வாசிப்போம், யோசிப்போம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புத்தகம் என்பது சிந்தனையாளனின் சிறந்த ஆயுதம். யுகத்தின் விடியலுக்காக படைப்பாளன் கொட்டும் பேரிகை முழக்கம் அவன் படைக்கும் புத்தகமாகும். புத்தகங்களை மரங்களின் பரிணாம வளர்ச்சியாகக் காண்பது அறிவியல் பார்வை. ஓரிடத்தின் நூற்றாண்டு உறக்கத்தைக் கலைக்கும் கதிரவன் புத்தகமாக மட்டுமே இருக்க முடியும். புத்தக வாசிப்பு என்பது சுவாசிப்பதற்கு நிகரானது.

மானம் காப்பது நூல், மனித இனத்தின் மாண்பைக் காப்பது நூல். புத்தகம் என்பது எழுத்து வடிவிலான சாசனம். அது கண்களால் ஊடுருவப்பட்டு சிந்தனையைத் தொடும்போது ஆசிரியர் என்ற சிறப்பு நிலையைப் பெறுகிறது.

புத்தகக் கண்காட்சி என்னும் தொடரைக் காணும்போது நகைப்புதான் எழுகிறது. கண்களால் கடந்து செல்ல அது என்ன வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியா? நூலக அரங்குகளில் வாசிக்கக் கிடைக்காத புத்தகம் ஒன்று நம் கைகளில் தவழும்பொழுது நம் கண்களில் மய்யம் கொள்ளும் பரவசத்தை எவ்வாறு அளவிட முடியும்? அரங்கின் வாசலில் நின்றபடி நூலின் உள்ளடக்கத்தை இரண்டு பக்க வாசிப்பில் அறிந்து கொண்டு விலை கொடுத்து நூலை வாங்கிச் செல்வோரை நாம் காண முடியும்.

தேர்ந்த நூல் வாசிப்பு ஒரு மனிதனின் வார்த்தைகளைப் பண்படுத்துகிறது. வார்த்தைகளுக்கு வரப்பைக்கட்டும் ஆற்றலை நூல் வாசிப்பு தருகிறது. பகுத்து ஆராய்தல், ஒரு பக்கச் சார்பின்மை ஆகியவை நூல் வாசிப்பால் நமக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த பண்புகள் ஆகும்.

களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி கண்ட மங்கோலிய இனத்தின் பேரரசன் செங்கிஸ்கான் குறித்தும், மாவீரன் அசோகன் கலிங்கப் போரின் விளைவால் மனம் பதைத்து துறவியாய் மாறிய வரலாறு குறித்தும், மேலைநாட்டு வழக்கின்படி உடை உடுத்திய காந்தியடிகளின் வழக்கத்தை மாற்றி அமைத்த ஜான் ரஸ்கினின் நூல் குறித்தும், மும்பைக்கும் தானேக்கும் இடையே இருப்புப்பாதை உருவாக்கப்பட்டது போது ஏற்பட்ட தொழிலாளர்களின் உயிரிழப்பு குறித்தும், வைகை அணை கட்டப்பட்ட போது வசிப்பிடம் இழந்து, கட்டிய வீடுகளையும், கன்றுகளையும் அங்கேயே விட்டு கதறி அழுதவண்ணம் இடப்பெயர்வு மேற்கொண்ட மக்களின் சோகம் குறித்தும் நாம் நூல்களின் வழியாகத் தானே அறிந்து கொள்ள முடிகிறது. புத்தகங்கள் மட்டுமே நீர்ப்பரப்பில் நிகழ்ந்த அனைத்திற்கும் நிகழ்கால சாட்சிகளாய் விளங்குகின்றன. சிறந்த நூல் வாசிப்பு பேச்சாளரின் ஆற்றொழுக்கான பேச்சிற்கு அடிப்படையாகிறது.

உமி, தவிடு, கல் நீக்கி அரிசியினைக் களைவது போல் பொய்ப் புனைவு களைந்து நூலின் உள்ளடக்கத்தை – உண்மைப் பொருளைக் கண்டறியும் ஆற்றலை பரந்துபட்ட நூல் வாசிப்பின் மூலம் வாசகன் பெறுகிறான். சிந்தனையாளர்களையும், வாசகர்களையும் சேர்த்து வைக்கும் பாலமாக நூல்கள் என்றும் இருந்து கொண்டே இருக்கின்றன. மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் என்ற இருவரது உறவு நூல்வழி உறவே ஆகும்.

நூல் வாசிப்பின் மூலம் மனித இனம் மாண்பைப் பெறுகிறது.

யோசிப்போம், வாசிப்போம்.

– க.மோகனகிருஷ்ணன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *