சென்னை, செப்.19- திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேற்று (18-09-26) சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தொழில் முதலீடு தொடர்பாக ஒவ்வொரு நாளும் தவெக அரசு ரீல் விடுகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆட்சிக்கு வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மிகுந்த சிரமப்பட்டு தமிழ்நாட்டுடைய பெயரை உயர்த்தி வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் அவருடைய உழைப்பால் தமிழ்நாடு பன்மடங்கு உயர்ந்தது. அய்ந்து ஆண்டு காலம் நல்லாட்சி வழங்கிய எங்களது தலைவர் ஏறத்தாழ 12.5 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து குவித்தார்.
அது இந்தியாவுக்குள் இருக்கிற நிறுவனங்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலக நாடுகளில் இருக்கிற அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பல லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கே சாரும்.
ரீல்ஸ் மோகத்தினால்…
இப்பொழுது ரீல்ஸ் மோகத்தி னால் தமிழ்நாட்டுடைய தலை யெழுத்து மாறிய இந்த நேரத்தில், வெறும் ரீல்ஸ் போடுவதற்காக தான் லண்டன் போயிருந்தார்களோ என்று யோசிக்க தோன்றுகிறது.
முதலமைச்சர் நேற்று திரும்பி வந்தார். முதல்முறையாக லண்டன் சென்றிருந்தது நாங்கள் உண்மையிலேயே சந்தோஷப் பட்டோம். தொழில் முதலீடுகளில் அரசியல் இருக்கக் கூடாது என ஆரம்பம் முதலே எங்கள் தலைவர் தெளிவாக இருக்கிறார். இது தமிழ்நாட்டின் எதிர்காலம். லண்டனில் இருந்து ஏதாவது நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் அங்கேயும் ரீல்ஸ் தான் வந்தது, முதலீடுகள் வந்த மாதிரி தெரியவில்லை. மீண்டும் மீண்டும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட முதலீடுகளைத் தான் தொடர்ச்சியாக திருப்பி திருப்பி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உண்மையான தொழில் முதலீடுகள்
எப்போதுதான் புதிய முதலீடு களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவீர்கள்? உண்மையான தொழில் முதலீடுகள் எப்போது வரும்? முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த வெளிநாட்டு பயணத்துக்கு சென்றாலும், செய்தியாளர்களிடம் பேசாமல் போகமாட்டார்.
வெளிநாடு சென்றவுடன் அடுத்த நாளே முதலீட்டாளர்களுடன் சந்திப்புகள் நடக்கும். அங்கே இருந்து உடனுக்குடன் செய்திகள் இங்கு வரும். அங்கிருந்து வந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார். ஆனால் இப்போது போகும் போதும் சரி, வரும்போதும் சரி முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அவர் சந்திக்கவில்லையென்றாலும் அமைச்சர்கள் சந்திருத்திருக்கலாம். ஏன் செய்தியாளர்களை உதாசீனப் படுத்துகிறீர்கள்?
லண்டனில் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டை அவமானப் படுத்திவிட்டார். இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
