தஞ்சையில், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மினி மாரத்தான் நடை – தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியாரைப் பின்பற்றி நடப்போம் என்பதற்கான நடையே இது!
திராவிடர் கழகத் தலைவர் சூளுரை!

தஞ்சை, செப்.19  தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றி நடப்போம் என்பதற்கான அடையாளம்தான் இது என – தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, தஞ்சையில் இன்று (19.9.2026) நடைபெற்ற மினி மாரத்தான் நடை பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதி, சமத்துவத்திற்கான
பெரியார் நடை!

தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர் ெஹரிட்டேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து இன்று (19.9.2026) காலை 6 மணிமுதல் 8 மணிவரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் நடை (Periyar Walk) நிகழ்வை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியம், காமாட்சி மருத்துவமனை, பழைய வீட்டு வசதி வாரியம், குழந்தை ஏசு கோயில், ஆர்.ஆர்.நகர் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியரின் வேக நடையை வியந்து பார்த்த பொதுமக்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மாணவர்கள், இளைஞர்களோடு வேக வேகமாக நடந்து சென்றது அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாநகர மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு Rtn. TN. ஜெயக்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் சண்.ராமநாதன், து.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி, பாலாஜி, அகில இந்திய மகளிர் முன்னேற்ற சங்கத் தலைவர் சொர்ணா சூரியமூர்த்தி, ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த மகாராஜா உரிமையாளர் எம்.எஸ்.ஆசீப் அலி, Rtn. ரகுசக்திவேல், தலைவர் பிரபு, செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட கழகத் தலைவர் அமர்சிங், மாவட்டக் கழக காப்பாளர் அய்யனார் மாவட்டக் கழக செயலாளர் அருணகிரி, மாநில ப.க. அமைப்பாளர் கோபு பழனிவேல், மாநில கலைத்துறைசெயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வினை மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

கழகத் தலைவர் ஆசிரியர் உரை

இந்நிகழ்வைத் தொடங்கி வைத்து கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றியபோது,

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர செயலாளர் அருமைத் தோழர் சண்.இராமநாதன் அவர்களே, தஞ்சை மாநகர  மேயர் அருமைத் தோழர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம் அவர்களே, கழகத்தினுடைய பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே, ரோட்டரி சங்கத் தலைவர் தோழர் பிரபு அவர்களே, செயலாளர் ஜோதிபாசு அவர்களே, பொருளாளர் ரமேஷ் அவர்களே, அருமைத் தோழர்கள் வெற்றிக்குமார், தமிழ்செல்வன், வீரக்குமார் ஆகிய நண்பர்களே, ரோட்டரி மாவட்டத்தினுடைய ஆளுநர் அய்யா டி.என்.ஜெயக்குமார் அவர்களே, உதவியாளர் கணேஷ்குமார் அவர்களே, மற்றும் ஏராளமாக இங்கே திரண்டிருக்கக்கூடிய அனைத்து இயக்கத் தோழர்களே, அனைத்துக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெருமக்களே, மாணவச் செல்வங்களே, பெரியார் பிஞ்சுகள் உள்பட அனைவரையும் இந்த பெரியார் மாரத்தான் என்று சொல்லக்கூடிய ஓட்ட நடைபயிற்சியிலே வரக்கூடிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களுடைய 148 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா என்பது, அன்புராஜ் அவர்கள் இங்கே சுட்டிக் காட்டியதைப்போல, அமெரிக்காவிலே, கனடாவிலே, ஆஸ்திரேலியாவிலே, சிங்கப்பூரிலே, ஜப்பானிலே, இப்படி பலப் பல நாடுகளிலும் ‘‘பெரியார் உலகமயம், உலகம் பெரியார் மயம்’’ என்றாகி இருக்கிறது.

பெரியாரைப் பின்பற்றி நடப்போம், அதன் மூலமாக ஒழுக்கம் வளரும், உடல்நிலை மட்டுமல்ல, அறிவு நிலையும் வளரும். எனவேதான், பெரியாரைப் பின்பற்றுவோம், பெரியாரைப் பின்பற்றி நடப்போம், வாழ்க்கையிலும் நடப்போம், பாதையிலும் நடப்போம், கொள்கையிலும் நடப்போம், நடப்போம் நடப்போம், களைப்பின்றி நடப்போம், சோர்வின்றி நடப்போம், எதிர்ப்புகளைச் சந்திக்கக்கூடிய அளவிற்கு வலிமையோடு நடப்போம் என்ற பெருமையோடு இதைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வளர்க மனிதநேயம்! சுயமரியாதை!

– இவ்வாறு உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *