ஹோஸ்பேட். செப்.15- விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கருநாடக மாநிலம் ஹோஸ்பேட் பகுதியில் பெரிய விநாயகர் சிலையை மண்டலுக்கு கொண்டு செல்லும் வழியில் பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து எப்படி நடந்தது?
விநாயகர் சதுர்த்திக்காக பெரிய விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது, பக்தர்கள் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு சென்றனர். அப்போது விநாயகர் சிலைக்கு அருகில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பற்றியது. இதனை அடுத்து அந்தப் பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த திடீர் வெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்புலன்ஸ் தாமதம் – இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு
விபத்து நடந்த உடனேயே முதலுதவி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனை அடுத்து தீக்காயம் ஏற்பட்டு உடல் வெந்த நிலையில் இருந்தவர்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டம் பாட்டத்தோடு சென்ற சிலை – கருகிப்போன நிலையில் சாலையோரம் வீசல்
ஆட்டம் பாட்டத்தோடு அலங்கரித்துச் சென்ற விநாயகர் சிலை, பட்டாசு வெடிப்பில் கருகிப்போனது. இதனை அடுத்து அந்த சிலையை சாலை ஓரத்தில் தூக்கிவீசிவிட்டு, காயமடைந்த வர்களை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். கொண்டாட்டம் கொண்டாட்டமாக தொடங்கி, துயரமாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடவுள் காப்பாற்றவில்லை
விநாயகர் சிலையை பக்தி யுடன் ஊர்வலமாக கொண்டு சென்ற வர்களை, கடவுள் காப்பாற்றவில்லை என்பது மட்டுமல்ல, கடவுளைக் காப்பாற்றவும் முடியவில்லை. பட்டாசு வெடிப்பில் சிலை கருகிய நிலையில், காயமடைந்த வர்களை மீட்கப் போராடிய நிலையில், “கடவுள் இவர்களைக் கைவிட்டார், இவர்களும் கடவுளைக் கைவிட்டார்கள்” என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொண்டாட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பட்டாசுகளை மொத்தமாக வைத்திருந்தது, ஆம்புலன்ஸ் சேவை தாமதமானது, கூட்ட நெரிசலில் மீட்புப் பணிகள் தடைபட்டது – இவை அனைத்தும் விபத்து ஏற்பட்டால் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் உள்ள குறைகளை வெளிக்காட்டுகின்றன.
