பேராசிரியர்
மு. நாகநாதன்
அறிஞர் அண்ணாவின் உரையை 1957ஆம் ஆண்டிலிருந்து 1969 ஆம் ஆண்டு வரை சென்னையில் கேட்டிருக்கிறேன்.
பல்கலைக்கழகங்களில் உள்ள பல அறிவுத்துறைகளில் காணப்படும் உயரிய சிந்தனைகளின் ஒன்றிணைந்த பேருரையாக அறிஞர் அண்ணாவின் உரை அமைந்திருந்தது என்பதை எண்ணி எண்ணி இன்றும் வியப்பில் ஆழ்ந்து விடுகிறேன்.
மக்களாட்சி என்ற பெயரில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சட்டங்களைக் கடந்த 80 ஆண்டுகளில் ஒன்றிய அரசு இயற்றி வருவது இன்றும் நின்றபாடில்லை.
மிசா, தடா, பொடா, உப்பா போன்ற மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் பிரித்தானியக் கொடுங்கோல் ஆட்சியின் சட்டங்களை விடக் கொடியதல்லவா?
11-11-1957 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் “நாட்டின் மதிப்பிற்குரியவற்றை அவமதிக்கும்தடைச்சட்ட முன்வடிவு (The Prevention of Insult to Nation Honour)” கொண்டு வரப்பட்டபோது, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை, சட்டம் தொடர்பாக அவரின் தொலைநோக்குப் பார்வையும், சீரிய சிந்தனையும், மனித உரிமைக்காக அவர் எழுப்பிய முதல் முழக்கத்தையும் இன்றும் உணரமுடிகிறதல்லவா!
1957 ஆம் ஆண்டுதான் திமுக முதன்முதலாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தத் தேர்தலில் பெரியார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, குறிப்பாக அன்றைய முதல்வர் காமராசருக்கு ஆதரவாக முழுவீச்சில் பரப்புரை செய்கிறார். காங்கிரஸ் வெற்றி பெற்று காமராசர் தலைமையில் ஆட்சி அமைகிறது. காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி என்ற கட்சிக்கு எதிர்க்கட்சி தகுதி வழங்கப்படுகிறது.
அறிஞர் அண்ணா தலைமையில் திமுக 15 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய பணிகளைச் சிறந்த முறையில் மேற்கொள்கிறார்கள்.
பெரியார் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். இதைத் தடுப்பதற்கு, ஒரு சட்டத்தை இயற்றி, மீறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்று சட்டமன்றத்தில் அறிவிப்புச் செய்யப்படுகிறது.
இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறிஞர் அண்ணா ஆகச்சிறந்த உரையை நிகழ்த்துகிறார்.
இவ்வுரையின் சில கருத்துக்கள்:
“ஜாதிவெறியினால்தான் காந்தியார் கோட்சேயினால் கொல்லப்பட்டார் என்பதும், ஜாதிவெறியை அடக்க காந்தியார் முயற்சி எடுத்ததுதான் காந்தியாரின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்தது என்பதும் உலகம் அறிந்த உண்மை.”….
“காந்தியாரின் உயிரையே வாங்கிவிட்ட ஜாதிவெறியை அடக்குவதற்கு நாங்கள் சட்டம் கொண்டுவந்து இருக்கிறோம் என்றால் நான் அதைப் பாராட்டுவேன்”.
“காந்தியார் ஜாதிவெறியனால் கொல்லப்பட்ட நேரத்திலே, காந்தியார் இருந்த இந்த நாட்டுக்கு காந்தி நாடு என்றும், இந்நாட்டிலுள்ள மதத்துக்கு காந்தி மதம் என்றும் பெயர் வைக்க வேண்டுமென வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார்தான் என்பதை அந்தப் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் மறந்திருக்கலாம்.”
“ஆனால் நாடு மறந்திருக்காது. நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.”
“காந்தி பெரியாரின் மாளிகையில் தங்கியிருந்திருக்கிறார். காந்தியின் நினை வாகத் தன் தமக்கையின் பெண்ணுக்குக் காந்தி என்றே பெயர் வைத்திருக்கிறார்.”
“பெரியார் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்கிறார். பெரியார் அவர்களை நீங்கள் பித்தம் பிடித்தவர் என்று கருதலாமே தவிர உலகத்தில் பெரும்பகுதியினர் அவ்வாறு கருதவில்லை.”
“மூன்று ஆண்டுகள் சட்டத்தை மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க, அரசியலமைப்புச் சட்டத்தைக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.”
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கர்த்தாவான காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்.”
“இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு கோளாறுகள் இருக்கின்றன. இது எரிக்கத்தக்கது என்று.”
“நீர்தானே இந்தச் சட்டத்தைச் செய்தவர்” என்று சிலர் அவரைக் கேட்க, “நீங்கள் சொல்லிச் செய்யப்பட்டதே தவிர ஏற்றுக்கொள்ள முடியாத, மனதிற்கு ஒவ்வாத பல கருத்துக்கள் இருக்கின்றன” என்று சொன்னார்கள்.
“இந்த 7 ஆண்டுகளில் அரசியல் சட்டத்தில் 10 தடவைகள் திருத்தங்கள் கொடுத்திருக்கிறார்கள்.”
“திருத்தங்கள் கொடுப்பது என்பது நாகரிகமான முறையில் சட்டத்தைக் கொளுத்துவது ஆகும். திருத்துகிறோம் என்ற பெயரால் 10 தடவை கொளுத்தியிருக்கிறீர்கள்.”
இதுபோன்ற பல அடுக்கான கேள்விகளைக் கேட்டுப் பெரியாரின் போராட்டத்திற்கான சட்டத் திருத்தத்தை எதிர்ப்புச் செய்து சட்டமன்றத்தில் பதிவுசெய்து இருக்கிறார் அறிஞர் அண்ணா.
சட்ட நுணுக்கங்கள், தர்க்கம், மனித உரிமைகள் போன்ற உயரிய கருத்துகளின் களஞ்சியமாக இந்த உரை அமைந்துள்ளது.
இந்த உரையாடலின்போது சட்டம் பயின்ற அமைச்சர் சி. சுப்பரமணியம், அமைச்சர் பக்தவத்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திருவாளர். கல்யாணசுந்தரம் ஆகியோர் பெரியாருக்கு, இச்சட்டத்தின் வழியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
இறுதியாக இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அறிஞர் அண்ணாவைப் பார்த்து, ‘‘தந்தையிடம் சென்று மகன் போராட்டத்தை நிறுத்த வேண்டுகோள் வைக்கலாம்’’ என்று உள்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார்.
“சட்டத்தை நிறைவேற்றிவிட்டு அவரைப் போய்ச் சந்திப்பது தூது ஆகாது”…….
“பத்திரிகை வாயிலாக அவரே பார்த்துக்கொள்வார். உண்மையில் நான் அவரைப் போய் இந்த காரணமாகச் சந்திப்பதனால் லாபம் ஏற்படும் என்றால், திரும்பவும் நாங்கள் ஒட்டிக்கொள்ள முடியும் என்றால், மகன் தந்தை யிடத்தில் அவரிடத்தில் சென்று ஒட்டிக் கொள்வது குற்றங்களில் ஒன்றல்ல; குணங்களில் ஒன்று என்பதை நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.”
கொள்கைக் குன்றம் அறிஞர் அண்ணா குணக்குன்றமாக உயர்ந்தார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 1967இல் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு தந்தை பெரியாரைச் சந்திக்கிறார்.
‘அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை’ என்கிறார்.
‘நான் கண்டுகொண்ட ஒரே தலைவர் பெரியார்’ என்று பெரியார் முன்னிலையில் மேடையில் முழக்கமிட்டார்.
அந்த முழக்கம்தான் ஆசிரியர் வீரமணியார் தலைமை யிலும் திராவிடர் கழகமும், திராவிடச் செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இணைந்து செயல்படுகின்றன.
திராவிட இயக்கத்தின் மானுட மேம்பாட்டுப் பணிகள் தொய்வில்லாமல் தொடர்கிறது.
சமூகநீதி சார்ந்த சமத்துவம் வெல்லும்!
இதை 1950களிலேயே உணர்ந்த நூற்றாண்டு பிறந்தநாள் காணும் கவிஞர் கண்ணதாசன் சொன்ன முடிவு!
என்ன அந்த முடிவு!
நம் அண்ணா; தளபதியார்! நலிந்த போன நாட்டிற்கு வலுவூட்ட வந்த வீரன்!….
இம்மாநிலத்திற்கு எழுச்சியூட்டி ஈடற்ற வல்லாட்சி ஆக்க வல்லோன்!
எம் மேதை; உடன்பிறக்கவில்லையேனும் “எம் அண்ணா” என்பர் நற்றிருவிடத்தார்!
வீரர் பலர் சரித்திரத்தில் உண்டு; ஆனால் விவேகமுடன் விதரணையும் சேர்த்து வாய்த்த தீரர் இவர்போல ஒரு செம்மல் இந்தத் திருநாட்டில் உலகத்தின் மறுபாகத்தில் யாருமில்லை! உண்டென்று சொல்வார் உண்டேல் அறைகூவிஅழைக்கின்றேன் எடுத்துச் சொல்வீர்!
சேரவரும் பாசத்தால் சொன்னேனில்லை! சிந்தித்துச் சிந்தித்து முடிவே சொன்னேன்!
