சுய சிந்தனைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் – தந்தை பெரியார்

இணையவழி கையெழுத்து இயக்கம்

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள். பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத – கடவுள் செயலை நம்பாத செயலேயாகும்.

(குடிஅரசு -7.9.1930)

மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்துகொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் – அதாவது ஓரளவுக்கு நாத்திகமான காரியமேயாகும்.

(குடிஅரசு 21.5.1949)

  1. வழக்குகள் குறையும்படியான அளவு சட்ட முறைகளைத் திருத்தியமைக்க வேண்டும்.
  2. சொத்து பற்றிய உரிமையைப் பிள்ளைக்கு; பிள்ளையில்லாவிட்டால் சர்க்காருக்கு என்று வாரிசு உரிமையை ஆக்கவேண்டும்.
  3. சொத்துக்களுக்கு ஆதாரம், கிரயப் பத்திரம், வாரிசு… ஆதாரத்தைத் தவிர வேறொன்றும் இருக்கவிடக் கூடாது.
  4. கொடுக்கல் வாங்கல்களுக்கு எழுத்து ஆதாரம் – தவிர வேறொன்றையும் இருக்க விடக்கூடாது.
  5. நாணயங்களுக்கு உள்ள ஆதாரமே. சொத்துக்களுக்கும், கொடுக்கல் வாங்கல்களுக்கும் இருக்கவேண்டும்.
  6. வாரிசு உரிமைக்கும் சொத்துரிமைக்கும், கொடுக்கல் வாங்கல்களுக்கும், டிக்கிரியை நிறைவேற்றித் தருகிற உரிமைபோல் ஆதாரங்களின்படி உரிமை நிறைவேற்றப்படுவது தவிர ஜட்ஜுமெண்ட் தீர்ப்புப் பெறுவது என்கின்ற தொல்லையே இருக்க வைக்கக் கூடாது

(விடுதலை 25-12-1964)

நான் பாவம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆக வேண்டுமென்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்வதானால் மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன ?

(விடுதலை – 20.11.1953)

பகுத்தறிவாளர்கள் ஒரு குடும்பம் போன்று பழக வேண்டும். சுய நல உணர்ச்சி அற்றவர்களாகக் குற்றம் அற்றவர்களாகக் கூடுமானவரைக்கும் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மக்களிடம் உண்மையாகவே அன்பு காட்ட வேண்டும். பகுத்தறிவு என்பது ஒரு பெரிய உன்னதமான உயரிய தத்துவமாகும்.

(விடுதலை 30.1.1973)

இந்தியாவின் பொருளாதாரத் துறை சீர்படுவதற்கு முதலாவது வருணாசிரம முறை ஒழிய வேண்டும். இரண்டாவது மதச் சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும். மூன்றாவது, கோயில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும்..

பிறகு அரசன், சமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

(குடிஅரசு 13.9.1931)

வர்ண பேதம் ஒழிந்த, ஜாதி முறை, வகுப்பு முறை ஒழிந்த, மதப் பிரிவினைத் தத்துவம் ஒழிந்த எந்தச் சமுதாயமும் – அது தனித்திருந்தாலும், ஒன்றியிருந்தாலும் அதைத் திராவிடச் சமுதாயம் என்று ஒப்புக் கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.

(விடுதலை -17.11.1947)

சமுதாயத்தில் வர்ண பேதப் பாகுபாடுகள் இருக்கக் கூடாது; தனது எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்கு மத்திய ஆட்சி என்று ஒரு அன்னிய ஆதிக்க மெதுவும் இருக்கக்கூடாது என்ற கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் எந்தப் பிரதேசத்தையும் அது எவ்வளவு குறுகியதாயிருந்தாலும் சரியே, அல்லது எவ்வளவு பெரும் பகுதியாயிருந்தாலும் சரியே. அதையும் திராவிட நாடு என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை.

(விடுதலை 17.11.1947)

திராவிடன் இழிவு தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு, ஆரியத்திற்கு – ஆரிய மதம், கலை, ஆச்சாரம், அனுட்டானங்களுக்கு – அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லமுடியும்?

(குடிஅரசு 14-7-1945)

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத் தையும் பொறுத்துக்கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம் போல் – கோடாலி கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் – தானாகவே விழுந்துவிடும்: –

(குடிஅரசு 1.9.1945)

சமுதாயத் தொண்டு செய்கின்றவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது. அரசியல் மூலம் இந்தக் காரியம் செய்யவும் முடியாது. இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்கின்ற வர்களுக்கு ஓட்டுக் கிடைக்காது. சமுதாயத் தொண்டு ரண சிகிச்சை போன்றது; வது அரசியல் தொண்டு அப்படிப் பட்டதல்ல.

(விடுதலை 7.10.1964)

 வாழ வேண்டி வந்தால் வாழ்ந்து கொள். ஆனால் நான் பொதுத் தொண்டன், தியாகி; கஷ்ட நஷ்டப்பட்டவன் என்று சொல்லாதே! சொல்லுவதற்கு வெட்கப்படு!

(விடுதலை – 8.10.1962)

முனிசிபாலிட்டிகாரர்களையோயாகட்டும், அரசு செய்பவர்களேயாகட்டும் நான் வேண்டிக் கொள்வது மனிதனுக்கு அறிவு – துணிவு – பகுத்தறிவு ஏற்படும் படியான பணியினை – தொண்டினைச் செய்யுங்கள் என்பதுதான். இல்லா விட்டால் இன்னும் கொஞ்சம் நாளிலே மனிதன் முன்னாலே கை இருப்பது சோறு தின்பதற்கு மற்ற காரியங்களுக்கு என்பதை மறந்து அதையும் காலாக நினைத்து நான்கு காலிலே நடக்க ஆரம்பித்து விடுவான்,

(விடுதலை – 2.1.1968)

நாள் முழுதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப் பார் என்றால், நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள்?

(குடிஅரசு – 30.10.1932)

தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கு கொடுக்கும் ஏற்பாடு சட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிலாளர் களுக்கும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். ஒவ்வொரு துறையையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும். அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது என்று சொன்னால், அதன் லாபம் எல்லாம் மக்களுக்குத்தானே சேருகிறது?

(விடுதலை – 27.5.1973)

இந்தியா சாதிகள் காட்சிச் சாலையாக, மதக் கண்காட்சிச் சாலையாக, பாஷைகள் கண்காட்சிச் சாலையாக, சாமிகள் காட்சிச் சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

(குடிஅரசு -1.6.1930)

ஒரு நாடு என்று சொன்னால் எந்தவிதமாகவும் மற்றவர்களின் ஆதிக்கம், தலையீடு, அதிகாரம் இல்லாமல் நாட்டு ஆட்சியிலும், அதிகாரத்திலும் அனுபவிப்பிலும் சகல உரிமையுள்ளதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நாட்டைத்தான் விடுதலை பெற்ற நாடு என்பதாகக் கொள்ள முடியுமே தவிர, எல்லா அதிகாரங்களும், உரிமையும் பிறர் வசமிருக்கக்கூடியதொரு நாட்டைச் சுதந்திர நாடாகக் கருத முடியுமா?

(விடுதலை – 20.3.1954)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *