ராமேசுவரம், செப். 19- இயந்திரக் கோளாறு காரணமாகக் கடல் அலையில் சிக்கி இலங்கை எல்லைக்குள் கரை ஒதுங்கிய ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயந்திரக் கோளாறு
கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள், நடுவழியில் படகில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தவித்தனர். அப்போது வீசிய பலத்தக் காற்றினாலும் அலையின் சீற்றத்தினாலும் படகு கட்டுப்பாட்டை இழந்து, இலங்கை கடல் எல்லைக்குட்பட்ட நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கியது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விடுவிப்பு
நீதிமன்ற விசாரணை யின் போது, மீனவர் கள் தரப்பில் “படகு பழுதானதன் காரண மாகவே தற்செயலாக எல்லை தாண்டி கரை ஒதுங்க நேரிட்டது” என்ற விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மீனவர்கள் 11 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.
இருப்பினும், அனுமதி இன்றி எல்லை தாண்டியதற்காக அவர்களுக்குத் தலா ரூ.50,000 (இலங்கை ரூபாய்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையைச் செலுத்திய பின், மீனவர்கள் 11 பேரும் முறைப்படி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
