்தான் அவருக்குப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்! பெரியார் கருத்துக்கு உடன்படாதவர்கள் இருக்கலாம்; ஆனால், பெரியாருக்கு நன்றிக் கடன் படாதவர் யாருமில்லை!
- பெரவள்ளூரில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
- தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாடுகிறோம்?
- 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனை!
- பெற்ற தாய், வளர்ப்புத் தாய் போய் – இன்று வாடகைத் தாய் எனும் நிலை வந்துவிட்டது!
- சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?
- அன்று கோயிலுக்குள் நுழைய முடியாதவர்கள், இன்றைக்கு நுழைய உரிமை எப்படி கிடைத்தது?
- இளம் பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி தேவர்+அடியார் என்று ஆக்கிய நிலை ஒழிந்தது எப்படி?
- உணவு விடுதியில் உட்கார்ந்து சாப்பிடும் இடத்திலும் பேதம்!
- குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது யார்?
- உத்தரப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியுள்ளார்களே!
- திரும்பிய பக்கமெல்லாம் நம்மினத்தவர்கள் டாக்டர்கள் தென்படுகிறார்களே, இந்த மாற்றத்திற்கு யார் காரணம்?
- இராணுவத் துறையிலும் இன்று பெண்கள்!
- பார்ப்பனப் பெண்களுக்கு உரிமை கூட பெரியாரால் கிடைத்தது, ஏன்?
சென்னை, செப்.19 தந்தை பெரியார் உழைப்பால், பணியால் பயன் பெறாதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது. அவர் கொள்கைகளை முழுமையாக ஏற்காதவர்கள்கூட இருக்கலாம்; ஆனால், அவருக்கு நன்றிக் கடன்படாதவர்கள் யாருமில்லை. அதனால்தான் தந்தை பெரியாருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரவள்ளூரில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
்கடந்த 17.9.2026 அன்று மாலை 7 மணிக்கு, பெரம்பூர், அகரம், பெரவள்ளூர் சதுக்கத்தில், வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நம்முடைய அறிவாசான், நமக்கெல்லாம் விழிதிறந்த வித்தகர், உலகின் ஒப்புயர்வற்ற தலைசிறந்த சிந்தனை யாளரான அவருடைய பிறந்தநாள் விழாவை உல கெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் இன்றைக்குக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூரிலிருந்து உலகம் வரை பரவி, நடந்து கொண்டிருக்கிற விழாவிற்கு, இந்தப் பகுதியிலே வடசென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அற்புதமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நல்ல சிறப்பான முயற்சி. இங்கே, தந்தை பெரியார் அவர்களுடைய முழு வாழ்க்கை வரலாறு 12 தொகுதிகள் வெளியிட்டு, அதனை இங்கே பரப்பி இருக்கிறார்கள். அதுபோலவே தந்தை பெரியார் அவர்கள் கேட்ட கேள்விகள் என்ற கையடக்கமான ஒரு சிறு நூல், பயணம் செல்லும்போது கூட படிக்கலாம் அப்படிப்பட்ட எளிமையாக ஆக்கப்பட்டிருக்கிற அந்த நூல் வெளியீட்டு விழா – அதைவிட சிறப்பாக எந்த ஒரு இயக்கமும், எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாருக்குப் பிறந்த நாள் மலர், 65 ஆண்டுகளாக பிறந்த நாள் மலர் – விடுதலை மலர் என்று ஒருவர் சிறப்பாக கட்டுரையில் வியப்போடு குறிப்பிட்டிருந்தார்.
அப்படிப்பட்ட சிறப்பிற்குரிய பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அருமை நண்பர்களே, தோழர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யார் சொன்னாலும், நம்முடைய கருத்துகள் போய்ச் சேர வேண்டும். நாங்கள்தான் சொல்ல வேண்டும் என்பது அல்ல.
திராவிடர் கழகம் கட்டுப்பாடான ஓர் இயக்கம். கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான ஓர் இயக்கம்.
இன்றைக்கு அறிவாசான் தந்தை பெரியார் அவர்க ளுடைய 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை
ஏன் கொண்டாடுகிறோம்?
ஏன் கொண்டாடுகிறோம்?
முதல் கேள்வி என்னவென்றால், ஏன் நாம் பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறோம்? ஏன் கொண்டாட வேண்டும்? இதுவரையில் அவர் செய்த சாதனை என்ன? இதை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் ‘படித்த அறிவாளிகள்’ என்று தங்களை அழைத்துக் கொள்ள கூடியவர்கள், இன்னொரு கேள்வி கேட்கிறார்கள். அந்தக் கேள்வி என்னவென்றால், இப்பொழுது பெரியாருக்கு என்ன வேலை? இப்பொழுதுதான் எல்லாம்தான் மாறிப் போயிற்றே என்று கேட்கிறார்கள். தமிழில் கேட்ப தைவிட கொஞ்சம் இங்கிலீஷ் படித்ததினால், Is Periyar relevance today? (இன்று பெரியார் பொருத்தமானவரா?) என்றெல்லாம் கேட்கிறார்கள். இப்பொழுதுதான் அதிகம் தேவை. ஏனென்றால், முன்பு இருந்த தற்குறிகள் என்பதற்கும், இப்போது இருக்கிற தற்குறிகள் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்பு இருந்த தற்குறிகள் என்று சொல்லக்கூடியவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்; ஆனால், சிந்திக்கத் தெரிந்தவர்கள். ஆனால், இப்போது இருக்கிற தற்குறிகள், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்; சிந்திக்கத் தெரியாதவர்கள்.
தற்குறிகள் என்று சொல்லும்போது, அந்தப் பொருளே மாறிப் போகிறது. பழுதடைந்த ஒரு கணினியைக் கொண்டு வந்து எம்.ஏ.வோ அல்லது பிஎச்டியோ படித்தவர்களிடம் கொடுத்தீர்கள் என்றால், அதனைச் சரி செய்வதற்குக் கொஞ்சம் திணறுவார்கள். கைப்பேசியை இன்றைக்கு எல்லாரும் வைத்திருக்கிறார்கள். கைப்பேசி இல்லாதவர்களே கிடையாது. பிச்சை கேட்கிறவர் கூட கைப்பேசி வைத்திருக்கிறார். கைப்பேசியை எல்லோ ரும் வைத்திருக்கிறோமே, இதுவரையில், அதில் எத்தனை செயலி இருக்கிறது. அவை அத்தனையும் பயன்படுத்துகிறவர்கள் யாராவது ஒருவர் உண்டா? எல்லோருக்கும் தெரியுமா என்று கேட்டால், அதைப்பற்றி அதிகமான அளவுக்குத் தெரிந்தவர்கள் யார் என்று சொன்னால், நம்ம மாதிரி வயதானவர்கள் அல்ல. மூத்தவர்களும் அல்ல.
ஒரு வீட்டில் யார் மிகவும் இளவட்டோ, யார் சின்ன பிள்ளையோ, யார் ‘ஜென்–சி’ என்று ஒரு கேட்டகிரி புதிதாக ஒரு வார்த்தை வந்திருக்கிறது. அவர்களுக்குத்தான் தெரியும். டிவி, ரிமோட் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அந்த ரிமோட்டை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ‘‘தாத்தா, உங்களுக்குத் தெரியாது, என் கையில் கொடுங்கள், என்ன அலைவரிசை நீங்கள் பார்க்கவேண்டும்’’ என்று ஒரு சில நொடிப்பொழுதில், அதை சரி செய்துவிடுவார்கள். அவ்வளவு பெரிய அறிவு காலத்தில், நாம் வாழ்கிறோம். அப்படிப்பட்ட இடத்தில் இந்த அறிவினுடைய முன்னோக்கத்தைச் செய்தவர் தந்தை பெரியார் என்ற மாமனிதர்.

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர்
100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனை!
பெரியார் என்ன செய்தார்? என்று எப்பொழுது கேட்கி றார்கள்? 100 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தை உண்டாக்கிய பெரியார் அவர்கள், அவருடைய சுய சிந்தனையினாலே அவர் சிந்தித்துச் சொன்னார். ‘‘இன்னும் 100 ஆண்டு களுக்குப் பிறகு பெட்ரோலில் ஓடாது வண்டி. அதற்குப் பதிலாக மின்சாரத்திலயே கார் ஓடக்கூடிய அளவுக்கு வந்துவிடும். இனிமேல் பெட்ரோல் தட்டுப்பாட்டைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்’’ என்று. அதற்கு எளிய உதாரணம் சொல்கிறேன். இன்றைக்குச் சென்னையில் நாமெல்லாம் மின்சாரப் பேருந்திலே பயணம் செய்கிறோம். நம்முடைய காலத்திலேயே பார்க்கிறோம்.
‘பகவானை வேண்டிக்கொண்டு ராமேஸ்வரம் போனோம்’’ என்றார் ஒருவர்.
‘‘ஏங்க, ராமேஸ்வரம் போனீங்க?’’ என்று அவரிடம் கேட்டால்,
‘‘பிள்ளை வரம் கேட்டுப் போனோம். திருமணமாகி பல ஆண்டுகள் ஆயிற்று. குழந்தைப் பேறு இல்லை. அதற்காக கோயில் கோயிலாகச் சென்றோம். இப்பொழுது ராமேஸ்வரம் போய்விட்டு வந்தோம்’’ என்றார்.
பெற்ற தாய், வளர்ப்புத் தாய் போய் – இன்று வாடகைத் தாய் எனும் நிலை வந்துவிட்டது!
ராமேஸ்வரத்தை எல்லாம் தோற்கடிக்கக் கூடிய அளவுக்கு இன்றைக்கு, எங்கே பார்த்தாலும், கருத்தரிப்பு மய்யங்கள். பிரம்மாவுக்கு வேலையே இல்லை. கருத்தரிப்பு மய்யம் என்றால், அங்கே ஒருவருக்கு கருத்தரிப்பை உண்டாக்க முடியும் அல்லவா!
பெற்ற தாய், வளர்ப்புத் தாய் என்றெல்லாம் வார்த்தைகள் இருந்தது. இப்பொழுதுதான் வாடகைத் தாய் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தது. மிகப்பெரிய அளவிற்கு நம்மை எல்லாம் திகைக்க வைத்தது – அந்த வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சமூக மாறுதல்களை எல்லாம் உருவாக்கி, அதை ஓர் அறிவுப் புரட்சியாக, அமைதிப் புரட்சியாக செய்தவர்தான் தந்தை பெரியார்.
எல்லோரும் இப்பொழுது சொல்கிறார்கள், ‘‘மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்’’ என்று.
தலை சீவுவதற்குச் சீப்பைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்து கொள்ளலாம் என்று நினைத்தால், அது மாற்றம் அல்ல, ஏமாற்றமாகும்.
மாற்றம் என்பது அமைதிப் புரட்சியால் உருவாக வேண்டும். அந்த மாற்றம், அறிவு வளர்ச்சியாக இருக்க வேண்டும். அறிவு வளர்ச்சி மட்டுமல்ல, செயலிலே சமூக வளர்ச்சியாக இருக்கவேண்டும். அதை வைத்து தான் தந்தை பெரியார் அவர்கள், இன்றைக்கு ஒரு புரட்சிகரமான சமூகத்தை, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு சிறு அசம்பாவிதம் இல்லாமல், ஒருவிதமான வன்முறையும் இல்லாமல், ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற ஒரு புதிய சமூகச் சூழ்நிலையை உருவாக்கினார்.
அது எப்படி? என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?
சரி, வைத்தியர்களில் இருந்து ஆரம்பிப்போம். எங்களைப் பார்த்த உடனே, சுலபமாக, ‘‘ஓ. இவர்கள் எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள்’’ என்பார்கள்.
சரி, கடவுள் இருக்கு என்று சொல்கிறவர்களை எடுத்துக் கொள்வோம். கோயிலுக்குப் போகிறவர்களிடம் கேட்போம், ‘‘அய்யா, தனி மனிதரான தந்தை பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஓர் இயக்கத்துக்குப் பெயர்தான் ‘சுயமரியாதை இயக்கம்.’ அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்கிற இயக்கம். என்னுடைய இயக்கத்திற்கு மறுபெயர் சொல்லவேண்டும் என்றால், ‘அறிவுக்குச் சுதந்திரம்’ கொடுக்கின்ற இயக்கம். ‘‘நம்பு, நம்பு, நம்பு’’ என்று எல்லோரும் சொன்னார்கள். நான் சொல்வதை நம்பு, நம்பாவிட்டால் நரகம் என்று சொன்னார்கள். ‘‘நம்பினால் நடராஜா, நம்பாதவருக்கு எமராஜா’’ என்று பயமுறுத்தினார்கள்.
ஆனால், ‘‘நம்பாதே, யார் சொன்னாலும் நம்பாதே, நான் சொன்னாலும் நம்பாதே! உன் அறிவு என்ன சொல்லுகிறதோ, அதை நம்பு’’ என்று சொல்லி, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். அதிலே வரலாறு காணாத வெற்றியை, நூறாண்டு காலத்திலே பல நூறாண்டுகளாக இந்த மூட நம்பிக்கைகளை தலைகுப்புறப் போட்டுக் கவிழ்த்தார். மூடநம்பிக்கையற்ற, ஜாதியற்ற, பெண்ணடிமையற்ற எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுக்கிற ஓர் சமுதாயத்தைப் படைத்த, ஒரு தனி மனிதராக இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார், இன்றைக்கு அதை ஒரு பெரிய வளர்ந்துவிட்ட ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிய உலக இயக்கமாக மாற்றிவிட்டார்.
பெரியார் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாட வேண்டும்? நம்மால் முடியுமா? மாற்ற முடியுமா? என்று கேட்ட நேரத்தில், ‘‘முடியும்’’ என்ற தன்னம்பிக்கையோடு, எவர் வந்தாலும், எவர் வராவிட்டாலும், எவர் இருந்தாலும், எவர் போனாலும் எனக்குக் கவலை இல்லை என்று ஒற்றைத் தனி மனிதராக இயக்கத்தைத் தொடங்கி, உலகமே இன்றைக்கு, உலகத் தலைவராக அவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிற காரணத்தால்தான், பெரியாரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறோம்.
அன்று கோயிலுக்குள் நுழைய முடியாதவர்கள், இன்றைக்கு நுழைய உரிமை எப்படி கிடைத்தது?
அதற்கு ஒரு சில உதாரணம்; வைதிகர்களுக்கு கோயிலுக்குள் சென்று பாருங்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இப்பொழுது இருக்கும் நிலை என்ன? இன்றைக்கு எலக்ட்ரிக் லைட்டிலேயே கோயிலின் பெயர், கடவுள்களின் பெயர்களைப் போட்டிருக்கிறார்கள். எலக்ட்ரிக் விநாயகர், புத்தக விநாயகர் என்றெல்லாம் வடிவமைக்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால், கோயிலுக்குள் செல்பவர்களின் நிலை எப்படி இருந்தது? இன்றைக்குக் கோயிலுக்குள் போகும்போது, உடனே கிடுகிடு என்று உள்ள போய்விடுகிறார்கள். என்ன ஜாதி? என்று யாரும் விசாரிப்பது இல்லை. அது மட்டுமல்ல ஒருபடி மேலே போய், கடைசியாக பெரியார் வெற்றி பெற்றது, ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்’’ என்ற நிலை. இந்த இடம் வரையில் தான் நிற்கலாம்; இந்த ஜாதியா, இந்த இடம் வரையில்தான் நிற்கவேண்டும். அதற்கு மேல் அந்த ஜாதி வரக்கூடாது. தாழ்த்தப்பட்ட சமூகமாக, ஆதி திராவிட சமூகமா, நீ வெளியே நில்லு என்று சொன்ன நேரத்திலே, ‘‘உள்ளே ஏன் போகக்கூடாது?’’ என்று கேட்டார் தந்தை பெரியார். அதேபோல, வடக்கே அம்பேத்கர் கேட்டார். அதற்காக தந்தை பெரியார் அவர்கள் ஆட்சிக்குக் கூட போகவில்லை. மக்கள் மத்தியிலே போராட்டக் களத்தில் நின்றார்.
உடனே, ஆங்காங்கே இருந்த தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கொஞ்சம் நகர்ந்து முன்னால் போனார்கள். உள்ளே மணி அடிக்கிறவர், நம்ம இடம் பாதுகாப்பாக இருந்தால் போதும்’’ என்று நினைத்தார். ஆகவே, அவர்க ளோடு இரண்டு பேர் சேர்ந்துகொண்டு, ‘‘பரவாயில்லை, என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்தக் கருத்துக்கு வந்த உடனே, அவர்களே, அய்யய்யோ அரிஜன நலன் மிக முக்கியம் என்று சொல்லி, ‘‘உள்ளே வாங்க’’ என்று கொஞ்சம் பகுதிக்கு இடம் விட்டார்கள்.
இளம் பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி தேவர்+அடியார் என்று ஆக்கிய நிலை ஒழிந்தது எப்படி?
தந்தை பெரியார் அதோடு நிறுத்தவில்லை. மற்றவர்கள் எல்லாம் அதோடு நிறுத்திவிட்டார்கள். தந்தை பெரியார் சொன்னார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும், கோயில் கருவறையிலே உயர் ஜாதி தான் இருக்கிறது என்று போர்க் குரல் எழுப்பினார். இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக்கூடிய அளவிற்கு, ‘‘கருவறைதான், எங்களுடைய ஜாதிப் பாதுகாப்புக்கு முக்கியமான இடம்’’ என்பதை மாற்றிக் காட்டினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இருந்ததா? நினைத்துப் பார்க்க முடியுமா? பக்தர்கள் சிந்திப்பதற்காகச் சொல்லுகிறேன். அதுமட்டுமல்ல, நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பெண்கள் கதி என்ன? நம்ம வீட்டுப் பெண்களைக் கொண்டு போய், கோயிலில் சிறு சிறு பிள்ளைகளாக இருக்கிற பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாகப் பொட்டுக்கட்டி, ‘தேவதாசிகள்’ என்ற பெயராலே, கடவுளுக்கு அர்ப்பணித்தார்கள். கடவுளுக்கு மனைவி – தேவர்க்கு அடியார் – என்று அதற்குத் தத்துவங்களைச் சொல்லி, கோயிலில் பொட்டுக் கட்டி விட்டார்கள் அன்றைக்கு. பொட்டு அறுப்பு இயக்கம் நடத்தினார். தேவதாசிகள் என்ற கொடிய முறையைத் தூக்கி எறிந்தார். இப்பொழுது கோயில் விழாக்களில் டான்ஸ் ஆடலாமே தவிர, இன்றைக்குக் கோயிலில், எங்கேயாவது தேவதாசி முறை உண்டா? சட்டபூர்வமாகக் கிடையாது. ஆனால், வேறு மாநிலங்களில் இன்னும் அந்த முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. ஆனால், இங்கே இல்லை என்றால், அதற்குக் காரணமானவர் நூற்றாண்டு விழா நாயகர், பெரியார்தான்!
எனவே, அந்த விடுதலை பெற்ற பெண்கள் என்ன நினைக்க வேண்டும்? ஏன் பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்? நாளைக்குப் பெரியார் இல்லையானால், பழைய நிலை வர வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது போராட்டம். ஆர்எஸ்எஸ் போராட்டம்; ஏன் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கிறோம்? ஏன் ஒன்றிய அமைப்பில் இருக்கக்கூடிய பாஜகவை எதிர்க்கிறோம்? என்றால், நாங்கள் தேர்தலுக்கு நிற்காதவர்கள்; பதவிக்குப் போகாதவர்கள். பதவியை சாதாரணமாக மதிக்கிறவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு, ஆட்சியாளரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? அந்த ஆட்சியாளருடைய விஷக் கொள்கைகள் – சமுதாய மாற்றத்துக்கு அவை மிகப்பெரியத் தடை. ஆகவேதான், மீண்டும் ஜாதி வேண்டும்; மீண்டும் ஜாதி தர்மம் வேண்டும் என்று சொல்லுகிற போது, மீண்டும் கோயில்கள், அதைக் கட்டுப்பாடோடு செய்தார்கள். இன்றைக்கு அரசாங்கக் கட்டுப்பாட்டின்படி கூட நடக்காமல் இருக்கிறது. அதுதான் இந்து ரிலிஜியஸ் எண்டோவ்மென்ட் போர்டு (Hindu Religious Endowment Board) என்று இருக்கிறது. பார்ப்பனர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள்; அதை மாற்றிய ஆட்சி எது? திராவிடர் ஆட்சி, பனகால் அரசருடைய ஆட்சி.
அது இன்றைக்கு மறுபடியும் தனியார் வசமாக வேண்டும்; மறுபடியும் பார்ப்பனர் வசமாகும் போது, அதைத் தடுத்துக் கொண்டிருக்கிற சக்தி, தந்தை பெரியார் என்ற மாபெரும் தத்துவம் தான். ஆகவே, கோயிலுக்குள்ளே போகிற பக்தர்களே, நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். பெரியார் பிறந்த நாள் விழாவை நாங்கள் கொண்டாடுவதை விட, நீங்கள் முன்னால் நின்று கொண்டாட வேண்டும். பெரியார் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல; தத்துவம், காலகட்டம், சகாப்தம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்.
உணவு விடுதியில் உட்கார்ந்து சாப்பிடும்
இடத்திலும் பேதம்!
இடத்திலும் பேதம்!
கோயிலை விட்டு வெளியே வந்து, ஓட்டலுக்குப் போய் சாப்பிடலாம் என்று அங்கே போனால், யார் நீங்கள்? என்று கேட்டு, ‘‘இங்கு பிராமணாள் மட்டும்தான் உள்ளே போக வேண்டும். பார்ப்பனரல்லாதாரான நீங்கள் எல்லாம் உள்ளே போகக்கூடாது, வெளியில் நில்லுங்கள். வராண்டாவில் அமர்ந்து சாப்பிடுங்கள்’’ என்பார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு ‘விடுதலை’யில் வெளிவந்ததைப் படித்திருந்தால், உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இன்றைக்கு டில்லியில் பிரபலமான வழக்குரைஞரான கே.கே.வேணுகோபால். அவருடைய அப்பாதான், எம்.கே.நம்பியார். எம்.ஆர். இராதா அவர்கள் நடத்திய நாடகங்களுக்குத் தடை போட்ட போதெல்லாம், அடுத்த நாள் உயர்நீதிமன்றத்தில், அந்தத் தடையை நீக்கி, அனுமதி வாங்கிப் போடுவார். அவரைப் பற்றி அவருடைய மகனே எழுதினார், ‘இந்து’ பத்திரிக்கையில். அதைச் சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறேன் நான்.
அவர் என்ன எழுதியிருக்கிறார் என்றால், அய்ந்து பேர் சேர்ந்து, ஓட்டலுக்குப் போகிறார்கள். அய்ந்து பேரில், மூன்று பேர் பார்ப்பனர்கள். இரண்டு பேர் பார்ப்பனரல்லாதவர். நம்பியார் என்றால், அவர்கள் கேரளத்தில் உயர் ஜாதிக்காரராக நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள். அவர் சொன்னார், மூன்று பேர் உள்ளே போயிருக்கிறார்கள். நாங்களும் உள்ளே போகிறோம் என்று சொல்கிறார். ‘நீங்கள், இன்னார்’ வெளியில் உட்காருங்கள் என்று சொல்கிறார்கள்.
இன்றைக்கு அந்த நிலை உண்டா? ‘பிராமணாள் காப்பி கிளப்’ என்று போட்டிருந்தார்களே முன்பு, அது இன்றைக்கு உண்டா? எப்படி நடந்தது? ஆயுத பூஜை கொண்டாடியதினாலேயா? சரஸ்வதி பூஜை கொண்டாடியதினாலேயா? அல்லது கும்பாபி ஷேகத்தைத் தொடர்ந்து நடத்தியதினாலேயா? இல்லை நண்பர்களே, பெரியார் என்ற மாபெரும் மனிதர் தொடர்ந்து போராடி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் இருந்த காரணத்தால்தான் தோழர்களே, அது நடந்தது.
இந்த இயக்கத்தினுடைய தத்துவத்தை, பெரியாரு டைய தத்துவத்தை மறைத்தால், மீண்டும் அந்தப் பழைய கதை திரும்பும். ஆகவேதான், பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வேண்டும்.
குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது யார்?
சரி, ஓட்டலில்தான் அன்றைக்கு இப்படி என்றால், நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்காகப் பள்ளிக்கூடத்துக்குப் போனால், ‘‘உனக்கு இடம் இல்லை. காரணம், நீ படிக்கக்கூடிய ஜாதி இல்லை’’ என்றார்கள். அம்பேத்கர் போன்ற உலக அறிவாளிகளையே தனியே உட்கார வைத்திருந்தார்கள். நீதிக்கட்சி ஆட்சி வருகின்ற வரையில், நம்முடைய திராவிடர் இயக்க ஆட்சி 1920 ஆம் ஆண்டு வருகின்ற வரையில். 110 ஆண்டு கால வரலாறு உடைய நீதிக் கட்சி ஆட்சி, பெரியாருடைய உழைப்பினால், தனித்தனியாக ஆதி திராவிடர் நலப்பள்ளி என்று தனியே உண்டாக்கினார்கள். ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. ஆதி திராவிடர், மீதி திராவிடர் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது. இது எப்படி மிகப்பெரிய அளவிற்கு வந்தது? அற்பு தங்களா? அல்லது சத்திய சாய்பாபா கையைத் தூக்கினார், பொத்தென்று மாறிப் போயிற்று என்று சொல்ல முடியுமா? பெரியார் என்ற மாமனிதருடைய உழைப்பு. பள்ளிக்கூடத்துக்குப் போகிறீர்கள், ‘‘இல்லை, இல்லை எல்லாருக்கும் தகுதி திறமை வராது’’ என்ற உடனே, போராடிக் கொண்டிருக்கிறார். அன்றைக்கு ஆரம்பித்தப் போராட்டம், குலக்கல்வியிலிருந்து இன்றைய நீட் தேர்வு வரையில், இன்று வரையில் அவற்றை எதிர்த்துப் போராடுவதினால்தான், பல பேருடைய பிள்ளைகள், அது ஆர்எஸ்எஸ்காருடைய பிள்ளையாக இருக்கலாம். அவர் எந்த ஜாதியாக இருந்தாலும், படிக்கலாம்; அதற்காக பாடுபடுவதுதான் கருப்புச் சட்டைப் படை. அதற்காகப் பாடுபடுபவதுதான் தந்தை பெரியாருடைய தத்துவம். பள்ளிக்கூடத்துக்குப் போனால், அங்கே பேதம் இல்லை. இப்பொழுது கூட கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டிப் பார்க்கிறார்கள். கல்வித் திட்டத்தின் மூலமாக வருணாசிரம தர்மத்தை மீண்டும் புகுத்தப் பார்க்கிறார்கள். அதைத் தடுப்பதற்குத் தடுப்பூசி எது? எப்படி கோவிட் வந்தால், தடுப்பூசி போடுகிறோமோ, அது மாதிரி இந்தப் பேதங்கள், மிகப்பெரிய அளவிற்கான கொடுமைகள், ஜாதி பேதங்களை எல்லாம் விரட்டவேண்டும் என்றால், பெரியார் தேவைப்படுகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியுள்ளார்களே!
ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? இதற்காகத் தேவைப்படுகிறார். மற்ற மாநிலங்களைப் பாருங்கள்; உத்தரப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை மூடுகிறார்கள். இங்கே, ஆச்சாரியார் காலத்தில் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளை, கல்வி வள்ளல் காமராசர் திறந்தார். அதற்கு மேலும் பள்ளிகளைத் திறந்தார். அதுதானே ‘திராவிட மாடல்’ ஆட்சி! அதுதானே தொடர்ந்து காமராசர் ஆட்சி! ஏன் கல்வி வள்ளல் காமராசரைப் பாராட்டுகிறோம்? ஏன் அண்ணாவைப் பாராட்டுகிறோம்? ஏன் கலைஞரைப் பாராட்டுகிறோம்? ஏன், ஸ்டாலின் ஆட்சியைப் பாராட்டுகிறோம்? ஏன் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தோம்? தமிழ்நாட்டில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டுவந்து 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் வைக்கப்பட்டதே, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா? இதை ஒழிக்க வேண்டும் என்பதுதானே இன்றைக்கும் துடிக்கி றார்கள்!
அதற்கடுத்தது, அன்றைக்கு மிகப்பெரிய அளவுக்கு உத்தியோகத்தில் நம்மவர்களே கிடையாது. எல்லா இடங்களிலேயும் பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை, இன்றைய இளைய தலைமுறையினர், ஜென்–சி என்று சொல்லிக் கொண்டு வருகின்ற தலை முறையினர் இதை வீடு வீடாகச் சொல்ல வேண்டும்.
திரும்பிய பக்கமெல்லாம் நம்மினத்தவர்கள் டாக்டர்கள் தென்படுகிறார்களே,
இந்த மாற்றத்திற்கு யார் காரணம்?
இந்த மாற்றத்திற்கு யார் காரணம்?
இன்றைக்குக் காலையில், சிற்றுண்டி சாப்பிடு வதற்காக எங்களுடைய வீட்டில் அமர்ந்தோம். உட்கார்ந்த உடனே, சர்க்கரைப் பொங்கல் கொண்டுவந்து வைத்தார்கள். மருத்துவப் படிப்பை முடித்துவிட்டுப் பயிற்சிக்கு செல்லவிருக்கின்ற என்னுடைய பேத்தி சாப்பிட வந்தார். அவரிடம் நான், ‘‘இந்த சக்கரைப் பொங்கல் எதற்குத் தெரியுமா? பெரியார் பிறந்திருக்கவில்லை என்றால், நீ மருத்துவப் படிப்பு படித்திருக்க முடியாது. அதை நினைத்து இந்தச் சக்கரைப் பொங்கலை சாப்பிடு’’ என்று சொன்னேன்.
இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள் டாக்டர்களாக வந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பார்ப்பனர்கள் டாக்டர்களாக இருந்தார்கள்; அல்லது வேற்று மாநிலத்தவர்கள் டாக்டர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அந்த மாற்றம் எப்படி வந்தது? நூறாண்டு கால சுயமரியாதை இயக்கத்தினுடைய உழைப்பால், பெரியார் என்ற மாபெரும் அந்தத் தலைவருடைய அர்ப்பணிப்பால்; நமக்காக அவர் துன்பங்களைத் தாங்கிக் கொண்டார். நமக்காக அவர் சிறைக்குச் சென்றார். இறுதி நாள்களிலே சிறுநீர் இயற்கையிலே பிரியக் கூடிய அளவிற்கு இல்லை என்றாலும், கடைசிக் கூட்டம் தியாகராய நகரிலே நடைபெறும்போது, ‘‘அய்யோ, அம்மா’’ என்று வலியோடு முணகிக் கொண்டே பேசியபோதுகூட, ‘‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுப் போகிறேனே’’ என்று கவலைப்பட்ட ஒரே தலைவர் அவர்தான். மனிதத்தன்மையை காப்பாற்றுவதற்காக பாடுபட்டவர் அந்த தலைவர்தான். அதுமட்டுமல்ல, இதெல்லாம் இப்படி இருக்கிறதே என்று சொல்லி, காவல் நிலையத்தில் போய் புகார் செய்யலாம் என்று போனால், அங்கே பாத்தீர்களேயானால், ‘‘கான்ஸ்டபிள் எல்லாம் நம்ம ஆளு; அய்ஜி எல்லாம் அவாள்’’ என்று இருந்த நிலை.
இராணுவத் துறையிலும் இன்று பெண்கள்!
இன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. கவிஞரும், மற்றவர்களும் இங்கே சொன்னார்கள், பெண்களின் கைகளில் உள்ள கரண்டியைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அந்தக் கைகளில் பேனாவைக் கொடுத்த ஒரு மாமனிதர் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் – அவர் செய்த புரட்சிதான் – பெரியார் செய்த அமைதி புரட்சி. பேனாவோடு நிற்கவில்லை. அது உத்தியோகத்தோடு இருக்கவேண்டும். அடுத்த கட்டத்துக்குப் போங்கள் என்றார். ஆணுக்குதான் வீரம், பெண்களுக்கு வீரம் கிடையாது என்று சொன்னார்கள். பெண்களுக்கும் வீரம் உண்டு; மகளிருக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதற்காகப் பெண்களும் ராணுவத்திலும், காவல் துறையிலும் பணியாற்றுகிறார்கள்.
எனவே, ராணுவத்துக்குப் போனாலும், காவல் துறைக்குப் போனாலும், பெரியார் இல்லாத இடமே கிடையாது. பெரியார் செய்த புரட்சியினுடைய தாக்கம் பாயாத இடமே எந்தத் துறையிலும் கிடையாது.
சரி எல்லாம் முடிந்து போயிற்று. சினிமா, கொஞ்சம் கலை அங்கே போய் ரிலாக்சேஷன் நமக்கு வேண்டும் என்பதற்காக அங்கே போனார், 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தத் துறையிலும் பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள். ‘‘ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா’’ என்றும், ‘‘கிருஷ்ணா, முகுந்தா முராரி’’ என்று பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு மிக தெளிவாக அந்தத் துறையிலும் தமிழர்கள் தலையெடுத்தது மட்டுமல்ல, இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இவ்வளவு மாறுதல் வந்திருக்கிறதே என்று சொல்லி, அக்கிரகாரத்துப் பக்கம் திரும்பிப் பார்ப்போம் என்று பார்த்தால், அக்கிரகாரமே இப்பொழுது கிடையாது. எல்லாம் தனித்தனியாக இருக்கிறார்கள். மீண்டும் அக்கிரகாரம் உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பதற்குத்தான் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.
பார்ப்பனப் பெண்களுக்கு உரிமை கூட பெரியாரால் கிடைத்தது, ஏன்?
இன்றைக்குப் பெரியாருடைய கொள்கைகளுக்கு, அதற்கு உடன்படாதவர்கள் இருப்பீர்கள். பொது மக்களுக்காகச் சொல்லுகிறேன், தோழர்களுக்காகச் சொல்லுகிறேன், ‘‘பெரியார் என்ன செய்தார்?’’ என்று தெரியாத புல்லுருவிகளுடைய கேள்விகளுக்காகச் சொல்லுகிறேன். தெளிவாக இதைத்தான் செய்தார், பெரியார் என்ன செய்தார்? மிகத் தெளிவாகவே மிகப்பெரிய அளவிற்கு அதற்கு அக்கிரகாரமே சாட்சி; பார்ப்பனர்களே சாட்சி! இன்றைக்கு அக்கிரகாரம் இல்லையென்றாலும் கூட, தோழர்களே, தாய்மார்களே உங்களுக்குச் சொல்கிறேன். விதவைகள் என்று சொல்லி, நம்முடைய நாட்டில் கைம்பெண் கூட்டம் இருந்ததே, இன்றைக்கு அவர்களின் மறுமணம் எப்படி நடக்கிறது? அதுமட்டுமல்ல, நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன், இங்கேயும் சொல்கிறேன், முன்பெல்லாம் வயதானவர்கள் மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை அணிந்து கொண்டிருப்பார்கள். இன்றைக்கு எங்கே யாவது, ‘மொட்டப்பாப்பாத்தி’ என்று ஒருவரைப் பார்க்க முடியுமா?
மொட்டைப் பாப்பாத்தி அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றால், ‘தசாவதாரம்’ திரைப்படத்தில், கமலஹாசன் வேஷத்தைத் தான் பார்க்க முடியும்.
ஏன் பெரியாரைக் கொண்டாட வேண்டும்? இதற்காகத்தான் பெரியாரை கொண்டாட வேண்டும். பெரியாரை மறந்தால், மீண்டும் பழைய கதை திரும்பும்; மீண்டும் பள்ளிக்கூடத்திலே உங்களுக்கு இடம் இருக்காது. அதனுடைய முதல் அச்சாரம் தான் நீட் தேர்வு. அதனுடைய சோதனைகள் தான் இன்றைக்கு.
எனவேதான், பெரியார் இல்லாத வீடு கிடையாது; பெரியாருடைய தாக்கம் நுழையாத துறை கிடையாது. எல்லோருக்கும் இது நேரடியாகத் தெரியாது. பெரியாருக்கு உடன்படாதவர்கள் உங்களிலே பலர் இருக்கலாம்; அந்தக் கொள்கையிலே பெரியாருக்குக் கடன் படாதவர்கள் யாருமே கிடையாது. எல்லோரும் கடன் பெற்றவர்கள். கடனைத் திருப்பி நாணயமாக அடைப்பதற்காக பெரியாரை வாழ்த்துங்கள்! பெரியாரைப் பின்பற்றுங்கள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை
யாற்றினார்.
