ஈரோடு, செப்.14 தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாடு முழுவதும் பேரணிகளும், பொதுக் கூட்டங்களும், கொண்டாட்டங்களும் நடத்தப் படவுள்ளன. இந்நிலையில், தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாநகரில், செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாளன்று, காலையில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு, அங்கிருந்து தந்தை பெரியார் இல்லம் வரை பேரணியாகச் செல்ல அனுமதி கோரி காவல்துறைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்று மாலை வேறு பாதையில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலம் இருப்பதால், காலையில் நடைபெறவிருக்கும் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறையின் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகத் தலைமைக் கழகத்துக்கு இத்தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அனுமதி மறுப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுமாறு கழக வழக்குரைஞரணிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆணையிட்டார். இதனிடையில் ஊடகங்களில் இச் செய்தி வெளிவந்தது.
இதே போல குடியாத்தம் நகரில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் பேரணிக்கும், பிள்ளையார் ஊர்வலத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்ட செய்தி வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்குத் த.வெ.க. அரசில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
கண்டனங்கள் குவியத் தொடங்கியதையடுத்து, ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதாகக் காவல்துறை அறிவித்துள்ளது. இதே போல குடியாத்தத்திலும் அண்ணா பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
