தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவகத்தில் வரவேற்கப்படுகின்றன.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள திருப்பூர் மற்றும்
செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர, இதர மாவட்டங்களில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் கீழ்செயல்படும் அனைத்து
சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த
முறையில் நிரப்பப்படவுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் செவிலியர் பட்டய படிப்பு (ஜிஎன்எம்) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (பி.எஸ்சி நர்சிங்) பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயதுவரம்பு 25.9.2026-இன்படி 50க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் வழங்கப்படும்.
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: சென்னை – 512, சேலம் – ஆத்தூர் – 231, திருச்சி – 205, திருவண்ணாமலை – செய்யாறு – 197, கோவை – 193, திருவள்ளூர் – பூந்தமல்லி – 178, கடலூர் – 172, ஈரோடு – 169, தஞ்சாவூர் – 166, திண்டுக்கல் – பழனி – 161, புதுக்கோட்டை – அறந்தாங்கி- 158, திருவாரூர் – 156, தருமபுரி – 152, மதுரை – 147, விருதுநகர் – சிவகாசி – 129, நாமக்கல் – 128, தூத்துக்குடி – கோவில்பட்டி – 126, சிவகங்கை – 120, தேனி – 119, கிருஷ்ணகிரி – 111, நீலகிரி – 111, திருநெல்வேலி – 101, கரூர்- 99, விழுப்புரம் – 94, தென்காசி – 76, வேலூர் – 75, கள்ளக்குறிச்சி – 74, நாகப்பட்டினம் – 70, ராமநாதபுரம் – 66, பரமக்குடி – 65, திருப்பத்தூர் – 65, ராணிப்பேட்டை – 64, அரியலூர் – 61, காஞ்சிபுரம் – 48, பெரம்பலூர் – 45, மயிலாடுதுறை – 41, நாகர்கோவில் – 39.
தகுதியானோர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப படிவுங்களை தேசிய நலவாழ்வு இயக்கத்தின் https://nhm.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும், அந்தந்த மாவட்ட சுகாதார
அலுவலருக்கு செப்.25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
