உயர்நீதிமன்றங்களில் 77 விழுக்காடு நீதிபதிகள் உயர்ஜாதிக்காரர்களே!
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் வாய்ப்பு அளித்தால்தான் உண்மையான நீதி கிடைக்கும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் வாய்ப்பு அளித்தால்தான் உண்மையான நீதி கிடைக்கும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்க ளிலும் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதி வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தீபக் குப்தா இந்த வகையில் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானதும், அவசி யமானதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- உயர்நீதிமன்றங்களில் 77 விழுக்காடு நீதிபதிகள் உயர்ஜாதிக்காரர்களே! சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் வாய்ப்பு அளித்தால்தான் உண்மையான நீதி கிடைக்கும்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- நீதிபதிகள் மத்தியிலும் விருப்பு – வெறுப்புகள் உண்டு
- கொலீஜியம் முறை தோல்வி அடைந்துவிட்டது!
- நீதித் துறையின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது!
- ஜஸ்டிஸ் தீபக் குப்தா குறிப்பிடும் சமூக அநீதி!
- அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் 77 விழுக்காட்டினர் உயர்ஜாதிக் காரர்களே!
- நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்!
அவரது அறிக்கை வருமாறு:
இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியும், திரிபுரா, சட்டீஸ்கர் மாநில உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவருமான ஜஸ்டிஸ் தீபக் குப்தா அவர்கள், அண்மையில் ‘தி டிரிபியூன்’ இதழில் எழுதியுள்ள ‘சுதந்திரத்தின் உண்மைப் பொருள்’ என்ற கட்டுரையில், நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், நீதித் துறையில் நிலவும் முரண்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ள கருத்துகள், நாட்டில் நீதியின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று விரும்பும் எவராலும் விவாதிக்கப்பட வேண்டியவை ஆகும்.
நீதிபதிகள் மத்தியிலும்
விருப்பு – வெறுப்புகள் உண்டு
விருப்பு – வெறுப்புகள் உண்டு
விசாரணைக் கைதிகளாகவே 74% பேர் சிறை வைக்கப்பட்டிருப்பது, சட்ட விதிகளுக்கு மாறாக பிணை வழங்குவதில் காட்டப்படும் கடுமை, தனிநபர் சுதந்திரத்திற்கு உள்ள ஆபத்து, வழக்குரைஞர் சமூகத்தின் சுதந்திரம், மாணவர்களின் போராடும் உரிமை, பெரும்பான்மைவாதத்தால் ஜனநாயகத்துக்கு ஏற்படும் ஆபத்து, ‘கங்கை ஆற்றில் கோழிக் கறி சாப்பிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதக்கணக்கில் மறுக்கப்பட்ட பிணை, அதே கங்கை யில் மது அருந்தியவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது எல்லாம் சரியானதுதானா? மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்க மறுக்கும் போக்கு போன்ற வற்றையெல்லாம் சுட்டிக் காட்டியுள்ளார்.
ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்துவிட்டு, இனி இப்படிப்பட்ட வழிபாட்டுத் தல வழக்குகளை எடுக்கக் கூடாது என்று சொன்ன நீதிபதியே, ஞானவாபி பிரச்சினையை, ஆய்வுக்காக மட்டும் என்று சொல்லி வழக்காக்கிய முரண்பாட்டையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.
இவற்றையெல்லாம் நீதித் துறையின் பிரச்சினைகள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடாமல், இதற்கான காரணம் என்ன என்பதை மிகத் தெளி வாக, துணிச்சலாக அவர் சுட்டிக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது. இதன் ‘வேர்’ எங்கே இருக்கிறது என்பதை அவர் வெளிப்படையாக எடுத்துக் காட்டி யுள்ளார். நீதிபதிகள் பொதுவானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், அப்படியே நம்புவதற்கு நீதித் துறை நம்மை பழக்கப்படுத்தினாலும் கூட, நீதிபதிகள் என்போர் மனிதர்களே; அவர்களும் பல்வேறு சமூகச் சூழல்களில் இருந்து வந்தவர்களே; அவர்களுக்கும் பல்வேறு கருத்துநிலைகள், கொள்கைகள், உள்ளார்ந்த விருப்பு வெறுப்புகள், சார்பு நிலைகள் இருக்கக் கூடும் என்பதை எவரே மறுக்க முடியும்?
இது குறித்து ஜஸ்டிஸ் தீபக் குப்தா கூறியுள்ள கருத்துகளை அப்படியே தருகிறோம்.
கொலீஜியம் முறை
தோல்வி அடைந்துவிட்டது!
தோல்வி அடைந்துவிட்டது!
“உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமிக்கப்படும் முறையில்தான் இந்தப் பிரச்சினையின் வேர் உள்ளது. ‘கொலீஜியம்’ (நீதிபதி கள் நியமனத்திற்கான குழு) முறை தோல்வி யடைந்து விட்டது. அது முற்றிலும் ஒளிவுமறைவு கொண்டதாக மாறிவிட்டது. எந்தக் காரணங்களையும் விளக்காமலே கொலீஜியம் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தாலும், அவர்கள் கொலீஜியத்தில் அவர்கள் இடம்பெறாதவர்களானால், கொலீஜியம் என்ன அளவுகோல்களைப் பின்பற்றுகிறது என்பது பற்றித் தெரிவதில்லை.
கடந்த சில மாதங்களில் உச்ச நீதிமன்றத்திற்குப் பல நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அனைவரும் இல்லையென்றாலும், ஏறக்குறைய அனைவரும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களே. பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள். மற்ற சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களிடம் திறமை இல்லை என்று அர்த்தமல்ல. நாட்டின் முதல் 50 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், மற்ற மதங்கள்யும், சமூகங்களையும் சேர்ந்த பலர் உள்ளனர்; அவர்களில் சிலர் பணி மூப்பில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். அவர்கள் களங்கமற்ற நேர்மையும் திறமையும் கொண்டவர்கள்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மீது நான் குறை கூறவில்லை; ஆனால், உச்ச நீதிமன்றம் என்பது உண்மையாகவே நாட்டின் உச்ச நீதிமன்றமாகத் திகழ வேண்டுமானால், அதில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும்.
நீதித் துறையின் மீது
நம்பிக்கை குறைந்து வருகிறது!
நம்பிக்கை குறைந்து வருகிறது!
வழக்குகளுக்குத் தீர்வு காண அதிக செலவும் நீண்ட காலமும் தேவைப்பட்ட போதிலும், இந்நாட்டு மக்கள் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ளனர். கெடுவாய்ப்பாக, அந்த நம்பிக்கையும் பற்றும் இப்போது குறைந்து வருகின்றது. சமூக ஊடகங்களின் இடைவிடாத கண்காணிப்புக்கு நீதிபதிகள் உட்படுத்தப்படுகின்றனர். இவை அனைத்தையும் மீறி, இன்றும் கூட, சட்டமன்றத்தையும் (Legislature) நிர்வாகத் துறையை (Administrative) விட நீதித்துறையின் (Judiciary) மீதே மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். பெரும்பான்மையான நீதிபதிகள் நேர்மையானவர்களாகவே உள்ளனர்; ஆனால், விதி விலக்காகச் செயல்படும் (களங்கத்தை ஏற்படுத்தும்) நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஏன் நிகழ்கிறது என்பது குறித்து மிக உயர்ந்த நிலையில் உள்ள நீதிபதிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இழந்த பெருமையை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதைச் செய்ய முடியும்; கட்டாயமாகவும் செய்ய வேண்டும். ஏனெனில், நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அந்த நீதித்துறையே பயனற்றதாகிவிடும். அது ஜனநாயக இந்தியாவின் அழிவுக்கே வழிவகுக்கும். ஜனநாயகம் இல்லாத சூழலில், மக்கள் ஒருபோதும் சுதந்திரமாகவோ அல்லது தன்னாட்சியுடனோ இருக்க முடியாது.’’
ஜஸ்டிஸ் தீபக் குப்தா குறிப்பிடும்
சமூக அநீதி!
சமூக அநீதி!
நீதித் துறையில் நிலவும் சமூக அநீதியையும், அதன் விளைவுகளையும் பட்டவர்த்தனமாக ஜஸ்டிஸ் தீபக் குப்தா அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். வெகு நீண்டகாலமாக இதனைத் தான் நாம் எடுத்துக் காட்டுகிறோம். நீதித் துறையிலும் சமூகநீதி வேண்டும் என்பதை நாம் தொடக்கத்திலேயே வற்புறுத்திப் போராடி வருவதன் நியாயம் இப்போது புலப்படுகிறதா? வலியுறுத்துகிறோம். நீதித் துறையில் நீதிபதிகள் நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும், மதத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிறோம்.
‘கொலீஜியம்’ என்ற பெயரில் ஒரு சில நீதிபதிகளே எடுக்கும் முடிவினையும், அதன் வெளிப்படைத் தன்மையையும் ஓய்வுபெற்ற நீதிபதி மட்டுமல்ல, தற்போதுள்ள நீதிபதிகளே விமர்சிக்கின்றனர். எந்த அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதில் ஏன் ஒளிவு மறைவு? (தற்போதுள்ள Sitting Judge) உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 1, 2026 அன்று, நீதித்துறை நியமனங்களில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஒரு குறை பாடு என்றும், இது அரசியலமைப்புக்கு முரணான, இழிவான கருத்துக்களைக் கூறும் நபர்கள் நீதித்துறைக்குள் நுழைய அனுமதிக்கிறது என்றும் எடுத்துக் காட்டி னாரே! அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர், தான் நீதிபதியாகப் பணியாற்றியபோது ஆற்றிய உரையில், ஒரு சிறுபான்மை சமூ கத்தை ‘எறும்புகள்’ என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுவதை எடுத்துக்காட்டி தானே நீதிபதி புயான் இந்தக் கருத்தைக் கூறினார்.
முக்கியப் பொறுப்புக்கு வர வாய்ப்புள்ள சிறந்த நீதி பதிகளைத் திடீரென வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவது ஏன் என்று கடந்த ஆண்டே உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் நாகரத்னா அம்மா அவர்கள் கேள்வி எழுப்பினாரே!
தற்போதைய நீதி மன்றங்களின் நிலைமை என்ன?
அனைத்து உயர்நீதி மன்றங்களிலும்
77 விழுக்காட்டினர் உயர்ஜாதிக் காரர்களே!
77 விழுக்காட்டினர் உயர்ஜாதிக் காரர்களே!
2018 முதல் 2025 வரை நியமிக்கப்பட்ட அனைத்து உயர் நீதி மன்ற நீதிபதிகளில் 77 சதவீதத்திற்கும் அதிக மானோர் (715 இல் 551 பேர்) உயர் ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் என்று சட்ட மற்றும் நீதி அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் அளித்தாரே! உயர்நீதிமன்றங்களில் சுமார் 3 சதவீதம் பேர் பட்டியல் ஜாதி (SC) பின்னணி யிலிருந்தும், 2 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவிலிருந்தும், 12 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவிலிருந்தும், 5 சதவீதம் பேர் “சிறுபான்மையினர்” பிரிவிலிருந்தும் வந்துள்ளனர். அதிலும் பெரும்பான்மையான உயர்ஜாதி யினரல்லாத நீதிபதிகள் தென் மாநிலங்களில் தானே உள்ளனர். இதுதான் சமூக நீதியா?
மாவட்ட நீதிமன்றங்களிலும் 70 சதவிகிதத்துக்கு அதிகமாக உயர்ஜாதியினர் அல்லாத நீதிபதிகள் இடம்பெற்றிருப்பது தமிழ்நாடு மட்டும்தான். காரணம், சமூகநீதி, பெரியார் மண், போராட்ட மண் என்பதே! கருநாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தான். மற்ற மாநிலங்களில் இந்த அளவு 35 முதல் 40 சதவிகிதம் தானே!
உச்சநீதிமன்றத்தில், சமூக நீதி எந்த அளவில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரி விக்க ஒன்றிய அரசு மறுக்கிறதே! ஓரிரண்டு பிற்படுத்தப்பட்டோர், ஓரிரண்டு பட்டியல் ஜாதியினர் தவிர, மற்றவர்கள் உயர்ஜாதியினர் தானே, அதிலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள் தானே! பெண் நீதிபதிகளும் உயர்ஜாதியினர்தானே!
நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்!
இது சமூக அநீதி அல்லவா? பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களில் நீதிபதி களாவதற்குத் திறமை படைத்தவர்கள் இல்லையா? பிறகு அவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? இதனால் தானே, நீதித் துறையிலும், குறிப்பாக உயர்நீதித் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும், அதுதான் எல்லா இடங்களிலும் சமூகநீதியைக் கொண்டு வரும் என்பதையும் நாம் வலியுறுத்தி வருகிறோம், குரல் கொடுக்கிறோம், போராடுகிறோம்.
நமது குரலின் நியாயத்தை, இப்போது நீதித் துறையில் இருப்போரும் வெளிப்படையாக எதிரொலிக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதை விரைவுபடுத்துவது அவசியம்! அதற்கான களத்தை நாம் அமைப்போம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.9.2026
